அரசு வரியை குறைத்தால் சினிமா டிக்கெட் விலையை குறைக்க தயார்: தியேட்டர் அதிபர்கள் அறிவிப்பு

0

அரசு வரியை குறைத்தால் சினிமா டிக்கெட் விலையை குறைக்க தயார்: தியேட்டர் அதிபர்கள் அறிவிப்பு

அரசு வரியை குறைத்தால் சினிமா டிக்கெட் விலை குறையும் : திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை!

அரசு வரியை குறைத்தால் டிக்கெட் கட்டணத்தை குறைக்க தயார் என்று தியேட்டர் அதிபர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்று வரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது.

நோய் தொற்று பரவலை பொறுத்து சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என எல்லா தொழில்களையும் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதலில் மூடப்பட்ட தனித்தியேட்டர்கள், மால், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை மீண்டும் திறப்பதற்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.

அரசாங்கத்தின் எந்த விதமான சலுகைகளும் இன்றி சொந்த முதலீட்டில் நடைபெற்று வந்த இந்த தொழில் அரசுக்கு வருவாய் தரக்கூடியது. இந்த தொழில் மூலம் சுமார் 50,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது.

தியேட்டர்கள் மூடப்பட்ட பின் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பிற தொழில்களுக்கு விதி முறைகளுடன் அனுமதி வழங்கியது போன்று தியேட்டர் தொழிலை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே பொழுதுபோக்கு தியேட்டர்களில் திரைப்படங்களை கண்டுகளிப்பது. சமூக இடைவெளியின் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கட்டுகள் விற்பன செய்து பார்வையாளர்களை அனுமதிக்க முடியும். இதன் காரணமாக டிக்கட் விலையை அதிகரிக்காமல் அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருக்ககூடிய தியேட்டர் தொழிலை பாதுகாக்கவும் வேண்டும்.

தற்பொழுது நடைமுறையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி 8 சதவிகிதத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இதனை ரத்து செய்வதன் மூலம் டிக்கெட் கட்டணம் குறையும். அதிக எண்ணிக்கையில் மக்கள் குடும்பமாக படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

தனி திரையரங்குகளுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவிகிதமாக குறைத்து நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தற்பொழுது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் டிக்கெட் விலை 84 ரூபாய்க்கு விற்க முடியும்.

ஊரடங்கு காலத்திற்கு முன்பாக தனி திரையரங்குகளுக்கு அதிக பட்சமாக சதவிகித பார்வையாளர்கள் வருகை இருந்தது. மேற்கூறிய கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றும் பட்சத்தில் 20 சதவிகித பார்வையாளர்கள் வரை திரையரங்குக்கு வரக்கூடிய சூழல் ஏற்படும். இல்லாத பட்சத்தில் 10 சதவிகித பார்வையாளர்களுக்கு குறைவாகவே வருவார்கள் இதன் காரணமாக ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் திரையரங்கு தொழில் நலிவடைவதற்கான சூழல் உருவாகும்.

தற்பொழுது கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடியுள்ள நிலையில் தியேட்டருக்கான மின் கட்டணத்தில் 50 சதவிகிதம் சலுகை தர வேண்டுகிறோம். முழு முடக்க காலம் வரை திரையரங்கிற்கான சொத்து வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம். தொழில் துவங்கிய பிறகு திரை தொழில் சகஜ நிலை திரும்பும் வரை சொத்து வரியில் 50 சதவிகித சலுகை தர வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.