ஆலங்குடி குருபகவான் கோயிலில் இன்று குருபெயர்ச்சி

0

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அருள்மிகு குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு செவ்வாய்க்கிழமை (ஆக.2) காலை 9.30 மணியளவில் பெயர்ச்சியடைகிறார். இதை முன்னிட்டு நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இக்கோயிலில் வருடம் தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறும்.

இவ்வாண்டும் குருபகவான் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பெயர்ச்சியடைகிறார்.

இதை முன்னிட்டு ஆலங்குடி கோயிலில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு முதல்கால யாக சாலை பூஜைகள் தொடங்கி இரவு 8.30 மணிக்கு பூர்ணாஹுதி நடைபெற்றது. அதிகாலை 3.30 மணிக்கு இரண்டாம்கால யாகபூஜைகள் தொடங்கி நடந்தது. தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என அரசுத் தரப்பில் எதிர்பார்க்கப்படுவதால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவின் பேரில் அரசின் பல்வேறு துறைகளும் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்துள்ளன.

கோயில் வளாகப் பகுதிகளில் 42 கண்காணிப்பு கேமராக்களைக் கொண்டு கண்காணிப்புப் பணிகள் நடைபெருகின்றன.

கோயில் விழா ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையரும் கோயில் செயல் அலுவலருமான பா.கலைச்செல்வி, அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் தக்கார் செ.சிவராம்குமார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

பக்தர்களின் நலன் கருதி அரசு போக்குவரத்துக்கழகம் பல்வேறு ஊர்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.

பாதுகாப்புப் பணியில் 360 காவல்துறையினர்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள குருபெயர்ச்சி விழாவில் 360 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்துள்ளார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குருபெயர்ச்சியையொட்டி ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், நான்கு டிஎஸ்பிக்கள் அடங்கிய 360 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் குருபெயாளச்சியில் பங்கேற்க முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் நலன் கருதி அவசர மருத்துவ வசதிக்காக 6 மருத்துவர்கள், 3 செவிலியர்கள், 6 சுகாதார செவிலியர்கள், 3 பகுதி சுகாதார செவிலியர்கள், 3 மருத்துவ உதவியாளர்கள் அடங்கிய மருத்துவக்குழு சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நடமாடும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு 1 மருத்துவர், 1 செவிலியர் அடங்கிய மருத்துவக்குழு பணியில் ஈடுபடுகின்றனர்.