ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது

0

நீடாமங்கலம்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

குருப்பெயர்ச்சி விழா

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக இத்தலம் விளங்குகிறது.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டு குருபகவான் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சியடைகிறார். இதனை முன்னிட்டு ஆலங்குடி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

சிறப்பு பஸ்கள்

இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது.

பக்தர்களின் நலன் கருதி அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் பல்வேறு ஊர்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.