அழியாத மை வைக்கும் உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

0

சென்னை, வங்கிகளில் பணம் எடுப்போரின் விரலில் அழியாத மை வைக்கும் உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடி நிலையை மத்தியில் உள்ள பாஜக அரசு உருவாக்கியுள்ளது. இதன்வாயிலாக ஏழை மக்களைத் தாங்க முடியாத இன்னல்களுக்கு ஆளாக்கி வருவது கண்டனத்துக்குரியது.

125 கோடி மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று பிரகடனம் செய்து ஆட்சி செய்யும் பிரதமர் தலைமையிலான மத்திய அரசு இப்படி சொந்த மக்களையே நம்பாமல் தற்போது அவர்கள் விரலில் மை வைக்கும் செயலில் ஈடுபடுவது மிகப் பெரிய கொடுமை.

மத்திய அரசின் இந்தச் சர்வாதிகார நடவடிக்கை வேதனைக்குரியது மட்டுமல்ல, ஜனநாயக நாட்டில் எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும்.

வெளிப்படையான நிர்வாகம்- மக்களுக்கான அரசாங்கம் என்ற முழக்கத்தை 2014 மக்களவைத் தேர்தல் அறிக்கையில் முன் வைத்து ஆட்சிக்கு வந்துள்ள பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களின் விரலில் மை வைக்க முடிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் இந்தச் செயல் ஜனநாயக பாதையிலிருந்து நாடு வேறு எங்கோ திசைமாறிச் செல்கிறதோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சொந்த நாட்டு மக்களையே சந்தேகிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். வங்கிக்கு பணம் எடுக்க வருவோருக்கு அழியாத மை வைப்போம் என்ற உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் மக்களின் இன்னல்களைப் போக்கும் விதத்தில் வங்கிகளில் பண விநியோக முறையை மத்திய அரசு எளிமைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.