அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த பெண் விண்வெளி வீராங்கனை தரை இறங்கினார்

0

அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த பெண் விண்வெளி வீராங்கனை தரை இறங்கினார்

நீண்ட நாட்கள் விண்வெளியில் இருந்த பெண் மற்றும் நிலவில் நடந்த பெண் என்ற பெருமையோடு, விண்வெளி வீரர் க்றிஸ்டினா கோச் பூமிக்கு திரும்பினார்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்தவர் க்ரிஸ்டினா கோச். வடக்கு கரோலினா மாகாண பல்கலைக் கழகத்தில் மின் பொறியியல் மற்றும் இயற்பியல் துறையில் பட்டம் பெற்ற இவர், கடந்த 2013ம் ஆண்டு விண்வெளி திட்டங்களுக்காக நாசா விண்வெளி நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 விண்வெளி வீரர்களுள் க்றிஸ்டினா கோச்சும் ஒருவர். விண்வெளி பயணத்திற்குச் செல்வதற்கான பயிற்சிகளை 2015ம் ஆண்டில் முடித்த க்றிஸ்டினா கோச், கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவால் அனுப்பப்பட்டார். சோயஸ் எம்எஸ்-12 விண்வெளி ஓடத்தில், க்றிஸ்டினாவுடன் அலெக்சே ஒவ்சினின் மற்றும் நிச்க் ஹாக் ஆகியோரும் சென்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே தனது பணியை மார்ச் 29ல் முதலில் ஆரம்பித்த க்றிஸ்டினா கோச், அதன் பிறகு மற்றொரு சாதனையை படைத்தார். இதுவரை ஆண்கள் மட்டுமே விண்வெளியில் இறங்கி நடந்த நிலையில், பெண்கள் இருவர் மட்டும் விண்வெளியில் இறங்கி நடந்த நிகழ்வு நடைபெற்றது. க்றிஸ்டினா கோச் மற்றும் ஜெஸிகா மெய்ர் ஆகியோர் அக்டோபர் 18ம் தேதி விண்வெளியில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டனர்.

முதலில் சில மாதங்களுக்கு மட்டுமே விண்வெளி நிலையத்தில் பணியாற்றுவதற்கு அனுப்பப்பட்ட க்றிஸ்டினா, விண்வெளி சுற்றுலா திட்டத்திற்காக மேலும் சில மாதங்கள் பணியாற்றுவதற்காக நாசாவால் பணிக்கப்பட்டார். இதனையடுத்து, க்றிஸ்டினா பூமிக்கு பிப்ரவரி 2020ல் திரும்புவார் என்று நாசா அறிவித்தது. இதனையடுத்து தனது 328 நாள் விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு, ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வொர்ட்ஸோவ், ஐரோப்பா விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த விண்வெளி வீரர் லூகா பர்மிடனோவுடன், சோயஸ் எம்எஸ்-12 விண்வெளி ஓடத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 02:30 மணிக்கு பூமிக்கு திரும்பினார். இந்த ஓடமானது கஜகஸ்தானின் ஜெஸ்கஸ்கான் பகுதியில் தரையிறங்கியது. பூமிக்கு திரும்பிய க்றிஸ்டினாவிற்கு நாசா விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த பணிக்காலத்தில், 6 முறை விண்வெளியில் நடந்திருக்கிறார் க்றிஸ்டினா. அதோடு, 42 மணி நேரம் 15 நிமிடம் விண்வெளி நிறுவனத்திற்கு வெளியே பணி மேற்கொண்டிருக்கிறார். அதே நேரத்தில், விண்வெளி சுற்றுலா தொடர்பான அறிவியல் ஆய்வுகளில் க்றிஸ்டினா ஈடுபட்டதோடு, விண்வெளியில் மனிதர்களின் உடல்நிலை எப்படி இருக்கும் என்பது உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அவர் பயன்படுத்தப்பட்டுள்ளார்.  ஆறு மாத விண்வெளி பயணம் நீட்டிக்கப்பட்டு, 328 நாட்கள் விண்வெளியில் இருந்ததன் மூலம், அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தால் மனிதனின் உடலில் என்னவிதமான மாற்றங்கள் ஏற்படும் என்று ஆராய்வதற்கான ஒரு நபராக மாறியிருக்கிறார் க்றிஸ்டினா.

இதற்கு முன்னதாக பெக்கி விட்சன் என்ற விண்வெளி வீராங்கனை 288 நாட்கள் விண்வெளி நிலையத்தில் இருந்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், 328 நாட்கள் 13 மணி நேரம் 58 நிமிடங்கள் விண்வெளி நிலையத்தில் இருந்ததன் மூலம் அதிக நாட்கள் விண்வெளி நிலையத்தில் பணியாற்றிய முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் க்றிஸ்டினா. எனினும், ஸ்காட் கெல்லி என்ற விண்வெளி வீரர் 340 நாட்கள் விண்வெளியில் இருந்ததே தற்போதுவரை அதிகபட்சமாக உள்ளது.