லாரா சினிமா விமர்சனம் : லாரா பல திருப்பங்களைக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான இன்வெஸ்டிகேஷன் கிரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5

0
415

லாரா சினிமா விமர்சனம் : லாரா பல திருப்பங்களைக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான இன்வெஸ்டிகேஷன் கிரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள் : அசோக் குமார், கார்த்திகேசன், அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, பாலா, எஸ்.கே. பாபு, திலீப்குமார், இ.எஸ்.பிரதீப் நடித்துள்ளனர்.

மணி மூர்த்தி இயக்கி உள்ளார் . ஒளிப்பதிவு ஆர் ஜே ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார்.கார்த்திகேசன் தயாரித்துள்ளார்.
ஒளிப்பதிவு  ஆர்.ஜே.ரவீன். இசை ரகு ஸ்ரவன் குமார். எடிட்டிங் வலர்ப்பாண்டி. இயக்கம் மணி மூர்த்தி. எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் கார்த்திகேச​ன் இப்படத்தினை தயாரித்திருக்கிறார். பத்திரிக்கை தொடர்பு சக்தி சரவணன்.

காரைக்கால் கடற்கரையில் ஒதுங்கி உள்ளதாக நிரவி காவல் நிலையத்திற்கு ஒரு தகவல் வருகிறது. முகம் தெரியாத பெண்ணின் உடல், உள்ளூர் போலீசாருக்கு கடும் சவாலாக உள்ளது. அதே சமயம் டிரைவர் லாரன்ஸ் (பாலா) ஏற்கனவே கொடுத்த புகாரின் அடிப்படையில் காணாமல் போன தனது மனைவி ஸ்டெல்லாவை (வெண்மதி) கண்டுபிடித்து விட்டார்களா என்று காவல் நிலையத்தில் வாக்குவாதம் செய்கிறார்.  ஆய்வாளர் கார்த்திகேசன் (கார்த்திகேசன்) இந்த காணாமல் போன வழக்கின் விசாரணையைத் தொடங்குகிறார். அவருக்கு உதவியாகத் துணை ஆய்வாளர், காவலர்கள் செயல்படுகிறார்கள். ஓட்டுனர் லாரன்ஸ் தன் புகாரில் குறிப்பிட்ட சில அடையாளங்களை வைத்து அது லாரன்ஸின் மனைவி ஸ்டெல்லாவாக இருக்கலாம் என்று முடிவு செய்கிறார் ஆய்வாளர் கார்த்திகேசன். ஆனால் அது தனது மனைவி இல்லை என்று லாரன்ஸ் மறுக்கிறான்.ஏற்கனவே இன்ஸ்பெக்டர் கார்த்திகேசனுடன் பகையில் இருக்கும் அந்த தொகுதியின் கவுன்சிலர் தாஸ் (எஸ்.கே.பாபு), வேறொரு உடலை கொடுத்து வழக்கை முடிக்க முயல்கிறாரா என்று இன்ஸ்பெக்டரை ஒருமையில் கத்துகிறார்.அந்த தொகுதி எம்.எல்.ஏ. ஃபரூக் யாசின் (மாத்யூ வர்கீஸ்), மூலம் கவுன்சிலர் தாஸ் மற்றொரு வழியில் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறார். இன்ஸ்பெக்டர் கார்த்திகேசன் தனது புலனாய்வு அணுகுமுறையால் வழக்கைத் தீர்க்க இடைவிடாமல் போராடுகிறார். அருகில் அதே உடையில் ஒரு பெண்ணின் சிசிடிவி காட்சிகளைப் பார்க்கும்போது கதை தீவிரமடைகிறது. மேலும், ஃபரூக் யாசின் எம்.எல்.ஏ.வின் அரசியல் செல்வாக்கு, சிங்கப்பூர் செல்லும் சந்தேக நபர்களான சத்யா (திலீப் குமார்) மற்றும் தினேஷ் (பிரதீப்), ஸ்டெல்லா (வெண்மதி), மற்றும் ஜெயா (வர்ஷினி வெங்கட்) ஆகியோர் இந்த வழக்கின் தொடர்ச்சிகளுக்குள் புரியாத புதிராக சேர்ந்து இந்த வழக்கின் மர்மத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.இந்த குழப்பத்தை அவிழ்க்கும் பணியில் ஆய்வாளர் கார்த்திகேசன் செயல்படும் போது, எம்.எல்.ஏ.வின் மகன் மஹரூஃப் (அசோக் குமார்) மூலம் லாரா (அனுஸ்ரேயா ராஜன்) பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளிவருகிறது.அது என்ன? லாரா யார்? சடலமாகக் கிடைத்த பெண் யார்? ஆய்வாளர் கார்த்திகேசன் உண்மையான கொலை குற்றவாளியை கண்டு பிடித்தாரா? காணாமல் போன லாரன்ஸ் மனைவி என்ன ஆனார்? போன்ற கேள்விகளுக்கு  பரபரப்பான திருப்பங்களுடன் நகரும் திரைக்கதை விடைசொல்கிறது.

