லைன்மேன் சினிமா விமர்சனம் : லைன்மேன் தங்கள் திறமைகளை வெளிக்கொணரத் துடிக்கும் நாளைய விஞ்ஞானிகளுக்கு இந்தப் படம் சமர்ப்பணம் | ரேட்டிங்: 2.5/5
சார்லி, ஜெகன் பாலாஜி, சரண்யா ரவிச்சந்திரன், விநாயகராஜ், அருண்பிரசாத், தமிழ், அதிதி பாலன் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு விஷ்ணு கே ராஜா, இசை தீபக் நந்தகுமார், எடிட்டிங் சிவராஜ், இயக்கம் உதய் குமார் மற்றும் வினோத் சேகர்.
வினோத் சேகர் மற்றும் தினகரன் பாபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.
மக்கள் தொடர்பு நிகில்முருகன்.
லைன்மேன் படத்தை OTT பிளாட்ஃபார்ம் ஆஹாவில் பார்க்கலாம்.
தூத்துக்குடி அருகே உள்ள உப்பள கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் லைன்மேன் சுப்பையா (சார்லி). அவர் மகன் செந்தில் (ஜெகன் பாலாஜி). ஒரு இளம் எலக்ட்ரானிக் என்ஜினீயரான அவர், சூரிய ஒளி மறைந்ததும் தெரு விளக்குத் தானாக எரிவது போலவும் ஒளி வந்ததும் அணைவது போலவும், ஆட்டோ-சன் சுவிட்ச் என்ற சாதனத்தை கண்டுபிடிக்கிறார். இந்த கண்டுபிடிப்பின் மூலம் தனது கிராமத்தினருக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இதை அரசு அங்கீகரித்தால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம் என்பது அவரது எண்ணம். செந்தில் தனது திட்டத்திற்கு கலெக்டரிடம் ஒப்புதல் பெறவும், தனது திட்டத்தை மதிப்பீடு செய்து அதை செயல்படுத்தவும், ஆட்சியரைச் சந்திக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு தினமும் மனு கொடுக்க செல்கிறார். ஆனால் ஆட்சியாரை சந்திக்க முடியவில்லை. மறுபுறம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு உப்பு சப்ளை செய்யும் தாளமுதன், உப்பளம் பகுதியில் கூலி வேலை செய்யும் மக்களுக்கு பணத்தை அதிக கந்து வட்டிக்கு கொடுத்து அந்த மக்களை கொடுமைப்படுத்தி வருகிறார், மேலும் தனது உப்பளத்திற்கு திருட்டு கரண்டையும் எடுத்து பயன்படுத்துகிறார். மேலும் சுப்பையாவின் தொடர்ச்சியான முயற்சியில் சட்டவிரோதமான மின்சாரத் திருட்டு தடுக்கப்பட்டதால் தாளமுதன் சார்லி குடும்பத்தினர் மீது பகைமையுடன் இருந்து வருகிறார். மேலும் சென்னைக்கு வந்து தமிழக முதல்வரைச் சந்தித்து மனு கொடுக்கவும் போராடுகிறார். ஆனால் அதிலும் தோல்வியே சந்திக்கிறார். புதிய கண்டுபிடிப்புகள் மீதான மோகத்தால் அவரை இழிவாகப் பார்க்கும் மக்கள் மத்தியில், அரசு மின்சாரத் துறையில் எலக்ட்ரிக் லைன்மேனாக இருக்கும் அவரது தந்தை சுப்பையாவின் ஆதரவும் ஊக்கமும் தான் செந்தில் தன் கண்டுபிடிப்புக்கான அங்கீகாரம் கிடைக்க போராடுகிறார். உலகிற்கு நம் தகுதியை நிரூபிக்க அசாதாரணமான ஒன்றைச் செய்யத் தொடங்கும் போது அவர் பல சவால்கள் மற்றும் மிரட்டல் முதல் கொலை முயற்சி வரை எதிர்கொள்கிறார். தனது கிராமத்தில் மின்சாரத்தை சேமிக்கும் சாதனத்தை அமைப்பதில் ஆர்வமுள்ள எலக்ட்ரானிக்ஸ் ஆர்வலரான செந்தில் இந்த சாவல்களை மற்றும் கொலை மிரட்டல்களை முறியடித்து தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர் சார்லி ஒரு முக்கிய பாத்திரத்தில் கதையின் ஆழத்தை கொண்டு வருகிறார். ஜெகன் தனது கனவை நிஜமாக்க போராடும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அப்பா-மகன் பிணைப்பு நம்மை வேரூன்ற வைக்கிறது.
சரண்யா ரவிச்சந்திரன், விநாயகராஜ், அருண்பிரசாத், நச்சு ஆலைக்கு எதிராகப் போராடும் தமிழ், ஆட்சியராக ஒரு காட்சியில் மட்டுமே தோன்றும் அதிதி பாலன் உட்பட துணை கதாபாத்திரங்கள், நேர்த்தியான நடிப்பை வழங்கி இருக்கின்றனர்.
தூத்துக்குடியில் உள்ள கிராமத்தின் சாரத்தை திறம்பட படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு கே ராஜா. தீபக் நந்தகுமார் இசை, சிவராஜ் படத்தொகுப்பு கிராமிய வாழ்க்கையின் யதார்த்தமான சித்தரிப்புக்கு பக்க பலமாக உள்ளது.
தூத்துக்குடியில் ஒரு மனஉறுதியான நபரின் நிஜ வாழ்க்கைக் கதையை அவர் எதிர் கொண்ட இன்னல்களும், பல போராட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான அத்தனை சாத்தியங்களுடன் திரைக்கதை அமைத்து யதார்த்தமாகக் காட்சிப்படுத்தி இயக்கியுள்ளனர் உதய் குமார் மற்றும் வினோத் சேகர்.
மொத்தத்தில் வினோத் சேகர் மற்றும் தினகரன் பாபு இணைந்து தயாரித்துள்ள லைன்மேன் தங்கள் திறமைகளை வெளிக்கொணரத் துடிக்கும் நாளைய விஞ்ஞானிகளுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்.