அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு

0

அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 14–

அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டிடங்களுக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவை விதி 110ன் கீழ் சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளிக் கல்வித்துறை யின் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

* வரும் கல்வி ஆண்டில், 5 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும். மேலும், 10 அரசு தொடக்கப்பள்ளிகள் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவைப்படும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். மேலும், தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.

* வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 26 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் செய்து கொடுப்பதுடன், தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 9 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

* 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 55 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும் தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 21 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும் ஏற்படுத்தப்படும்.

* அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில், தமிழ்நாட்டில் முதற்கட்டமாக, 1,890 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் மீதமுள்ள 4,282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 48 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா வசதி அமைத்து தரப்படும்.

* அரசு பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, பள்ளிக் கட்டடங்கள் மற்றும் அலுவலகங்களை பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் பராமரிப்பு மற்றும் செப்பனிடுதல் பணிகளுக்கான மானியத்தொகை 38 கோடியே 50 லட்சம் ரூபாயில் இருந்து 2020–-21ஆம் ஆண்டில், 100 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர் கல்வித் துறை மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இத்துறை சார்பில் பின்வரும் அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

* தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பொறியியல் கல்லூரி மற்றும் 45 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் உள்ள கட்டடங்களை மேம்படுத்தவும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும், முதல்கட்டமாக இந்த ஆண்டு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் 10 ஆயிரம் மாணாக்கர்கள், தொழிலகங்களில் கள அனுபவம் பெற்று, தங்கள் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திக் கொள்ள ஒரு மாணாக்கருக்கு 16 ஆயிரத்து 600 ரூபாய் வீதம் நிதி உதவி வழங்க, 16 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில், உயர் மின் அழுத்த பகிர்மான அமைப்பை சிறப்பான முறையில் இயக்கி பராமரிக்க, 6.33 கோடி ரூபாய் தொடர் செலவினத்தில், 61 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.

* ஆசியாவிலேயே முதன்முதலாக துவங்கப்பட்ட சென்னை, சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் கட்டடம் 18–ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இப்புராதனக் கட்டடத்தினை, அதன் தொன்மை மாறாமல் புனரமைக்க, 10.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* அதே போன்று, 1840–ம் ஆண்டு துவங்கப்பட்டு, தேசிய கல்லூரிகள் கட்டமைப்பில், நாட்டிலேயே 3–ம் இடத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த சென்னை மாநிலக் கல்லூரியின் பழமை வாய்ந்த பல கட்டடங்களும், கல்லூரி முதல்வர் குடியிருப்பும், அதன் தொன்மை மற்றும் அழகு மாறாமல், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து பாதுகாக்கப்படும்.

* பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணாக்கர்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தும் வகையில், மின் வாகனங்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆராய்ச்சிக்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும், சுகாதாரம் மற்றும் ஆற்றல் தொடர்பான ஆராய்ச்சிக்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கும், புற்றுநோய் ஆராய்ச்சிக்காக பாரதியார் பல்கலைக் கழகத்திற்கும், உயிர் மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிக்காக மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கும், உயிர் மருத்துவ பயன்பாடுகள் குறித்த ஆராய்ச்சிக்காக சென்னை பல்கலைக்கழகத்திற்கும் தலா 35 கோடி ரூபாய் வீதம், மொத்தம் 210 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

* ஆண்டுதோறும் உயர்கல்வியில் சேரும் மாணாக்கர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள் கட்டவும், கணினி மற்றும் உபகரணங்கள் மற்றும் மர தளவாடங்கள் வாங்கவும் 150 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.