அமைச்சரவையில் இடம்பெறாதது வருத்தம் இல்லை – உதயநிதி ஸ்டாலின்

0
26

அமைச்சரவையில் இடம்பெறாதது வருத்தம் இல்லை – உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்களாக துரை முருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். நீர் பாசனத்துறை அமைச்சராக துரைமுருகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.க.பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.

அனைவரும் பதவி ஏற்று கொண்டவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி கலந்துகொண்டார். தயாநிதி அழகிரியை கட்டியணைத்து உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின், நிருபர்களிடம் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியான தருணம். தமிழ்நாட்டுக்குத் தேவையான ஒரு விஷயம் நிகழ்ந்துள்ளது. எங்கள் தலைவர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுகவினர் மக்களுக்கான பணியை ஆற்றுவார்கள்” எனத் தெரிவித்தார்.

அப்போது, அமைச்சரவையில் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறதா என, செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “உங்களுக்கு ஏதாவது வருத்தம் இருக்கிறதா? எனக்கு இல்லை” எனத் தெரிவித்தார்.