வாழ்வு தொடங்குமிடம் நீதானே திரைப்பட விமர்சனம் : ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ பார்வையாளர்களை கவரும் உண்மையான அன்பின் சக்தி | ரேட்டிங்: 3/5

0
213

வாழ்வு தொடங்குமிடம் நீதானே திரைப்பட விமர்சனம் : ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ பார்வையாளர்களை கவரும் உண்மையான அன்பின் சக்தி | ரேட்டிங்: 3/5

பரணிதரன், செந்தில் குமார் அவர்களின் ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்காக, நீலிமா மற்றும் இசை இருவரின் தயாரிப்பில் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஆறுமுக வேல், பிரதீப், நிரஞ்சன் நடிப்பில் ஜெயராஜ் பழனியின் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழ்வு தொடங்குமிடம் நீதானே.
ஷார்ட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் இப்படத்தை சதீஷ் கோகுல கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய தர்ஷன் ரவிக்குமார் இசையமைத்திருக்கிறார். ஆர்.எல். விக்னேஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ரவி பாண்டியன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். மக்கள் தொடர்பு யுவராஜ்.
இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி அவர்களின் உணர்வைப் பேசும் படம் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’. ஆணும், பெண்ணும் காதலிப்பது இயற்கை. எனினும் இந்த சமூகத்தில் இயற்கையான உறவுகளை மீறி ஆணும் ஆணும்… பெண்ணும் பெண்ணும்… என தன்பாலின ஈர்ப்பு, அவர்களின் சேர்க்கையும் பல இடங்களில் நிகழ்கிறது. தரங்கம்பாடியில் உள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் வாழும் பெண் ஷகீரா (நிரஞ்சனா நெய்தியார்). அதேபோல் ஆராய்ச்சிக்காக திருச்சியில் இருந்து  வரும் நவநாகரீக இளம் பெண் வினோதா (ஸ்ருதி பெரியசாமி) என்ற பெண் ஷகீரா வீட்டில் தங்குகிறார். இந்நிலையில் இரண்டு வெவ்வேறு மத பின்னணியில் பிறந்து, ஆச்சார அனுஷ்டானங்கள் உடன் வாழும் இந்த இரண்டு இளம் பெண்களும் தன் பாலின ஈர்ப்பு காதலும் உறவும் ஏற்பட, ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். இந்த விஷயம் ஷகீராவின் தந்தைக்கு தெரிய வர இருவரையும் அடிக்கிறார். உடனே அவசரமாக ஷகிராவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இர்பான் என்ற இளைஞனுக்கும் ஷகிராவுக்கு திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. இர்பான் தனிமையில் ஷகிராவை நேரில் சந்திக்க வரும் போது, ஷகிரா அவளுடைய நிலையை இர்பானுக்கு எடுத்துச் சொல்ல முயல்கிறார், ஆனால் சொல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஷகீரா இர்பானை அணுகி வினோதா உடனான காதலை பற்றி தெரிவிக்கும் போது இர்பான் அதிர்ச்சி அடைகிறான். ஷகீரா அவனிடம் உதவி கேட்கிறாள். கோபத்தில் இருக்கும் இர்பான் அவளுடைய உணர்வை புரிந்து கொண்டு ஷகீராவை வினோதாவுடன் சேர்த்து வைக்க ஒத்துக் கொள்கிறான். சமூகத்தின் எதிர்ப்புகளை மீறி இவர்களின் காதல் என்ன ஆனது? அவர்களின் உறவை சமூகமும், மதமும் ஏற்றுக்கொண்டதா? அவர்களின் காதலை இந்த சமூகம் அங்கீகரித்ததா? அல்லது புறக்கணித்ததா? என்பதை இந்த படம் சொல்கிறது.
ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், இருவரும் தத்ரூபமான நடிப்பின் மூலம் தன்பாலின சேர்க்கையாளர்களின் உணர்வை திரையில் வெளிப்படுத்தி உள்ளனர்.
அர்ஷத் ஆறுமுக வேல், பிரதீப், நிரஞ்சன் உட்பட கதைக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
சதீஷ் கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவு, தர்ஷன் ரவிக்குமார் இசை, ஆர்.எல்.விக்னேஷ் படத்தொகுப்பு மற்றும் ரவி பாண்டியன் கலை ஆகிய இவர்கள் உணர்வுபூர்வமான கதை களத்திற்கு நேர்த்தியான பணியை செய்து திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.
இந்த உலகம் அனைத்து மனிதர்களுக்குமானது. அதே போல காதல் என்ற உணர்வும் அனைவருக்கும் பொதுவானது. ஒரு காதல் இப்படி தான் வரவேண்டும், இந்த இருவருக்குள் தான் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு தன்பாலின சேர்க்கையாளர்களின் உணர்வுபூர்வமான காதலை முகம் சுளிக்கும் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இவை எதுவும் இல்லாமல், அவர்களது அந்த காதலை, காமத்தை கடந்து உணர்வுபூர்வமாக படைக்க முடியும் என்பதை இயக்குனர் ஜெயராஜ் பழனி நிருபித்துள்ளார்.
மொத்தத்தில் ஷார்ட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ பார்வையாளர்களை கவரும் உண்மையான அன்பின் சக்தி.