வாழை விமர்சனம் : வாழை மனதைக் கவரும் சமரசமற்ற, உணர்ச்சி போராட்டங்களின் வெளிப்பாடு | ரேட்டிங்: 4/5
டிஸ்னி ஹாட்ஸ்டார், நவ்வி ஸ்டுடியோஸ், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரித்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட இதில் சிவனைந்தானாக பொன்வேல், சேகராக ராகுல், சிவனாய்ந்தானின் தாயாக ஜானகி, வேம்புவாக திவ்யா துரைசாமி, கனியாக கலையரசன், பூங்கொடியாக நிகிலா விமல், தரகராக பத்மன்,ஜே. சதீஷ்குமார் வர்த்தகராக மற்றும் பலர் நடித்துள்ளனர்.வாழை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர்: யுகபாரதி, விவேக், மாரி செல்வராஜ், ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்,கலை இயக்குனர்: குமார் கங்கப்பன், எடிட்டர்: சூரிய பிரதமன், அதிரடி ஆக்ஷன்: திலிப் சுப்பராயன்,நடனம்: சாண்டி, ஒலிப்பதிவு: சுரேன், ஒலி வடிவமைப்பாளர்: சுரேன்.ஜி, அழகியகூத்தன்.எஸ், ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ரீ ஸ்வர்ணா, டி.ரவி, ஒப்பனை: ஆர்.கணபதி, ஸ்டில்ஸ்: ஜெயக்குமார் வைரவன், விளம்பர வடிவமைப்பாளர்: கபிலன், விஎஃப்எக்ஸ்: ஹரிஹர சுதன், டிஐ வண்ணக்காரர்: பிரசாத் சோமசேகர், டிஐ லைன் தயாரிப்பாளர்: எம்.எல்.விஜயகுமார், நிர்வாகத் தயாரிப்பாளர்: வெங்கட் ஆறுமுகம், பிஆர்ஒ: சதீஷ் (ஏஐஎம்)
90களின் காலகட்டத்தில் திருநெல்வேலியிலுள்ள புளியங்குளம் கிராமத்தில் வசிக்கும் சிவனைந்தானின் சிறு வயதில் நடந்த சம்பவங்களைப் பற்றி படம் சித்தரிக்கிறது. எட்டாவது படிக்கும் தந்தையை இழந்த சிறுவன் சிவனைந்தான் (பொன்வேல்) தாய் மற்றும் சகோதரி வேம்பு வாழைத்தாரை சுமக்கும் கூலி வேலை செய்து அவனை படிக்க வைக்கிறார்கள். விடுமுறை நாட்களில் குடும்பச் சூழல் காரணமாக வாழைத்தாரினை சுமக்கும் பணியை கட்டாயத்தின் பேரில் செய்கிறான் சிறுவன் சிவனைந்தான். அவனது பள்ளி நண்பன் சேகரிடம் (ராகுல்) சேர்ந்து வாழைத்தோப்பிற்கு சென்று வேலைக்கு செல்லாமல் இருக்க பல திட்டங்களை போட்டாலும் இறுதியில் தன் தாயாரின் வற்புறுத்தலால் வேறு வழியின்றி தொடரும் சுழலே அமைகிறது. சிவனைந்தான் படிப்பில் முதல் மாணவன் என்பதால் பள்ளிக்கு செல்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன் மற்றும் ரஜினி ரசிகன் அதுமட்டுமில்லாமல்; பள்ளி ஆசிரியர் பூங்கொடி (நிகிலா விமல்) டீச்சர் மீதான இனம்புரியா அன்பு கடினமான வேலையில் சிறிது ஆறுதல் கொடுக்கிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் கனி (கலையரசன்) வாழைத்தோப்பில் குறைவான சம்பளத்திற்கு வேலை செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், சம்பள உயர்வு கேட்டும் ஊர்க்காரரர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த இவர்களின் எதிர்ப்பை சமாளிக்க சம்பள உயர்வுக்கு ஒப்புக் கொள்கிறார் வாழைத்தோப்பு முதலாளி. வேலை முடிந்து திரும்பும் போது, அவர்களுக்கு வண்டி போக்குவரத்து வசதியை தனியே செய்யாமல், ஆபத்தான வகையில் வண்டியில் வாழைத்தார் மேலேயே உட்கார்ந்தபடி வரச்சொல்கிறார். இதனிடையே பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆட பேர் கொடுக்கிறான் சிவனைந்தான். வார இறுதி நாளான சனிக்கிழமை அன்று நடன பயிற்சி செய்ய பள்ளிக்கு ஆசிரியர் பூங்கொடி வரச்சொல்கிறார். ஆனால் தாய் உடல் நலமின்றி இருக்க சிவனைந்தானை வேலைக்கு அழைத்துச் செல்கிறார் அக்கா வேம்பு, பின்னர் அவனின் விருப்பத்திற்கு செவி சாய்த்து நடன பயிற்சி செய்ய பள்ளிக்கு அனுப்பி விட்டு தான் மட்டும் வேலைக்கு செல்கிறார். அதன் பின்; என்ன நடந்தது? வேலைக்கு செல்லாமல் பள்ளிக்கு சென்றதால் சிவனைந்தானுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு என்ன? தாயின் கோபத்திற்கு உள்ளானானா சிவனைந்தான்? அவனுக்கு ஏற்பட்ட சோகம் என்ன? என்பதே பதபதைக்கும் க்ளைமேக்ஸ்.
