பகாசூரன் விமர்சனம்: பகாசூரன் தாக்கம் குறைந்த புதிய பாட்டிலில் ஒல்டு வைன் | ரேட்டிங்: 2.5/5

0
406

பகாசூரன் விமர்சனம்: பகாசூரன் தாக்கம் குறைந்த புதிய பாட்டிலில் ஒல்டு வைன் | ரேட்டிங்: 2.5/5

ஜி.எம்.கார்ப்ரேஷன் தயாரித்து ஜிடிஎம் பட நிறுவனம் சார்பில் கௌதம் வெளியிட பகாசூரன் படத்தில் இதில் செல்வராகவன், நட்டி, ராதாரவி, கே.ராஜன், மன்சூர் அலிகான், தேவதர்சினி, பி.எல்.தேனப்பன், குணாநிதி, ராம்ஸ், சசி லையா, ரிச்சா, கூல் ஜெயந்த், அருணோதயன், குட்டி கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் மோகன்.ஜி. இசை-சாம்.சி.எஸ், ஒளிப்பதிவு-ஃபருக் ஜே பாட்ஷா, எடிட்டிங்-எஸ்.தேவராஜ், கலை -எஸ்.கே, ஸ்டண்ட்-மிரட்டல் சிவா, நடனம்-ஜானி, தயாரிப்பு மேற்பார்வை-முருகன், மக்கள் தொடர்பு-மணவை புவன்.

மர்மங்கள் நிறைந்த க்ரைம் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பரபரப்பாக வெளியிடும் முன்னாள் இராணுவ அதிகாரி யூ டியூபர் அருண்வர்மன். தன் அண்ணன் மகளின் திடீர் மரணம் பாதிக்க, அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள விசாரணையில் இறங்குகிறார். பல பாலியல் மிரட்டல்கள் செல்போன் மூலம் நடைபெறுவதையும் அதில் சம்பந்தப்பட்ட திடுக்கிடும் உண்மைகளை கண்டுபிடிக்கிறார். இதற்கு காரணமானவர்களை பிடிக்க பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து புகார் கொடுக்க யாரும் முன் வராத நிலையில் கடலூரில் வசிக்கும் பீமராசுவைப் பற்றி கேள்வி படுகிறார். பீமராசு தன் மகள் சாவிற்கு காரணமானவர்களை பிடித்து தருமாறு புகார் கொடுத்திருப்பதை அறிந்து அவரைத் தேடி செல்கிறார். அங்கே பீமராசுவின் தந்தை மட்டும் இருக்க அருண்வர்மன் பீமராசுவைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்கிறார்.
கடலூரில் கூத்துத்தொழில் செய்யும் பீமராசு, மகள் ஸ்வேதா மற்றும் தன் தந்தையுடன் வசித்து வருகிறார். மேல் படிப்பிற்காக மகளை பெரம்பலூரில் உள்ள கல்லூரியில் சேர்த்து விடுதியில் தங்கி படிக்க வைக்கிறார். இறுதியாண்டு முடிக்கும் தருவாயில் மகள் ஒரு நாள் வீட்டிற்கு வந்து தந்தை பீமராசுவிடம் கல்லூரி விடுதியில் தன் நண்பருடம் இருக்கும் போது போட்டோ எடுத்து சிலர் மிரட்டுவதாக கூறி அழுகிறார். வீட்டிலேயே இருந்து கொண்டு படிக்கும் மகள் ஸ்வேதா பரீட்சைக்கு ஹால் டிக்கெட் வாங்க வேண்டும் என்று கூறி கல்லூரி சென்று விட்டு வீட்டிற்கு வந்து தூக்கிட்டு ;தற்கொலை செய்து கொள்கிறார். இதற்கான காரணத்தை அறியாமல் இருக்கும் பீமராசு, ஸ்வேதாவின் நண்பர் மூலம் இதற்கு காரணமானவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்கிறார். அவர்களைத் தேடி சென்று பின் தொடர்ந்து மூன்று பேரை கொல்கிறார். இறுதியாக கொல்ல துடிக்கும் நபர் யார்? எதற்காக இவர்களை தேடிச் சென்று கொலை செய்தார்?  மகள் இறப்பிற்கு காரணம் என்ன? இறுதியில் பீமராசு என்ன செய்தார்? என்பதே படத்தின் முடிவு.

