லியோ சினிமா விமர்சனம் : லியோ ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஆக்‌ஷன் அதிரடியில் ஆர்ப்பரிக்கும் கர்ஜனை | ரேட்டிங்: 4/5

0
1139

லியோ சினிமா விமர்சனம் : லியோ ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஆக்‌ஷன் அதிரடியில் ஆர்ப்பரிக்கும் கர்ஜனை | ரேட்டிங்: 4/5

நடிகர்கள் : தளபதி விஜய், சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி, குழந்தை இயல், ஜார்ஜ் மரியன், மடோனா செபாஸ்டியன், ஜாஃபர் சாதிக் மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு : எஸ் லலித் குமார்
இணை தயாரிப்பு : ஜெகதீஷ் பழனிசாமி
தயாரிப்பு இல்லம் : செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ
எழுத்து – இயக்கம் : லோகேஷ் கனகராஜ்
வசனங்கள் : லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், தீரஜ் வைத்தி
இசை : அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு : மனோஜ் பரமஹம்சா
எடிட்டிங் : பிலோமின் ராஜ்
தயாரிப்பு வடிவமைப்பு : என் சதீஸ் குமார்
சண்டைக்காட்சிகள் : அன்பறிவு
நடனம் : தினேஷ்
ஆடைகள் : பல்லவி சிங், பிரவீன் ராஜா, ஏகா லக்கானி
விளம்பர வடிவமைப்புகள் : கோபி பிரசன்னா
ஒலி வடிவமைப்பு : ஒத்திசைவு சினிமா
நிர்வாகத் தயாரிப்பாளர் : ராம்குமார் பாலசுப்ரமணியன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது (V4U மீடியா)

