ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் விமர்சனம்: விஞ்ஞானி நம்பி நாராயணனின் தியாக அர்ப்பணிப்பை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி அசத்தியுள்ளது  | மதிப்பீடு: 4|5

0
587

ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் விமர்சனம்: விஞ்ஞானி நம்பி நாராயணனின் தியாக அர்ப்பணிப்பை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி அசத்தியுள்ளது  | மதிப்பீடு: 4|5

ட்;ரை கலர் பிலிம்;ஸ் சார்பில் ஆர். மாதவன், சரிதா மாதவன், மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன், விஜய் மூலன் இணைந்து தயாரித்து ஆர். மாதவன், சிம்ரன், ரஜத் கபூர், ரவி ராகவேந்திரா, சாம் மோகன், குல்ஷன் குரோவர், மிஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ளனர்.மற்றும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.படத்தின் கதை, திரைக்கதை, பாடல் வரிகள், எழுதி இயக்கியிருக்கிறார் ஆர். மாதவன்.ஒளிப்பதிவு: சீர்ஷா ராய், பாடல்கள்: கே. ராம் மனோகர், இசை: சாம் சி.எஸ்,மக்கள் தொடர்பு – D’One சுரேஷ்சந்திரா, ரேகா.

முதல் காட்சியில் விஞ்ஞானி நம்பி நாராயணனின் (ஆர் மாதவன்) வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கேட்கும் சூர்யாவின் நேர்காணலில் தொடங்குகிறது படம். இதற்கு பதிலளிக்கும் நம்பி நாராயணன் தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார். 1966 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) சேர்ந்து படிப்படியாக வளர்ந்து, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ராக்கெட் ப்ராபல்ஷன் சிஸ்டம்ஸ் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. அங்கு பெரிய சம்பளத்துக்கு நாசா இவரை வேலைக்கு அழைக்க தனது குருநாதர் விக்ரம் சாராபாயின் கோரிக்கையை ஏற்று, அந்த வாய்ப்பை பணிவுடன் நிராகரித்துவிட்டு இந்தியா திரும்புகிறார். பின்னர் இந்தியாவிலிருந்து 52 விஞ்ஞானிகளுடன் பிரான்சிற்கு பயணம் மேற்கொண்டு இன்ஜின் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வெற்றிகரமாக கற்றுக்கொண்டு இஸ்ரோவிற்கு திரும்புகிறார் நம்பி நாராயணன். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா அசுர வளர்ச்சியை எட்ட வேண்டிய ஆர்வத்தில் இருக்கும் நேரத்தில் இவரது உழைப்பால் திடவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், திரவ எரிபொருள் ((liquid fuel) கொண்டும் ராக்கெட்டை அதிக தூரம் செலுத்த முடியும் என்று விகாஸ் என்ஜினையும் இந்தியாவுக்காக கண்டுபிடிக்கிறார். அடுத்து நம்பி நாராயண் தனது திறன்களைப் பயன்படுத்தி முதல் முறையாக இந்தியாவில் தனது குழுவுடன் இணைந்து ராக்கெட் ஏவுதல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு அதற்காக  உள்நாட்டு ராக்கெட்டுகளை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரஷ்யா உருவாக்கிய கிரையோஜெனிக் இன்ஜின்களை இந்தியா கொண்டுவர விரும்புகிறார். கிரியோஜெனிக் எஞ்சின் பக்கம் மாதவன் கவனம் திரும்பும் நிலையில், அந்த ஆற்றல் மட்டும் இந்தியாவிற்கு கிடைத்து விட்டால் ஏவுகணை செய்து இந்தியா வல்லரசு நாடாகி விடும் என்கிற அச்சத்தால், அமெரிக்கா அதற்கான உதவிகளை செய்யக் கூடாது என ரஷ்யாவுக்கு உத்தரவு போடுகிறது. ஆனாலும், ரஷ்ய விஞ்ஞானிகளிடம் பல கோடி மதிப்புள்ள அந்த கிரையோஜெனிக் இன்ஜின்களை மிககுறைந்த  விலைக்கு பேசி வாங்குகிறார் நம்பி நாராயணன். ஆனால்,ரஷ்யாவில் நடக்கும் உள்நாட்டு பிரிவினை போரால் அதை இந்தியாவுக்கு நேரடியாக எடுத்து வர முடியாத சூழலில் பல பாகங்களாக பிரித்து கொண்டு விமானத்தில் வருகிறார்.  பாகிஸ்தான் கராச்சி வழியாக வந்தால் எதிரிகளால் ஆபத்து ஏற்படாது என்று கருதிய இவருக்கு பிரச்சனை ஆரம்பமாகிறது. அதே நேரத்தில், இந்திய ராக்கெட் தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக கூறி அதிரடியாக தேச துரோக வழக்கில் வெளிநாட்டு பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி கைது செய்யப்பட்டு அவர் மீது பொய் வழக்குகள் போட்டு பிறகு கேரள காவல்துறையால் சித்திரவதைகளை அனுபவிக்கிறார். இதற்காக அவர் எத்தனை ஆண்டுகள் வழக்குகளுடன் போராடினார்? அவர் மீதான பொய் வழக்குகளில் இருந்து அவர் எப்படி மீண்டார்? தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானங்கள், மனஉளைச்சலை எப்படி எதிர்கொண்டார்? தன்மீது விழுந்த தேச துரோக பட்டத்தை பொய் என்று எப்படி நிரூபித்தார்? என்பதே மீதிக்கதை.