செல்வராகவன் தெருக்கூத்துக் கலைஞர் பீமராசுவாக அமைதியாக கூத்துப்பாட்டு, நடனம் என்று வாழ்க்கையை  ஒட்ட மகளின் இறப்பு ஆக்ரோஷமான மனிதராக மாற்ற, வெறிக்கும் பார்வை, எதிரிகளை பந்தாடி துவம்சம் செய்வது என்று அடக்கமாக ஆனால் ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்து ஸ்கோர் செய்கிறார்.

முன்னாள் இராணுவ அதிகாரியாக நட்டி துப்பறிந்து விசாரணை செய்வதில் கில்லாடியாக வந்து முடிந்த வரை படத்தின் கதைக்களத்திற்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக நடித்துள்ளார்.

மகள் ஸ்வேதாவாக வரும் ரிச்சா சரியான தேர்வு, சந்தோஷம்,சோகம், துக்கம் இருண்டும் கலந்து தேர்ந்த நடிப்பால் கவர்கிறார்.

மிரட்டல் வில்லனாக ராதாரவி, தாத்தாவாக கே.ராஜன், மன்சூர் அலிகான், தேவதர்சினி, பி.எல்.தேனப்பன், குணாநிதி, ராம்ஸ், சசி லையா, ரிச்சா, கூல் ஜெயந்த், அருணோதயன், குட்டி கோபி ஆகியோர் பக்கமேளங்கள்.

ஆரம்ப காட்சியில் ஆரம்பிக்கும் சிவசிவாயம் பாடல் முதல் இறுதி காட்சி வரை இசையும், பின்னணி இசையும் ஒரு சேர கொடுத்து அதிர வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.

ஒளிப்பதிவு-ஃபருக் ஜே பாட்ஷா, எடிட்டிங்-எஸ்.தேவராஜ், கலை -எஸ்.கே, ஸ்டண்ட்-மிரட்டல் சிவா, நடனம்-ஜானி ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு படத்தின் விறுவிறுப்பான காட்சிகளுக்கு உயிரோட்டத்தை கொடுத்து தரத்தை உயர்த்தியுள்ளனர்.

கையடக்க செல்போன் தான் பகாசூரன், அது நம்மை மூழ்க வைத்து விழுங்கி விடும், அதில் மாட்டிக் கொண்டால் தப்பிக்க முடியாது என்பதை வைத்து பாலியல் துன்புறுத்தல், மிரட்டல், பழிவாங்குதல் கலந்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் மோகன்.ஜி. இந்த டிஜிட்டல் யுகத்தில், மொபைல் போன் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், குறிப்பாக இளைஞர்களிடையே முக்கிய பங்கு வகிக்கிறது. மொபைல் போனால் பல விஷயங்கள் மாறுகின்றன. பகாசுரன் திரைப்படம் மொபைல் போனை மையமாக வைத்து, “இதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்”என்றும் பெண்களின் கெளரவம் மற்றும் செல்போன்கள் மற்றும் தொழில்நுட்பத்தையே கொச்சைப்படுத்தும் விதத்தில் அதன் ஆபத்துகளை அவர் பின்னோக்கி எடுத்துக்கொண்டது பிற்போக்குத்தனமான கருத்துக்களை வெளியிடுவதாக தோன்றுகிறது.

மொத்தத்தில் ஜி.எம்.கார்ப்ரேஷன் தயாரித்துள்ள பகாசூரன் தாக்கம் குறைந்த புதிய பாட்டிலில் ஒல்டு வைன்.