ட்ரிக்கர் திரைவிமர்சனம் : ட்ரிக்கர் ஆக்சன் கலந்த உணர்வுபூர்வமான க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5

0
427

ட்ரிக்கர் திரைவிமர்சனம் : ட்ரிக்கர் ஆக்சன் கலந்த உணர்வுபூர்வமான க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5

PRAMOD FILMS   சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி, சுருதி நல்லப்பா வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் ட்ரிகர்.

காவல்துறையில் பணிபுரிந்து வரும் அதர்வா ஒரு கும்பலை பிடிக்கச் செல்லும்போது அந்த ஆபரேஷனில் தன்னிச்சையாக செயல்பட்டதால் பணி நீக்கம் செய்யப்படுகிறார். தனது உயரதிகாரியின் உத்தரவை மீறி, மனிதாபிமானத்தைப் பின்பற்றியதற்காக அவர் காவல்துறையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுகிறார். ஆனாலும் கமிஷனர் (அழகம் பெருமாள்) அதர்வாவிற்கு அனைத்து காவல் நிலையங்களையும் கண்காணிக்கும் ஒரு சிறப்பு வேலையை ரகசியமாக கொடுக்கிறார். அங்கிருந்து அனைத்து காவல் நிலையங்களையும் அதர்வா கண்காணித்து தவறு செய்யும் போலீஸ் மற்றும் நகரத்தில் நடக்கும் குற்றங்களை காவல்துறைக்கு தெரிவிக்கிறார். அதர்வா அந்தப் பணியில் இருக்கும் போது ஒரு குழந்தைக் கடத்தலைப் பற்றி விசாரிக்கச் செல்கிறார். இந்த நிலையில், எதிரியால் 20 குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அந்தக் கும்பலை பற்றிய விசாரணையில் இறங்குகிறார். ஆர்பனேஜிலிருந்து குழந்தைகளை தத்து எடுத்து அவர்களை விற்கும் கும்பலை பற்றி அதர்வாவிற்கு தெரிய வருகிறது. அது தொடர்ச்சியாக வேறு பல தொடர்புகளுடன் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அதற்குத் தலைமை வகிப்பது யார்?  அந்த கும்பலை தனியாளாக அதர்வா எப்படி பிடிக்கிறார் என்பதே ட்ரிக்கர் படத்தின் மீதிக் கதை.

தமிழ் சினிமாவின் வசீகர நாயகனாக வலம் வரும் அதர்வா, பல்வேறு வகையான படங்களை வழங்கி தனது பன்முக திறமையை நிரூபித்து வருகிறார்.ஒரு இளம் போலீஸ் அதிகாரி வேடத்தில் ஒரு அண்டர்கிரவுண்ட் அதிகாரியாகவும் அதர்வா மீண்டும் ஒரு ஸ்டைலான போலீஸ் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் மற்றும் தனது ஆபத்தான அதிரடி காட்சிகள் மூலம் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார். அப்பா மீது சுமந்த களங்கத்தை நீக்கத் தந்தை வெற்றி பெற வேண்டும் என்று துடிக்கும் ஒரு பாசமான மகனாக ஜொலிக்கிறார்.
கதாநாயகி தன்யா ரவிச்சந்திரனும் ஒரு அழகான கதாபாத்திரத்தில் அதிகமான காட்சிகள் இல்லையென்றாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
அல்சைமர் என்ற ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக, அதர்வாவின் அப்பாவாக வயதிற்கேற்ற கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை கொடுத்த அருண்பாண்டியனுக்கு கதையில் நல்ல பங்கு உள்ளது. அவருக்கு ஏன் அப்படி ஆனது என்பதுதான் கதையின் முக்கியமான கரு.
பாசத்தைப் பொழியும் அம்மாவாக சீதா, போலீஸ் கமிஷனராக அழகம் பெருமாள், அண்ணனாக கிருஷ்ண குமார், அண்ணியாக வினோதினி வைத்தியநாதன், மற்றும் அண்டர்கிரவுண்ட் போலீசாக முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் அந்தந்த பாத்திரங்களில் கச்சிதமாக இருக்கிறார்கள்.
தன்னை தவறாக புரிந்திருக்கும் மகன், தான் தவறு செய்யவில்லை என்றும் தான் ஒரு நேர்மையான போலீஸ் என்பதை உணர்த்தி தன் மகன் தன்னைப் பற்றி பெருமையாக நினைக்க வேண்டும் என்று கடமையில் ஒரு தியாகத்தைச் செய்யும் முக்கிய வேடத்தில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார் சின்னி ஜெயந்த்.
மைக்கேல் கதாபாத்திரத்தில் வில்லனாக ராகுல் தேவ் ஷெட்டி பெரிதாக எடுபடவில்லை.
கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு இயக்குனர் திரைவடிவத்தை பூர்த்தி செய்து ஸ்டைலான ஈர்ப்புடன் தேவையான அனைத்து காட்சிகளையும் படமாக்க உதவியுள்ளார். காட்சி கோணங்களுக்கு அதிக அளவில் ட்ரோன் பயன்படுத்தியுள்ளார்.
எடிட்டிங்கை பொறுத்தவரை ரூபனின் பங்களிப்பு பெரிதாக இல்லை.
ஆனால் ஒரு த்ரில்லர் படத்திற்குரிய பின்னணி இசையை கொடுத்து சரி செய்துள்ளார் ஜிப்ரான்.
திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் கோரியோகிராபியில் உண்மைத் தன்மை இல்லாததால் ஸ்டண்ட் நடிகர்கள் உழைப்பு வீணடிக்க பட்டுள்ளது. சண்டை என்றால் கொஞ்சமாவது நம்பக தன்மையுடன் இருக்க வேண்டும்.
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அன்பை, தனது தந்தையை ஒருபோதும் இழக்க விரும்பாத குழந்தை, அவரது தந்தை வெற்றிபெற வேண்டும், காதல், உணர்வு, உணர்ச்சி, பெற்றோர் மற்றும் குழந்தைகள் உறவுகள் மற்றும் மனவேதனைகள் ஆகியவற்றை உள்ளடக்கி கதை அமைத்து முதிர்ச்சியடைந்த படத்தை வழங்குவதற்காக திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ஒரு சில குறைபாடுகள் இருந்தபோதிலும், சுவாரஸ்யமாக தர முயற்சித்துள்ளார் சாம் ஆண்டன்.
மொத்தத்தில் PRAMOD FILMS சார்பில் பிரதீக் சக்கரவர்த்தி, சுருதி நல்லப்பா வழங்கும் ட்ரிக்கர் ஆக்சன் கலந்த உணர்வுபூர்வமான க்ரைம் த்ரில்லர்.