ஆய்வாளராக வேடத்தில் வரும் கார்த்திகேயன் தனது முதல் படத்திலேயே தனக்கென தனித்துவமான பாணியைக் காட்டியுள்ளார். பொதுவாக, போலீஸ் வேடத்தில் நடிக்கும் பல நடிகர்கள் விசாரணையின் போது தங்கள் கதாபாத்திரத்தின் ஒரு பகுதியாக புகைபிடிப்பார்கள். ஒரு சிலர் கொஞ்சம் மதுவும் அருந்துவார்கள்.  ஆனால் லாராவில் வித்தியாசமாக டீ குடிக்கும் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனின் கேரக்டரும், அவரது முகபாவங்களும் சிறப்பாக உள்ளன. படத்தையும் அவரே தயாரித்துள்ளார்.

எம்.எல்.ஏ.வின் மகன் மஹரூஃப் கதாபாத்திரத்தில் குறைந்த காட்சிகளில் அசோக் குமார் தோன்றினாலும் தனது இருப்பை நன்றாக உணர்த்தியிருக்கிறார். ஆனால் அவர் முகத்தில் சற்று கூடுதலாக உள்ள ஒப்பனை அவர் கண்கலங்கும் காட்சிகளில் ஓவர் ஆக்டிங் செய்வது போல் தெரிகிறது.

லாராவாக அனுஷ்ரேயா ராஜன், எம்.எல்.ஏ. ஃபரூக் யாசினாக மாத்யூ வர்கீஸ், சிங்கப்பூர் செல்லும் சந்தேக நபர்கள் சத்யா (திலீப் குமார்) மற்றும் தினேஷ் (பிரதீப்), ஸ்டெல்லாவாக வெண்மதி, மற்றும் ஜெயாவாக வர்ஷினி வெங்கட், ஓட்டுனர் லாரன்ஸாக பாலா, கவுன்சிலர் தாஸாக எஸ்.கே.பாபு உட்பட அனைத்து நடிகர்கள் அழுத்தமான நடிப்பு உண்மை நிகழ்வுகளின தொகுப்பைப் பார்ப்பது ​போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

ஆர் ஜே ரவீன் ஒளிப்பதிவு, எடிட்டிங் வலர்ப்பாண்டி, ரகு ஸ்ரவண் குமார் இசை மற்றும் பின்னணி ஸ்கோர், கலை இயக்குனர் உட்பட அனைத்து தொழில்நுட்ப வல்லுனரகளின் நேர்த்தியான பங்களிப்பு ஒரு க்ரைம் திரில்லருக்குத் தேவையான விறுவிறுப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

கடற்கரையில் ஓரம் கரை ஒதுங்கிய மோசமாக சிதைந்த பெண்ணின் உடல் யாருடையது என்று புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் கதைகளத்தில் ஹவாலா பணம் மோசடி, பாலியல் தொழில் செய்யும் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள், ஆதரவற்றோர் இல்லம், ஆயுதங்கள் பதுக்கும் தீவிரவாதிகள் என ஒரே நிறத்தில் ஆடை அணிந்த மூன்று பெண்களை பற்றி பரபரப்பான திரைக்கதை அமைத்து காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாகவும் சுவரஸ்யமாகவும் நகர்த்தி பார்வையாளர்களுக்கு கவர்ந்திருக்கிறார் இயக்குனர் மணி மூர்த்தி.

மொத்தத்தில் எம்.கே.ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் கார்த்திகேசன் தயாரித்திருக்கும் லாரா பல திருப்பங்களைக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான இன்வெஸ்டிகேஷன் கிரைம் த்ரில்லர்.