அரசியலுக்கு வருவார் சூப்பர் ஸ்டார் ரஜினி… உற்சாகத்துடன் நலப்பணிகளில் ஈடுபடும் ரசிகர்கள்

0

அரசியலுக்கு வருவார் சூப்பர் ஸ்டார் ரஜினி… உற்சாகத்துடன் நலப்பணிகளில் ஈடுபடும் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர். தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ரஜினி காந்த், அவ்வப்போது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை தெரிவித்து வந்தார். ஆனால், நேரடியாக அரசியலுக்கு வருவது குறித்த தகவலை வெளியிடவில்லை.

ஆனால், சமீபத்தில் ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியின்போது, அரசியலுக்கு வருவதை சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர் அரசியலுக்கு வருவது குறித்து பலர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ரசிகர்களோ களப்பணிகளில் உற்சாகமாக ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.

அவ்வகையில் வேலூர் மாவட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 2016-2017 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
சோளிங்கர் நகரில் உள்ள அரசு பள்ளிகளில் 2016-2017ம் ஆண்டு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும், நினைவுபரிசும் வேலூர் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக சோளிங்கர் என்.ரவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

அவர் தனிக்கட்சி தொடங்குவார் என்றும், எதாவது ஒரு கட்சியில் இணைவார் என்றும் மாறுபட்ட தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால், அவர் தனிக்கட்சி தொடங்கவேண்டும் என்பதுதான் பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அதற்கேற்ப நலத்திட்ட உதவிகளை வழங்கி மக்கள் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இதன்மூலம் மக்கள் மத்தியில், ரஜினியின் செல்வாக்கு மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.