ஆந்திர வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் ரூ.1 கோடி உதவி

0
186

ஆந்திர வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் ரூ.1 கோடி உதவி

கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருக்கின்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.பொதுமக்கள் மட்டுமல்லாமல் ஆடு, மாடு,கோழி போன்ற மனிதர்களின் பராமரிப்பில் வளர்க்கப்படும் உயிரினங்களும் பாதிப்படைந்துள்ளன. மழையின் காரணமாக மழைக்கால நோய்களும் பரவி வருகிறது.

தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் கடந்த பல நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. திருப்பதி கோயில் வெள்ளத்தில் தத்தளித்ததை மக்கள் அனைவருமே சமூக வலைத்தளத்தில் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சித்தூர் மாவட்டத்தில் நீவா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஏராளமான ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. திருப்பதி சித்தூர் மட்டுமல்லாது நெல்லூர், கடப்பா , அனந்தபூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர். திருப்பதியில் மண்சரிவு ஏற்பட்டது மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்டோரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆந்திர வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ்பாபு, ராம் சரண் ஆகியோர் முதல்- மந்திரி நிவாரண நிதிக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.1 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்து உள்ளனர். சிரஞ்சீவி டுவிட்டரில் வெளிட்டுள்ள பதிவில், ‘‘ஆந்திராவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் வேதனை அளிக்கிறது.

நிவாரணப் பணிகளுக்காக முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை வழங்குகிறேன்” என்று கூறியுள்ளார். மகேஷ்பாபு வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ஆந்திர வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ரூ.25 லட்சம் வழங்குகிறேன். இந்த நெருக்கடி நேரத்தில் ஆந்திராவுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.