அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு அறிவிப்புகள்! – நகராட்சியாகிறது கன்னியாகுமரி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு, இரண்டாவது நாளாக அரசு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நாளில் (டிசம்பர் 31), திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டு, அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டி, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வள்ளுவத்திற்கான 6 முக்கிய அறிவுப்புகளையும், கன்னியாகுமரிக்கான ஒரு அறிவிப்பையும் மொழிந்தார்.
வள்ளுவத்திற்கான 6 முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு,
1. முக்கடல் சூழும் குமரி முனையில் சுற்றுலாப் பயணிகள் அனைவரும், அய்யன் திருவள்ளுவர் சிலையை சென்று பயனடைய மூன்று பயணி படகுகள் வாங்கப்படும்!
முதல் படகிற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரும், இரண்டாவது படகிற்கு மார்ஷல் நேசமணி பெயரும், மூன்றாவது படகிற்கு ஜி.யு.போப் பெயரும் சூட்டப்படும்.
2. தமிழ்நாட்டின் மாவட்டந்தோறும் தொடர் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
திருக்குறள் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற திட்டம் வகுக்கப்படும். இதற்கு மாவட்டம் ஒன்றுக்கு ஆண்டுதோறும் ரூ.3 இலட்சம் ஒதுக்கப்படும்.
3. ஆண்டிற்கு 133 உயர்கல்வி நிறுவனங்களில் திருக்குறள் தொடர்பான கலை, இலக்கிய, அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த திட்டமிடப்படும்.
4. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இறுதி வாரம், “குறள் வாரம்”-ஆக கொண்டாடப்படும்.
5. தமிழ் திறனறித் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, ‘திருக்குறள் மாணவர்கள் மாநாடு’ ஆண்டுதோறும் நடத்தப்படும்.
6. திருக்குறளும், உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்படுவது போல, தனியார் நிறுவனங்களிலும் எழுத ஊக்குவிக்கப்படும்.
இறுதியாக, 7 ஆவது அறிவிப்பாக “தமிழ்நாட்டின் தென்கோடியில் அய்யன் திருவள்ளுவர் சிலையால் சிறப்பு பெற்றிருக்கும் கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.