அமீரகப் பயணம் வெற்றியை அடுத்து.. 3 நாள் பயணமாக டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நான்கு நாள் அரசுப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் 6 நிறுவனங்களுடன் ரூ.6100 கோடிக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் 14700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த மகத்தான வெற்றிப் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். பின்னர், நேற்று காலை சென்னை பெருங்குடியில் அமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை திறந்துவைத்தார். இதையடுத்து மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இன்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்றைய தினம் இரவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். இதையடுத்து நாளை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க உள்ளார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் சந்திக்க இருக்கிறார்.
இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து ஏப்ரல் 2ம் தேதி டெல்லி தீன தயாள் உபாத்யாயா சாலையில் கட்டப்பட்டுள்ள அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். அமீரக பயணத்தை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் டெல்லி பயணம் செல்வது முக்கியமாகக் கருதப்படுகிறது.