லப்பர் பந்து சினிமா விமர்சனம் : லப்பர் பந்து கிரிக்கெட்டில் சிக்ஸர் மழை ரசிகர்களை குஷி படுத்துவது போல், வித்தியாசமான களத்தில் அழுத்தமான பதிவில் வசூல் மழையில் வாகை சூடும் | ரேட்டிங்: 3.5/5
நட்சத்திரங்கள் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா , சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவதர்ஷினி, ஜென்சன் திவாகர், டிஎஸ்கே
இயக்கம் : தமிழரசன் பச்சமுத்து
இசையமைப்பாளர்: ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு இயக்குனர்: தினேஷ் புருஷோத்தமன்
எடிட்டர்: மதன் ஜி
கலை இயக்குனர்: வீரமணி கணேசன்
பாடல் வரிகள்: மோகன் ராஜன்
ஆடை வடிவமைப்பாளர்: தினேஷ் மனோகரன்
ஸ்டண்ட்: அபிஷேக் ஸ்ரீனிவாஸ்
ஒலி வடிவமைப்பு: டி உதயகுமார்
வண்ணம்: பிரசாத் சோமசேகர்
இணை இயக்குநர்கள்: விஜய் பிரபாகரன் செல்லா, மம்தா எம்.கே
இணை ஆசிரியர்:விநாயகமூர்த்தி தென்னரசு
விளம்பர வடிவமைப்பு : கண்ணதாசன் டிகேடி தயாரிப்பு நிர்வாகிகள்: சாதிக், எஸ் நாகராஜன் ஸ்டில்ஸ்: பிரிதிவிராஜன் என்
மக்கள் தொடர்பு : ஏ. ஜான்
தயாரிப்பு நிர்வாகி: ஏ.பி.பால்பாண்டி
நிர்வாக தயாரிப்பாளர்: ஷ்ரவந்தி சாய்நாத்
இணை தயாரிப்பாளர்: ஏ வெங்கடேஷ் தயாரிப்பாளர்: எஸ் லக்ஷ்மன் குமார்
ஊரில் இருக்கும் ஜாலி பிரண்ட்ஸ் கிரிக்கெட் குழுவின் நட்சத்திர பிளேயராக இருக்கிறார் கெத்து தினேஷ் (அட்டகத்தி தினேஷ்). விஜயகாந்த் பாட்டு பின்னணியில் ஒலிக்க மைதானத்தில் கெத்து களம் இறங்கி கையில் மட்டையை பிடித்து ஒவ்வொரு பந்தையும் வாணவேடிக்கையாக விளசுவார். தான் அவுட் ஆகும் போது, கெத்தா நடையை கட்டி வெளியேறும் போது எதிரணி வீரர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து கொண்டாடுவதை கெத்தா ரசிப்பார். அப்படிப்பட்ட மனிதன் காதல் மனைவி யசோதாவை (ஸ்வாசிகா விஜய்) கண்டதும் ஓடி ஒளிந்து பயப்படுபவர். காலம் உருண்டோடிய நிலையில் சாதி பாகுபாடால் சொந்த கிராமத்திலேயே நிராகரிக்கப்படும் கிரிக்கெட் வீரராக இருக்கிறார் அன்பு (ஹரிஷ் கல்யாண்). எப்படியாவது தனது ஊரில் இருக்கும் ஜாலி பிரண்ட்ஸ் கிரிக்கெட் குழுவிற்காக ஆட வேண்டும் என்பது அவனது சிறுவயது கனவு. சொந்த ஊரில் வாய்ப்பு கிடைக்காததால் பல்வேறு கிரிக்கெட் குழுவில் கெஸ்ட் வீரனாக வாய்ப்பு கிடைக்கும் பொது அந்த அணிக்காக விளையாடி தன்னுடைய ஆசையை தீர்த்துக் கொள்கிறார். இந்நிலையில் கெத்து மகள் துர்காவும் (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி), அன்புவும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். அன்புக்கு முதலில் துர்கா கெத்து மகள் என்பது தெரியாது. கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது கெத்து அன்பு இடையே அவ்வப்போது சின்ன மோதல் ஏற்படுகிறது. மேலும், கெத்துவுக்கும், அன்புக்கும் ஈகோ யுத்தம் நடைபெற தன் மகளை அன்பு காதலிப்பதை அறியும் போது அவர்களுக்குள் உள்ள மோதல் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கிறது. மேலும் ஜாலி பிரண்ட்ஸ் கிரிக்கெட் குழுவை எதிர்த்து கெத்துவும், அன்பும் இணைந்து விளையாடும் போது இருவருக்கும் உள்ள பகைமை என்னவாகிறது? இருவரும் ஒரே அணியில் விளையாட காரணம் என்ன? துர்கா அன்பு காதல் என்ன ஆயிற்று? போன்ற கேள்விகளுக்கு லப்பர் பந்து விடை சொல்லும்.
கதையின் இரு நாயகர்களாக ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவருக்கும் போட்டி போட்டு நடித்துள்ளனர். ஹரிஷ் கல்யாண் கதைத் தேர்வில் அதிக அக்கறை செலுத்தியதால் மீண்டும் ஒரு வெற்றிப்படத்தில் தான் ஒரு இயல்பான நடிகன் என்பதை இந்த படத்தில் நிரூபித்து வருகிறார். அதேபோல் இளமையான மற்றும் வயதான தோற்றத்தில் தினேஷ் கெத்து கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மேலும் அவர் தோன்றும் அனைத்து காட்சிகளிலும் நுணுக்கமான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பெரிய பலம் சேர்த்துள்ளார்.
தினேஷின் மனைவி யசோதாவாக நடித்துள்ள ஸ்வாசிகா விஜய் மற்றும் கெத்து மகள் யசோதாவாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் திரைக்கதையில் முக்கிய அங்கம் வகித்து அற்புதமான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளனர்.
காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவதர்ஷினி, ஜென்சன் திவாகர், டிஎஸ்கே உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் திரையில் தங்களது இருப்பை அற்புதமாக பதிவு செய்துள்ளனர்.
தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு, ஷான் ரோல்டனின் இசை, எடிட்டர் மதன் ஜி, கலை இயக்குனர் வீரமணி கணேசன் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் நேர்த்தியான உழைப்பு படத்தை மென்மேலும் உயர தூக்கி நிறுத்தி உள்ளது.
விளையாட்டை மையப்படுத்தி சாதிய பாகுபாட்டை அடிப்படையாக கொண்டு, மனித உறவில் உள்ள சிக்கல், போட்டி மனப்பான்மை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அருமையாக திரைக்கதை அமைத்து அற்புதமாக காட்சிப்படுத்தி இயக்கி உள்ளார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து.
மொத்தத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள லப்பர் பந்து கிரிக்கெட்டில் சிக்ஸர் மழை ரசிகர்களை குஷி படுத்துவது போல், வித்தியாசமான களத்தில் அழுத்தமான பதிவில் வசூல் மழையில் வாகை சூடும்.