இந்தியாவின் எல்லைப் பகுதி வரலாறு எழுத பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்

0

இந்தியாவின் எல்லைப் பகுதி வரலாறு எழுத பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்

நாட்டின் எல்லைப் பகுதி வரலாறு எழுதுவதற்கான முன்முயற்சிப் பணிக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.  வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்தியக் கவுன்சிலின் முக்கிய ஆளுமைகள், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் அலுவலர்கள் தொல்பொருள் பாதுகாப்பு அமைப்பின் தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களின் கூட்டத்தை, புதுதில்லியில் செப்டம்பர் 17 அன்று பாதுகாப்பு அமைச்சர் நடத்தினார்.  எல்லை உருவாக்கத்தைக் கண்டறிதல், எல்லைகளின் உருவாக்கம் நீக்கம், மாற்றம், பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பு, எல்லைப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் இனம், கலாச்சாரம், சமூக- பொருளாதார அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியதாக இந்தப் பணி இருக்கும் என்று  கூறப்படுகிறது. இரண்டாண்டுகளுக்குள் இந்தத் திட்டம் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லைகளைப் பற்றி பொதுமக்கள், குறிப்பாக அதிகாரிகள் நன்கு அறிந்து கொள்வதற்கு இது உதவும் என்பதை வலியுறுத்திய  திரு ராஜ்நாத் சிங், இதனை எழுதுவது மிகவும் முக்கியமானது என்றார்.  பல்வேறு ஆலோசனைகளை வரவேற்ற பாதுகாப்பு அமைச்சர்,  ஆதார தகவல்கள், விரிவான வரையறைகள், எழுதுமுறை, இந்தத் திட்டத்தை விரைந்து முடிப்பதற்கு தேவையான செயல்திட்டம் குறித்து நிபுணர்களுடன் ஆலோசிக்குமாறு வழிகாட்டினார்.

தேசத்தின் எல்லைகள் குறித்து பொது மக்களுக்கும், எல்லைப் பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தகைய திட்டம் செயல்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.