சிவனைந்தானாக பொன்வேல், சேகராக ராகுல் இரண்டு சிறுவர்களின் நடிப்பு அசத்தல் ரகம். ரஜினி, கமல் ரசிகர்களாக அவர்கள் செய்யும் அலப்பறை, பூங்கொடி டீச்சரிடம் பேசுவதற்கும், நல்ல பெயர் வாங்குவதற்கும் எடுக்கும் முயற்சிகள், வேலைக்கு செல்லாமல் இருக்க போடும் திட்டங்கள், தாயின் பாசத்திற்கு அடிபணியும் பண்புகள், நகைச்சுவையுடன் கலகலக்கும் பள்ளி வாழ்க்கை, வட்டார மொழி பேசி அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் விதத்தில் கவனிக்க வைத்திருக்கும் விதம் விருதுக்கு நிச்சயம் தகுதியானவர்கள்.
சிவனாய்ந்தானின் தாயாக ஜானகி, வேம்புவாக திவ்யா துரைசாமி, கனியாக கலையரசன், பூங்கொடியாக நிகிலா விமல், தரகராக பத்மன், முதலாளியாக ஜே. சதீஷ்குமார் மற்றும் கிராமத்து முகங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள்.
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர்: யுகபாரதி, விவேக், மாரி செல்வராஜ், ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்,கலை இயக்குனர்: குமார் கங்கப்பன், எடிட்டர்: சூரிய பிரதமன், அதிரடி ஆக்ஷன்: திலிப் சுப்பராயன்,நடனம்: சாண்டி, ஒலிப்பதிவு: சுரேன், ஒலி வடிவமைப்பாளர்: சுரேன்.ஜி, அழகியகூத்தன்.எஸ் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பணி அளப்பறியது. 90களின் காலகட்டத்தையும், இசையையும், காட்சிக்கோணங்களையும், ஒலியைiயும் ரசிக்கும் வண்ணம் அழகிய மாலையாக தொகுத்து கொடுத்து, கிராமத்து வாழ்வியலை கதையின் சாரம்சத்தை புரிந்து கொண்டு வித்தியாசத்துடன், விறுவிறுப்புடன் கொடுத்துள்ளனர்.
மாரி செல்வராஜ் தனது முந்தைய படைப்புகளில், சாதிய ஒடுக்குமுறையின் கடுமையான யதார்த்தங்களை ஆராய்ந்து கொடுத்தவர், ‘வாழை’ மூலம், தன்னுடைய சிறு வயது உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி பள்ளி மாணவர்களின் கண்ணோட்டத்தில் கதையைச் சொல்ல விரும்பி புதிய கோணத்தில் தைரியமான கதை அணுகுமுறையும் இந்தப் படத்தைத் தனித்து நிற்க செய்கிறது. பல குடும்பங்கள் அன்றாடம் வாழ்வதற்கு படும் சிரமங்கள் இப்படத்தில் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பணக்காரர்கள் ஏழைகளை எப்படிச் சுரண்டுகிறார்கள், உழைப்புக்குக் கூலி கொடுக்காமல் இருப்பது நன்றாகக் காட்டப்படுகிறது. முடிந்தவரை யதார்த்தத்திற்கு நெருக்கமாக எடுக்கப்பட்ட நிஜ வாழ்க்கை சம்பவம். படத்தில் வரும் புளியங்குலம் கிராமம், தனித்தன்மை வாய்ந்த தேர்ந்த நடிகர்கள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்;கள், க்ளைமேக்ஸ் காட்சி என்று தனது உலகிற்குள் மாரி செல்வராஜ் அழைத்துச் சென்று யதார்த்தமான வாழ்க்கையை உணரச் செய்திருப்பதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்;. பாராட்டுக்கள்.
மொத்தத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார், நவ்வி ஸ்டுடியோஸ், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரித்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டிருக்கும் வாழை மனதைக் கவரும் சமரசமற்ற, உணர்ச்சி போராட்டங்களின் வெளிப்பாடு.