‘அனைவரும் ஒருங்கிணைந்து இந்த பேரிடரை நாம் வென்றிட வேண்டும்’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

0
110
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.12.2023 அன்று புதுதில்லியிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதிகனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கா.ப. கார்த்திகேயன், இ.ஆ.ப, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஜி. லட்சுமிபதி, இ.ஆ.ப., கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. துரை. ரவிச்சந்திரன், இ.ஆ.ப., ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., பொதுத்துறை செயலாளர் திரு. க. நந்தகுமார், இ.ஆ.ப., ஆகியோரும், காணொலிக் காட்சி வாயிலாக வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘அனைவரும் ஒருங்கிணைந்து இந்த பேரிடரை நாம் வென்றிட வேண்டும்’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.12.2023 அன்று புதுதில்லியிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதிகனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி. லட்சுமிபதி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதர், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்புடன் முகாம்களில் தங்க வைக்கப்பட வேண்டும் என்றும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிப் பொருட்களும் தங்குதடையின்றி வழங்கப்பட வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாறு காணாத இந்த வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக மீட்டு, நிவாரண உதவிகளை மிகக்குறுகிய காலத்திற்குள் வழங்கிட வேண்டிய சவாலான சூழலில் நாம் இப்பொழுது உள்ளோம்.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு இருந்தாலும், இந்த இரண்டு நாட்களில் பெய்த பெருவெள்ளம் இன்னும் வடியாமல், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்னும் வெள்ளநீரில் மக்கள் சிக்கி உள்ளார்கள்.

இவர்களை உடனடியாக மீட்டெடுத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டியது தான் நம் முன் தற்போது இருக்கக்கூடிய தலையாய கடமை. இந்தப் மீட்புப்பணிகளில் இராணுவம், NDRF, SDRF ஆகியவற்றோடு இணைந்து, காவல்துறையும், தீயணைப்பு துறையும், வருவாய்த்துறையும் தொடர்ந்து களப்பணி ஆற்ற வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி, முகாம்களில் தங்க வைத்திருந்தாலும், இன்னும் பல பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை உடனடியாக வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்க வேண்டும். இதற்கு தேவைப்படும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக புதிய முகாம்களை அமைத்திட வேண்டும். தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, உடைகள், போர்வைகள் போன்ற பொருட்களை உடனடியாக வழங்கிட வேண்டும்.

இந்த நிவாரணப் பொருட்களை பக்கத்து மாவட்டங்களில் பெற்று தேவைப்படும் இடங்களுக்கு சரியான நேரத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டிய பணிகளையும் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயலாற்றி மக்களின் உயிர்களை காப்பாற்றி, அவர்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநாட்டிட வேண்டியது சவாலான நேரமாக இது அமைந்திருக்கிறது.

சென்னையிலும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது நாம் அனைவரும் செயல்பட்ட அதே வேகத்தோடும், ஒருங்கிணைப்போடும் செயல்பட்டு, இந்த பேரிடரையும் நாம் வென்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்தப் பணியிலே ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், நன்றி, வணக்கம்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.