ஹிமாச்சலப் பிரதேசத்தில், சிம்லா மாவட்டத்தில் உள்ள தியோக் நகராட்சியில் ‘லியோ’ ஹைனா என்ற விலங்கை அடக்கும் ஆக்‌ஷன் காட்சியுடன் தொடங்குகிறது. விலங்குகளை மீட்பவரும் காபி கடை உரிமையாளரான பார்த்திபன் (விஜய்) நகரத்தை ஹைனா தாக்குதலில் இருந்து மீட்ட பிறகு உள்ளூர் ஹீரோவாக மாறுகிறார். அவர் தனது மனைவி சத்யாவுக்கு (த்ரிஷா) சாதுவான கணவராகவும், அவர்களின் குழந்தைகள் சித்தார்த் மற்றும் மதி ஆகியோருக்கு சிறந்த அப்பாவாகவும் ஒரு சாதாரண குடும்பஸ்தராக மகிழ்ச்சியாக பனி படர்ந்த உலகில் வாழ்கிறார். ஒரு நாள் கூலிப்படை தலைவன் மிஷ்கின் தலைமையிலான குண்டர்கள் பார்த்திபனின் ஓட்டலை தாக்குகிறார்கள், அவர்கள் அவரது மகளையும் அங்குள்ள ஒரு ஊழியரையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள். வேறு வழியின்றி, பார்த்திபன் குண்டர்களை கொன்றுவிடுகிறார், இது அவரது குடும்பத்தை சிக்கலில் தள்ளுகிறது. அவரது காபி ஷாப்பில் நடந்த சம்பவத்தால் இந்தியா முழுவதும் ஊடகங்கள் மூலம் தேவையற்ற கவனத்தைப் பெறுகிறது. எனவே, பார்த்திபனை பற்றி கேள்விப்படும் சகோதரர்கள் அந்தோணி தாஸ் (சஞ்சய் தத்) மற்றும் ஹரோல்ட் தாஸ் (அர்ஜுன்), அவர் இறந்ததாக நினைக்கும் மகனான லியோ தாஸ் (விஜய்) தான் பார்த்திபன் என்று கருதுகின்றனர். சகோதரர்கள் அந்தோணி தாஸ் மற்றும் ஹரோல்ட் தாஸ் அவர்களின் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்திற்கு முன்னோடியாக புகையிலை வியாபாரத்தை நடத்துகிறார்கள். அந்தோணியின் மகன், லியோ (விஜய்) போதைப்பொருள்கள் கடத்தல் சம்பவங்களுக்கு உறுதுணையாக சக்திவாய்ந்த  ஒருவராக திகழ்கிறார். தான் செய்யும் தொழில் தடையின்றி பிரம்மாண்டமாக  நடக்க வேண்டும் என்று மூடநம்பிக்கையில் மூழ்கி இருக்கும் அந்தோணி தாஸ் தான் பெற்ற மகளை நரபலி கொடுக்கும் முயற்சியில் ஈடுபட, லியோ அந்த மூடநம்பிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடக்கும் அந்த பயங்கரமான சம்பவத்தில் லியோவும், அவரது சகோதரியும் சேர்ந்து புகையிலை தொழிற்சாலையை தீ வைத்து எரிக்கிறார்கள். அப்போது சித்தப்பா ஹரோல்ட் தாஸ் சகோதரியை கொல்ல, தந்தை அந்தோணி தாஸ் லியோவை சுடுகிறார். தொழிற்சாலை தீயில் எரிய, லியோவும் கொல்லப்படுகிறார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தாஸ் சகோதரர்கள் பார்த்திபன் மற்றும் லியோவுடன் அவரது விசித்திரமான ஒற்றுமையைப் பற்றி கண்டுபிடிக்கின்றனர். துப்பாக்கிகள் ஏந்திய நிலையில், பார்த்திபன் லியோ தானா என்பதை அறிய அந்தச் சிறிய நகரத்தில் அவர்கள் களமிறங்குகிறார்கள். பார்த்திபன் தன்னையும் தன் குடும்பத்தையும் காக்க போராடும் போது, படத்தின் மற்ற பகுதிகள் உண்மையை வெளிகொணர அவர்கள் செய்யும் முயற்சிகளை சுற்றி வருகிறது. உண்மையில் யார் இந்த லியோ தாஸ்? ஏன் அந்தோணி தாஸ் பெற்ற பிள்ளைகளை கொல்ல முன்வந்தார்? இந்த குழப்பத்தில் இருந்து பார்த்திபன் எப்படி வெளியேறினார்? பார்த்திபனாக மாறி தன் குடும்பத்தை காப்பாற்ற லியோ தனது சொந்த மரணத்தை பொய்யாக்கினாரா அல்லது அவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கும் வெவ்வேறு நபர்களா? என்பதுதான் மீதிக்கதை.
பார்த்திபனாகவும், லியோவாகவும் விஜய்யின் நடிப்பு திறமையை துல்லியமாக வெளிப்படுத்துகிறார். அவர் உண்மையில் பார்த்திபனா அல்லது பார்த்திபனை மாறிய லியோவா என்று பார்வையாளர்களை கடைசி வரை யூகிக்க வைக்கிறார். அவர் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக ஜொலித்து, லியோ இல்லை என்று கணவனாக த்ரிஷாவிடம் சண்டையிடுகிறார், தன் குடும்பத்திற்கு எந்தத் தீங்கும் வரக்கூடாது என்பதற்காக படுக்கையறை ஜன்னலுக்கு வெளியே பதட்டத்துடன் பார்த்துக் கொண்டே உணர்ச்சிகரமான தருணங்களுக்கு இடையில் அவர் திறமையை வெளிப்படுத்துகிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது நட்சத்திர பிரசன்னம், உடல் மொழியும் மிளிர்கிறது. பார்த்திபன் அவரது சிகை அலங்காரம் வசீகரமாகவும், லியோ தாஸாக இளைஞராக மின்னுகிறார். ஒரு நடிகராக அவரது பல்துறை திறனை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
வில்லனாக அந்தோணி தாஸ் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் மிக நேர்த்தியுடன் அடியெடுத்து வைத்து குறிப்பிடத்தக்க வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அழகிய த்ரிஷாவின் பாத்திரம் பெரிய முக்கியத்துவம் பெறவில்லை என்றாலும்; ஒரு பாராட்டத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார்.
மற்றொரு வில்லன் அர்ஜுன் ஹரோல்ட் தாஸ் கதாபாத்திரத்தில் ஸ்டைலையும் கவர்ச்சியையும் ஈர்க்கக்கூடிய வகையில் நடிப்பை வழங்கியுள்ளார்.
ரேஞ்சர் ஜோஷியாக கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், கூலிப்படை தலைவனாக மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி, குழந்தை இயல், ஜார்ஜ் மரியன், மடோனா செபாஸ்டியன், ஜாஃபர் சாதிக் உள்ளிட்டோரின் பங்களிப்பு திரைக்கதையின் ஆழத்தை மேம்படுத்தி வலுவான நடிப்பை தந்து படத்தை முழுமையாக உயர்த்தி நிறுத்தி இருக்கிறார்கள்.
மனோஜ் பரமஹம்சா ஹிமாச்சலப் பிரதேசத்தில், பனி படர்ந்த தியோகின் அழகையும், ஃப்ளாஷ்பேக் காட்சியில் வரும் ஆக்ஷன் பிளாக்கையும் மற்றும் உயர்தர காட்சிகளுடன் புத்துணர்ச்சி தரும் வகையில் பிரமாதமாக படம் பிடித்திருக்கிறார்.
நன்கு வடிவமைக்கப்பட்ட அன்பறிவு ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறது.
வேகத்தை கூட்டும் பிலோமின் ராஜின் படத்தொகுப்பு, மற்றும் வசீகரிக்கும் ஹைனா மற்றும் கழுகு VFX காட்சித் தரம் அருமை.
அனிருத், மீண்டும் ஒரு முறை மயக்கும் இசையுடன் தனது முழு பலத்தையும் கொண்டு உயர்தர பின்னணி ஸ்கோரை வழங்குவதன் மூலம் ஒட்டு மொத்த படத்தையும் விறுவிறுப்பாக நகர்த்தி தொடர் வெற்றிகளை அனுபவித்து வருகிறார்.
லியோ தாஸின் அடையாளத்தைச் சுற்றி சஸ்பென்ஸ் கலந்த ஆக்ஷன் திரில்லர் கதைகளத்தில் விஜய்க்கு ஒரு பெரிய அறிமுக என்ட்ரி மற்றும் பஞ்ச் டயலாக்குகளை வழங்குவதைத் தவிர்த்து, அவரது கதாபாத்திரத்தை உயர்த்தி நிறுத்தி உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முதல் பாதியில், பிரமாண்டத்தின் கவர்ந்திழுத்து நேர்த்தியாகக் கையாண்டார், இரண்டாவது பாதி சஞ்சய் தத் நடித்த ஆண்டனியின் கதாபாத்திரத்திரம் மற்றும் அர்ஜுன் நடித்த ஹரோல்ட் தாஸ் கதாபாத்திரத்தின் அறிமுகத்துடன் ஆக்ஷன்-பேக் காட்சிகளுடன் ரோலர் கோஸ்டரில் பயணித்த அனுபவத்தை அளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
மொத்தத்தில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி தயாரித்துள்ள லியோ ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஆக்‌ஷன் அதிரடியில் ஆர்ப்பரிக்கும் கர்ஜனை.