அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடுகிறது முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார்

0

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வியூகம்:

சென்னை, ஜூன்.18- உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வியூகம் வகுக்கும் வகையில், அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில், அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளன.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து, அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

கூட்டத்திற்கு, அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்குகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில், அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் 38 பேர், எம்.பி.க் கள் 50 பேர், எம்.எல்.ஏ.க்கள் 133 பேர் உள்பட சிறப்பு அழைப்பாளர்களையும் சேர்த்து சுமார் 270 பேர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 6-வது முறையாக முதல்- அமைச்சராக பொறுப்பேற்றதற்கும், 7-வது முறையாக அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு பெற்றதற்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட இருக்கிறது.

அதே நேரத்தில், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்த தொகுதிகள் குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. மேலும், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்தும் வியூகம் வகுக்கப்பட இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று நிர்வாகிகளிடம் ஜெயலலிதா கேட்டுக்கொள்ள இருக்கிறார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கட்சி அலுவலத்திற்கு வருவதையொட்டி, அவருக்கு போயஸ் கார்டன் முதல் கட்சி அலுவலகம் வரை வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்க கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.