புத்திசாலித்தனமும், சாதுர்யமும் ஆனால் பிடிவாதம், நினைத்ததை சாதிக்கும் குணம் கொண்ட அறிவியல் விஞ்ஞானியாக தேசத்திற்காக எந்த செயலையும் செய்ய துணியும் துடிப்பு மிக்க இளைஞராக இருந்து, சக விஞ்ஞானிகளின் பகையையும் சம்பாதித்து, பின்னர் பலம் படைத்த பதவியில் இருந்து இந்தியாவிற்காக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்,ரஷ்யா என்று பறந்து ஆராய்ச்சிகளை முடித்து, பல ஒப்பந்தங்களை பெற்று வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் மகிழ்ச்சியான தருணத்தில் ஏற்படும் கைது சம்பவத்தால் நிலைகுலைந்து அவரும், குடும்பத்தாருக்கும் ஏற்படும் பழிச்சொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் தவிப்பு மாதவன் அசலாக வாழ்ந்துள்ளார். இடைவேளைக்குப் பிறகு இதனால் அவரது குடும்பத்தில் நடந்த பாதிக்கப்படும் சம்பவங்களாக விவரிக்க ஆரம்பிக்கும் போது மனம் பதைபதைக்க வைக்கிறது. இத்தகைய முரட்டு சித்திரவதைகளை, மக்களின் வெறுப்பையும் ஏச்சு பேச்சுக்களையும் தாங்கிக் கொண்டு நிரபராதியாக வெளியே வரும் காட்சி கண்களை குளமாக்கிவிடுகிறது. இறுதியில் மாதவன் கேட்கும் கேள்வி தான் நிரபராதி என்றால் யார் குற்றவாளி என்பதை மக்களிடமே அதற்கான பதிலை விட்டு விடுவது சிறப்பு. பல கேள்விகளில் உள்ளடக்கிய மர்மங்களை வெளியே கொண்டு வர சிக்கல்கள் இருப்பதால் அப்படியே விட்டு விடுவது நலம். நடை, உடை, பாவனை என்று இளைஞர் முதல் வயோதிக வயது வரை அவர் எடுத்துக்கொண்ட சிரத்தைகள் படத்தின் அர்ப்பணிப்பில் சிறப்பாக தெரிகிறது. சிறந்த நடிகருக்கான விருதுகள் நிச்சயம் கிடைக்கும். கதை, திரைக்கதை எழுதி இயக்கி நடித்தும் இருக்கும் ஆர். மாதவன்  இந்தப்படத்தின் கல்தூண்.

மீனாவாக சிம்ரன் கச்சிதமாகவும், மனஉளைச்லால் பாதிக்கப்பட்டு கணவருக்காக போராடி உள்ளுக்குள் மனவேதனையில் தவிக்கும் தவிப்பு வாழ்க்கையே போராட்ட களமாக மாறும் நிலையிலும் அதே சமயம் இறுதி வரை உறுதியாக இருந்து சாதிக்கும் பொறுப்பான குடும்பத்தலைவியாக நவரச நடிப்பில் அசத்தியுள்ளார்.

ரஜத் கபூர், ரவி ராகவேந்திரா, சாம் மோகன், குல்ஷன் குரோவர், மிஷா கோஷல்,சிபிஐ அதிகாரியாக வரும்; கார்த்திக் குமார், முதலில் வெறுத்து துன்பத்தில் உதவும் விஞ்ஞானி நண்பர் ஆகியோர் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் வந்தாலும் மனதில் பதிகிறார் சூர்யா.

பிஜித் பாலாவின் படத்தொகுப்பு, சிர்ஷா ரேயின் ஒளிப்பதிவு மற்றும் ஷ்யாம். சிஎஸ் இசையும், பின்னணி இசையும்  படத்தை மென்மேலும் சிறக்கச் செய்கிறது.

மொத்தத்தில் ட்ரை கலர் பிலிம்ஸ் சார்பில் ஆர். மாதவன், சரிதா மாதவன், மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன், விஜய் மூலன் இணைந்து தயாரித்திருக்கும் ‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” விஞ்ஞானி நம்பி நாராயணனின் சிதைந்து போன வாழ்க்கையை துணிச்சல் மிகுந்த போராட்ட குணத்தால் மீட்டெடுத்த தியாக அர்ப்பணிப்பை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி அசத்தியுள்ளது.