‘அவர் வடித்த கண்ணீரை திமுக என்றும் மறக்காது’ – விஜயகாந்துக்கு அமைச்சர் சேகர்பாபு நினைவஞ்சலி!
மறைந்த தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்தின் முதலமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், பலரும் விஜயகாந்தின் நினைவிடத்தில் வந்து மரியாதை செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மறைந்த தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்திற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, “மறைந்த புரட்சி கலைஞர் நினைவு நாளில் திமுக சார்பில் அவருடைய குரு பூஜையில் பங்கேற்றுள்ளேன். நேற்று வரை புரட்சி கலைஞராக இருந்தவர், எந்நாளும் தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமர நிறைந்திருப்பார்.
இலங்கை தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது பல்வேறு கலைஞர்களை பரிணாமம் செய்தவர். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் அவர்கள் நினைத்தபடி பேரணி நடந்திருக்கிறது. முதலமைச்சருக்கு பேரணி அனுமதி அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. குரு பூஜையில் முதல்வரின் அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சரையே அனுப்பி இருக்கிறார். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதை ஊதி பெரிதாக்க வேண்டாம்.
ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்தான் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். ஏழை, எளிய மக்கள் உயர்வதற்கு, தான் உழைத்து சம்பாதித்த பொருளை செலவு செய்தவர். வாழும் மனிதநேயமாக கருதப்படும் மறைந்து மறையாமல் இருக்கும் ஒரு கலைஞர். வாழ்ந்த காலத்தில் தலைவராக இருந்த போது முத்தமிழறிஞர் கலைஞருக்கு விழா எடுத்து தங்கப் பேனாவை வழங்கி சரித்திரம் படைத்தவர்.
முத்தமிழறிஞர் கலைஞர் இறந்த பிறகு வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்ற போது காணொளி வாயிலாக அவர் வடித்த கண்ணீர் திமுக எப்போதும் மறக்காது. அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவுடன் அவர் நேராக சென்ற இடம் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடம்தான்.
திராவிட மாடல் அரசுக்கும் திராவிடம் என்கிற சொல்லுக்கும் அவருடைய கட்சிக்கு இந்த பெயரை வைத்திருக்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவிற்கு அரசின் முழு மரியாதை வழங்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் மீதான அதே அன்பும் பற்றும் விஜயகாந்த்க்கு இருந்துள்ளது. விஜயகாந்தின் இலட்சியத்தை பொதுச்செயலாளர் பிரேமலதா தொடர்ந்து வழிநடத்தி செல்ல பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.” என்றார்.