விட்னஸ் விமர்சனம் : விட்னஸ் ஒரு அழுத்தமான, அதே சமயம் சிறந்த சமூக அக்கறை கொண்ட உணர்வுபூர்வமான சிறந்த படம். | ரேட்டிங்: 3.5/5

0
284

விட்னஸ் விமர்சனம் : விட்னஸ் ஒரு அழுத்தமான, அதே சமயம் சிறந்த சமூக அக்கறை கொண்ட உணர்வுபூர்வமான சிறந்த படம். | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள் : ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோகிணி, ஸ்ரீநாத், அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி.செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் – தீபக்
இசை – ரமேஷ் தமிழ்மணி
எடிட்டிங் – பிலோமின் ராஜ்
பாடல் வரிகள் – கபிலன்
கலை – சதீஷ்
ஒலி வடிவமைப்பு – விவேக் ஆனந்தன்
ஒலி கலவை – லாரன்ஸ் ஜி (ஆர்டி ஸ்டுடியோஸ்)
டிஐ – டெக்கான் ட்ரீம்ஸ்
ஸ்டில்ஸ் – கோமளம் ரஞ்சித்
விளம்பர வடிவமைப்புகள் – சிவகுமார் எஸ் (சிவாடிஜிட்டலார்ட்)
இணை இயக்குனர்கள் – விடிவெள்ளி, சோம்சைநாதன்
இணை ஒளிப்பதிவாளர்கள் – வினோத் ஜே, அவந்தி
நிர்வாகத் தயாரிப்பாளர் – விஜயபிரகாஷ், வி ஸ்ரீ, நட்ராஜ்
தயாரிப்பு மேலாளர் – வெ கி துரைசாமி
தயாரிப்பாளர் – டிஜி விஸ்வ பிரசாத்
இணை தயாரிப்பாளர் – விவேக் குச்சிபோட்லா
திரைக்கதை – முத்துவேல், ஜே.பி.சாணக்யா
மக்கள் தொடர்பு – குணா
சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
நீச்சல் வீரரான பார்த்திபன் என்ற இளைஞர், கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யச் செல்லும் போது உயிரிழக்கிறார். அம்மா இந்திராணி ஒரு துப்புரவுப் பணியாளர். தனது ஒரே மகனை சட்டவிரோதமாக அவனைக் கூட்டிச்சென்று மலக்குழிக்குள் இறக்கிவிடப்பட்டு அந்தப் பணியில் ஈடுபடுத்தி, கொல்லப்பட்டதை அறிந்த அவரது தாய் ரோகிணி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார். பெத்தராஜூ என்ற தொழிற்சங்கத் தலைவர், அவருக்கு உறுதுணையாக வருகிறார். இன்னொருபுறம், விபத்து நடந்த குடியிருப்பில் குடியிருக்கும் பார்வதி என்ற இளம் கட்டடக் கலைஞர் இந்திராணியிடம் முக்கியமான சில ஆதாரங்களை ஒப்படைக்கிறாள். அந்த ஆதாரங்களைக் கொண்டு பெத்தராஜுவும், இந்திராணியும், நீதிமன்றத்தை நாடுகின்றனர். அதன் விளைவாக, சம்பவம் நடந்த பகுதியின் கழிவுநீர்ப்பணி ஒப்பந்ததாரருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் மூலம் இந்திராணிக்கும், பார்வதிக்கும், தொழிற்சங்கத் தலைவருக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வழக்கை தொடர்ந்து நடத்தாமல் இருக்க தொல்லைகள் கொடுக்கிறார்கள். அதன் விளைவாக மூவருக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. வழக்கு என்ன ஆனது? நீதி கிடைத்ததா? இந்திராணி  குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே விட்னஸ் திரைப்படத்தின் மீதிக் கதை.

துப்புரவுப் பணியாளர் இந்திராணியாக வரும் நடிகை ரோகிணியின் நடிப்பை பற்றி ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அவர் எந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்தாலும் அதில் தன்னை முழுமையாக அப்பணித்து விடுவார். மகனை இழந்து தவிக்கும் தாயாகவும், நீதி கிடைக்க போராடத் துணிந்து காவல்துறையிடம் மல்லுக்கட்டும் காட்சிகளில் ஒரு துப்புரவு பணியாளர் தினந்தோறும் சந்திக்கும் இன்னல்களை மீண்டும் ஒருமுறை தன் அனுபவ நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
அவருடன் இணைந்து நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத், அழகம்பெருமாள், ஸ்ரீநாத், வழக்கறிஞராக வரும் சண்முகராஜான், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவராக வரும் ஜி.செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் உள்ளிட்டடோர் அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறி அதற்கான உழைப்பை அளித்து திரைக்கதை வெற்றியடைய சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ரமேஷ் தமிழ்மணியின் இசை, கபிலனின் பாடல் வரிகள், மற்றும் பிலோமின் ராஜ் எடிட்டிங் படத்தின் உண்மைத்தன்மை மாறாமல் இருக்க அளவான தொழில்நுட்பத்தை வழங்கி பலம் சோர்த்துள்ளனர்.

முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா ஆகியோர் இணைந்து தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதிய கதை மற்றும் திரைக்கதையை அறிமுக இயக்குனர் தீபக் இயக்கியுள்ளார்.

 பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும், மனித கழிவுகளை அகற்றும் மனிதர்களை பற்றிய கதையாக புதியதொரு பாணியில், மேல்மட்ட வர்க்கத்தினரின் ஆதிக்கம், காவல் துறை மற்றும் அரசியல் எந்தளவிற்கு, கலந்திருக்கிறது என்பதை நமக்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் காட்சிபடுத்தி இயக்கியதோடு ஒளிப்பதிவும் செய்து இயக்கியிருக்கிறார் தீபக். க்ளைமேக்ஸ் காட்சி அற்புதம்.

மொத்தத்தில் ‘தி பீப்பிள் மீடியா பேக்டரி’ தயாரித்துள்ள விட்னஸ் ஒரு அழுத்தமான, அதே சமயம் சிறந்த சமூக அக்கறை கொண்ட உணர்வுபூர்வமான சிறந்த படம்.