அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா புஷ்பா நீக்கம்

0

சென்னை: அதிமுக மாநிலங்களை உறுப்பினர் சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா சனிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் தில்லியில் இருந்து சென்னை வருவதற்காக விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். பின்னர் திடீரென தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்பினார்.

அப்போது அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவும் சென்னை வருவதற்காக விமான நிலையத்துக்கு வந்திருந்தார். பயணிகளின் உடைமைகளை சரி செய்யும் இடம் அருகே திருச்சி சிவாவை பார்த்த சசிகலா புஷ்பா, திடீரென திருச்சி சிவாவின் அருகில் சென்று, அவரது சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் தாக்கினார். இதில் சிவா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினும் அறுந்து கீழே விழுந்தது.

இதனால் நிலை குலைந்து போன திருச்சி சிவா திகைத்து நின்றார். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய போலீஸாரும், பாதுகாப்பு அதிகாரிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தமிழக அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்தது ஏன் என்பது பற்றி சசிகலா புஷ்பாவிடம் கேட்டபோது, திருச்சி சிவா எம்.பி., தமிழக போலீஸாரை பற்றியும், எங்கள் அம்மாவை பற்றியும் அவதூறாக பேசினார். என்னைப் பார்த்ததும் அவரது பேச்சு அதிகமானது. இதனாலேயே நான் அவரது கன்னத்தில் அறைந்தேன்.

இச்சம்பவத்துக்கு பிறகு தில்லியில் உள்ள எனது வீட்டை அடித்து நொறுக்கி உள்ளனர். நான் சென்னை பயணத்தை ரத்து செய்து விட்டு தில்லியில்தான் இருக்கிறேன் என கூறினார்.

இந்நிலையில், தில்லியில் இருந்து இன்று சென்னை வந்த திருச்சி சிவா செய்தியாளர்களிடம் கூறுகையில், தில்லியில் இருந்து சென்னை திரும்புவதற்காக விமான நிலையத்துக்கு சென்றிருந்தேன். வேறு ஒரு வேலை வந்துவிட்டதால், விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு வெளியில் சென்றேன். எனது மனைவியின் நினைவு நாள் வருவதால் விடுமுறை எடுக்கவும் திட்டமிட்டிருந்தேன். அந்த சிந்தனையுடனேயே விமான நிலையத்தை விட்டு வெளியேறினேன்.

அப்போது அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா விமான நிலையத்துக்குள் வந்தார். 10 அடி தூரத்தில் இருந்த அவர் திடீரென எனது அருகில் வந்து என்னை தாக்கினார்.

அப்போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு வந்து அவரை விலக்கி விட்டனர்.

அப்போது சசிகலா புஷ்பா, பாதுகாப்பு அதிகாரிகளிடம், நானும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அப்படி இருக்கும் போது அவருக்கு மட்டும் ஏன் அதிக மரியாதை கொடுக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே அவர்கள் அதற்காக பொது இடத்தில் இப்படியா நடந்து கொள்வீர்கள்? என்று கேட்டனர்.

பின்னர் அங்கிருந்து என்னை செல்லுமாறு அறிவுறுத்தினர். நான் வெளியில் வந்து விட்டேன். சசிகலா புஷ்பா அங்கேயே நின்று கொண்டிருந்தார்.

விமான நிலையத்தில் நடந்த சம்பவம் எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது. சசிகலா புஷ்பா ஒரு பெண் என்பதால், அவரிடம் மேலும் வாக்குவாதம் செய்ய எனக்கு மனம் வரவில்லை.

தமிழக முதல்வரை பற்றி கருத்து தெரிவித்ததற்காக சசிகலா புஷ்பா என்னை தாக்கியதாக கூறி இருக்கிறார்.

விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் அப்படி நான் பேச வேண்டிய அவசியமே இல்லை. அப்படியே பேசி இருந்தாலும் அதற்காக இப்படி நடந்து கொள்ள வேண்டியதில்லை. அவர் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தார். நான் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தேன். இதனால் என்னை தாக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை.

அரசை விமர்சித்து பேசினால் பொது இடத்தில் அடிப்பது என்கிற புதிய மரபை சசிகலா புஷ்பா ஏற்படுத்தி உள்ளார். இதனை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் என்னை தாக்கியதற்கான காரணமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இல்லை. இதனை காரணமாக வைத்து அரசியல் ஆதாயம் தேட விருப்பவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் குறித்து நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து சிவா விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், நேற்று முதல்வர் ஜெயலலிதா அழைப்பை அடுத்து அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவும், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். சந்திப்பின் விளக்கங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இன்று அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவில் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட சசிகலா புஷ்பா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். இவருடன் கட்சியினர் யாரும் தொடர்புவைத்துக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.