விருமன் – திரைப்பட விமர்சனம்: மதுரை மண் மணம் மாறாமல் பாசத்தால் கட்டி போட்டு விடுகிறான் விருமன் | ரேட்டிங்: 3.5\5
நடிகர்கள்: கார்த்தி, அதிதி சங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி, மைனா நந்தினி, இந்திரஜா.
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு : எஸ்.கே.செல்வகுமார்
ஸ்டன்ட்: அனல் அரசு
கலை: ஜாக்கி
எடிட்டிங்: வெங்கட்
இயக்கம்: முத்தையா.
துயாரிப்பு: சூர்யா மற்றும் ஜோதிகா – 2டி எண்டர்டெயிண்மெண்ட்
மக்கள் தொடர்பு: ஜான்சன்
ஊர் தாசில்தாராக முனியாண்டி (பிரகாஷ் ராஜ்) இருக்க இவருக்கு நான்கு மகன்கள். இதில் கடைசி மகன் தான் விருமன் (கார்த்தி). கணவர் முனியாண்டி வேலைக்காரியோடு உறவில் இருக்கிறார் என்பதை அறிந்தவுடன் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார் மனைவி முத்துலட்சுமி (சரண்யா பொன்வண்ணன்). விருமனின் தாய் சரண்யா பொன்வண்ணன் இறப்புக்கு தன் தந்தை பிரகாஷ் ராஜ் காரணமாக இருப்பதால் இவரை கொலை செய்ய வேண்டும் என்று கோபத்துடன் இருக்கிறார் விருமன். கோர்ட்டில் விருமன் தன் தந்தையிடம் இருக்க மாட்டேன் என கூறி சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி குஸ்தி வாத்தியாரான மாமா ராஜ்கிரண் உடன் செல்கிறான். விருமன் வீட்டை விட்டு வெளியேறினாலும் மற்ற மூன்று அண்ணன்கள் சொத்துக்கு ஆசைப்பட்டு அவர்கள் பயந்து தந்தையோடு இருக்கின்றனர். முனியாண்டி, விருமனை ஏமாற்றி முத்துலட்சுமி பெயரில் இருக்கும் சொத்தை அபகரிக்க நினைக்கிறார். வளர்ந்து பெரியவனான பிறகும் தந்தையை பழிவாங்க நினைக்கும் விருமன் தன் மூன்று அண்ணன்களுக்கு இருக்கும் பிரச்னைகளையும் ஒவ்வொன்றாக சரி செய்து அவர்களை தன் பக்கம் இழுத்து அவர்களின் தந்தை நல்லவர் இல்லை என்பதை உணர்த்த முயற்சி செய்து தந்தையை பழிவாங்க நினைக்கிறார். இறுதியில் விருமன், தன் குடும்பத்தின் மீதான அன்பையும், குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் தந்தைக்கு உணர்த்தினாரா? இல்லை தந்தையை கொலை செய்தாரா? முனியாண்டி விருமனை ஏமாற்றி சொத்தை அபகரித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
‘கொம்பன்’ படத்துக்குப் பிறகு கார்த்தியும் இயக்குநர் முத்தையாவும் இணைந்திருக்கும் ‘விருமன்’ படத்தில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி, நடனம், புழுதி பறக்கும் ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் என அனைத்திலும் தனித்துவமாகத் ஸ்கோர் செய்து கிராமத்து மண்வாசனைக்கு பெருமை சேர்த்துள்ளார். வெல்டன் கார்த்தி.
நாயகியாக நடித்திருக்கும் அதிதி சங்கர் அழகு, சிரிப்பு, குத்தாட்ட நடனம், ரொமான்ஸ் என அனைத்து காட்சிகளிலும் அசத்தி புதுமுகம் போல் தெரியாமல் கிராமத்து மற்றும் அனைத்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் என்றே சொல்லலாம்.
பாசத்தால் ரசிகர்களை கட்டி போட்ட ராஜ்கிரண் மற்றும் சரண்யா, இவர்களுடன் கொடூர எண்ணம் கொண்ட பாட்டி வடிவுக்கரசி ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பால் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
தாசில்தார் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் கம்பீரம்
வழக்கமான வில்லன் நடிப்பில் ஆர்.கே.சுரேஷ் மற்றும் சாய்ந்து நடக்கும் சூரி நடிப்புக்கு விருமன் கைத்தட்டல் வாங்கி கொடுத்துள்ளது.
கருணாஸ், சிங்கம்புலி, மைனா நந்தினி கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து அனைவருடைய கவனத்தை ஈர்த்துள்ளனர்.
கிராமத்து அழகை கண்முன் கொடுத்த எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவுடன் யுவனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெறும் பலம் சேர்த்துள்ளது.
ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு, கலை இயக்குனர் ஜாக்கி மற்றும் எடிட்டிங் வெங்கட் திரைக்கதை ஓட்டத்திற்க்கு உயிர் சேர்த்துள்ளனர்.
முத்தையா படங்கள் என்றாலே இப்படித் தான் இருக்கும் என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. எல்லாருக்கும் அப்பா தான் முதல் ஹீரோ, ஆனால் விருமனுக்கு அப்பன்தான் முதல் வில்லன் என்ற கருவை வைத்து தேர்ந்த திரைக்கதை எழுதி வலுவான கதாபாத்திரங்களை சேர்த்து நீண்ட நாட்களுக்குப்பிறகு ஆக்ஷன், எமோஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து மண் சார்ந்த படைப்பை ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் முத்தையா
மொத்தத்தில் 2டி எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் மதுரை மண் மணம் மாறாமல் பாசத்தால் கட்டி போட்டு விடுகிறான் விருமன்.