பயணிகள் கவனிக்கவும் திரை விமர்சனம் : சோஷியல் மீடியா கணக்கு வைத்திருக்கும் அனைவரும் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்கள் உட்பட அனைவரும் பார்க்க வேண்டிய முக்கிய ப(பா)டம் | RATING – 3 STAR

0
234

பயணிகள் கவனிக்கவும் திரை விமர்சனம் : சோஷியல் மீடியா கணக்கு வைத்திருக்கும் அனைவரும் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்கள் உட்பட அனைவரும் பார்க்க வேண்டிய முக்கிய ப(பா)டம் | RATING – 3 STAR

இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் பயணிகள் கவனிக்கவும். இந்தத் திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்.பாண்டிக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷமந்த் நாக் இசையமைத்திருக்கிறார். மலையாளத்தில் விக்ருதி என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ்ப் பதிப்பான பயணிகள் கவனிக்கவும் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார். ஆஹா ஒரிஜினல்ஸ் படைப்பாகத் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று பயணிகள் கவனிக்கவும் பார்க்கலாம்.
இன்று நீங்கள் எங்கிருந்தாலும், என்ன நடந்தாலும் உங்கள் மொபைலை எடுத்து பதிவு செய்வது வாடிக்கையாக உள்ளது – கிட்டத்தட்ட விளையாட்டாக ஒவ்வொரு நிகழ்வும் கைப்பற்றப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. சமூக பயன்பாடுகளில் படங்களை இடுகையிடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒருவர் பிரபலமடைய விரும்ப அல்லது அவர்-அவள் என்ன செய்கிறார் என்பதைக் காட்ட, அதன் மூலம் சமூக வலைதளங்களில் எல்லோருடைய கவனத்தை ஈர்க்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு கமெண்டுகளும் மீம்ஸ்களும் போட்டு பதிவேற்றம் செய்கிறார்கள்.
யாரோ ஒருவரின் புகைப்படம் அல்லது வீடியோவை, அதன் உண்மைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் இடுகையிடுவது அவர்களுக்கு நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் என நீங்கள் கருதினால், அதை இடுகையிட வேண்டாம். துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் எதையாவது இடுகையிட்டவுடன், உள்ளடக்கத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடுவீர்கள், அது நியாயமற்றது மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தும். நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் எதிர்காலத்தில் வேலைகள் அல்லது பிற வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்பதை உரத்துச் சொல்லும் படம் பயணிகள் கவனிக்கவும்.

பள்ளி ஒன்றில் லைப்ரேரியனாக பணி புரியும் எழிலனும் (விதார்த்) அவரது மனைவி தமிழ் செல்வியும் (லக்ஷ்மி பிரியா சந்திரமவுலி) வாய் பேச முடியத மாற்றுத் திறனாளிகள். அவர்களுக்கு இரு பிள்ளைகள். கால்பந்து வீரனாக வர பயிற்சி எடுக்கும் மகன், பள்ளி படிக்கும் மகள். வெளி நாட்டில் வேலை செய்து அம்மா , தங்கை, அக்கா , அக்காவின் கணவர், என்று எல்லோரும் கூட்டு குடும்பமாக சந்தோஷமாக இருக்கும் ஆண்டனி (கருணாகரன்). எதைப் பார்த்தலும் புகைப்படமோ வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவு செய்யும் இளைஞன். மிண்டும் வெளிநாடு திரும்பும் முன் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க அம்மா முடிவு செய்ய, அவன் சிறுவயது முதல் விரும்பிய ஜெஸ்சி (மசூம் சங்கர்) என்ற பெண்னுடன் நிச்சயம் செய்கிறார்கள். தான் உண்டு தன் குடும்பம் என்று எழிலன் சந்தோஷமாக இருக்கும் தருவாயில் தன் மகளுக்கு நிமோனியா காய்ச்சல் வர இரண்டு முழு நாட்கள் தூக்கமே இல்லாமல் மருத்துவமனையில் தன் மகளுடன் இருந்த எழிலன் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு மின்சார ரயிலில் வரும்போது அசந்து படுத்து தூங்கி விடுகிறார். அதே ரயிலில் பயணிக்கும் ஆண்டனி, எழிலன் குடித்து விட்டு மின்சார ரயிலில் படுத்து இருப்பதாக எண்ணி அதைப் படம் எடுத்து கிண்டல் செய்து கண்டித்து மீம்ஸ் போட்டு முக நூலில் இடுகிறார். மின்னல் வேகத்தில் சமூக வலைதளங்களில் அந்த பதிவு பார்வையாளர்களின் கவனத்தை பெறுகிறது. அந்தப் பதிவால் எழிலன் பெருத்த அவமானத்துக்கு ஆளாகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதை ‘ஆஹா’ OTT தளத்தில் பயணிகள் கவனிக்கவும் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

நடிகர் விதார்த் சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பத் தலைவனாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் அற்புதமாக நடித்து அனைவருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறார். வாய் பேசா மாற்றுத்திறனாளி குடும்பத் தலைவியாக லக்ஷ்மி பிரியா சந்திர மவுலி அவரது நடிப்புக்கு ஈடுகொடுத்து அனைவருடைய மனதில் நிற்கிறார். இவர்கள் இருவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து நம் கண்களை கலங்க வைத்துள்ளார்கள். வாழ்த்துக்கள்.

அடுத்து கருணாகரன், சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரப்படும் செய்தி மற்றும் புகைப்படங்கள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற சவாலான கதாபாத்திரத்தில் சிறந்த குணச்சித்திர நடிகராக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி திரைக்கதைக்கு வலுசேர்த்துள்ளார்.

மாசும்ஷங்கர் (கருணாகரன் மனைவியாக ஜெஸ்ஸி), வித்தியாசமான தண்டனை கொடுக்கும் இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் (ராஜ நாராயணன்), சுது சரித்திரன் (ரமேஷ்), சுளு சிவாஜி (வக்கீல் சேதுராஜன்), கவிதாலயா கிருஷ்ணன் (பாஸ்கர்), மூனார் ரமேஷ் (ஜான்), ராமச்சந்திரன் (ராமச்சந்திரன்), ஸ்டெல்லா ராஜ் (மரியம்), ரேகா நாயர் (ஷ{லா), நிகிலாஷங்கர் (ஜெனி), சௌமியா (அபிராமி), செல்வம் (சிங்காரம்), கார்த்திக் ராஜா (சரண்), அனிஷா (மதி) ஆகியோர் இயல்பாக நடித்து கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறார்கள்.

ஷமந்த் நாக் -இசை, பாண்டிக் குமார் – ஒளிப்பதிவு, படத்தொகுப்பு சதிஷ்குமார், கலை ராகுல், உடை வடிவமைப்பு வினயா தேவ், ஒலி கலவை ரூ ஒலி வடிவமைப்பு – ஷமந்த் நாக், பிரவீன் குமார், பாடல் – கவின், ராகவ் கிருஷ்ணா உள்பட எல்லோருமே தங்கள் பணிகளை கச்சிதமாகச் செய்துள்ளனர்.

சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிடுவதாக இருந்தாலும் சரி… ஒரு வீடியோவை பதிவிடுவதாக இருந்தாலும் சரி… அல்லது அதுகுறித்து கருத்துக்கள் தெரிவித்தாலும் சரி.. அது எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையாக வைத்து திரைக்கதை உருவாக்கி, அதை எவ்வளவு கவனத்துடன் கையாள வேண்டும் என்பதையும், தவறாக பதிவிட்டால் எத்தனை பேருடைய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதையும், சமூக வலைதளங்களை நல்ல விதத்தில் பயன்படுத்தினால் ஒருவருடைய வாழ்க்கை எப்படி மேன்மை அடைகிறது என்பதையும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல்.

மொத்தத்தில் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் பயணிகள் கவனிக்கவும் படத்தை சோஷியல் மீடியா கணக்கு வைத்திருக்கும் அனைவரும் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்கள் உட்பட அனைவரும் பார்க்க வேண்டிய முக்கிய ப(பா)டம்.