ரெண்டகம் விமர்சனம் : ரெண்டகம் வித்தியாசமான கோணத்தில் திருப்பங்களுடன் பயணித்து வெற்றி முகமாக திகழ்கிறது | ரேட்டிங்: 3/5

0
271

ரெண்டகம் விமர்சனம் : ரெண்டகம் வித்தியாசமான கோணத்தில் திருப்பங்களுடன் பயணித்து வெற்றி முகமாக திகழ்கிறது | ரேட்டிங்: 3/5

ஷோ பிபுள் சார்பில் ஆர்யாவும் ஆகஸ்ட் சினிமா சார்பில் ஷாஜி நடேசன் தயாரிப்பில் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பெளினி டி.பி.
இதில் அரவிந்த்சாமி, குஞ்சக்கோ போபன், ஜாக்கி ஷெராப், ஈஷா ரெப்பா, ஆடுகளம் நரேன், அமல்டா லிஸ், ஜின்ஸ் பாஸ்கர், சியாத் யாது, அனீஷ் கோபால், லபான் ரனே, ஸ்ரீகுமார் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- கதை, திரைக்கதை-எஸ்.சஞ்சீவ், வசனம்-இணை இயக்குனர்-சசிகுமரன் சிவகுரு, இணை தயாரிப்பு-சினிஹோலிக்ஸ், மிதுன் ஆபிரகாம், நிர்வாக தயாரிப்பாளர்-சனு கிலிமனூர்,தினேஷ் எஸ்.தேவன்,பிரீத்தா பிரபாகரன், ஒளிப்பதிவாளர் – கௌதம் ஷங்கர், தொகுப்பாளர்-அப்பு என் பட்டதிரி, இசை – அருள்ராஜ் கென்னடி, ஏ.எச்.காஷிப், கைலாஸ் மேனன், பின்னணி இசை-அருள்ராஜ் கென்னடி, ஒலிப்பதிவாளர்-ரங்கநாத் ரவி, ஒலி கலவை-தப்பாஸ் நாயக், கலை-சுபாஷ் கருண், ஆடை – ஸ்டெஃபி சேவியர், ஒப்பனை – ரோனிக்ஸ் சேவியர், தலைமை இணை இயக்குனர்- சாமந்தக் பிரதீப், வரிகள்-மைக் செட் ஸ்ரீராம், மணி அமுதவான், சண்டை – ஸ்டண்ட் சில்வா, நடனம்-சாஜ்னா நஜாம், இணை ஒளிப்பதிவாளர்- விஜய், மக்கள் தொடர்பு-ரியாஸ் கே.அஹ்மத்.

குஞ்சக்கோ போபன் (கிச்சா) தன் காதலி ஈஷா ரெப்பாவுடன் (கல்யாணி) ஸ்வீடன் செட்டிலாவதற்கு பணம் தேவைப்பட சித்தப்பா ஆடுகளம் நரேனிடம் உதவி கேட்கிறார். நரேன் தனக்கு தெரிந்த தாதா கும்பல் அமல்டா லிஸ்ஸிடம் அழைத்துச்செல்கிறார். பல வருடங்களுக்கு முன் மும்பையில் பெரிய கேங்ஸ்டர் அசைனாருடன் சேர்ந்து வலது கரமாக இருந்த அரவிந்த்சாமி (டேவிட்)  30 கோடி மதிப்பிலான தங்கத்தை பெங்க@ர் அருகே கடத்தி வரும் போது ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் அசைனார் இறந்துவிடுகிறார். அதில் அடிபட்ட டேவிட் கடத்திய தங்கத்தை எங்கு மறைத்து வைத்துள்ளார் என்பதை கண்டறிய இப்பொழுது நினைவிழந்த நிலையில் இருக்கும் டேவிட்டை சந்தித்து நட்பாக பழகி அவரிடம் உள்ள விலைமதிப்புள்ள தங்கம் இருக்கும் தகவலை ஒரு மாதத்திற்குள் கேட்டறிந்து சொன்னால் ஐந்து லட்சம் தருவதாக அமல்டா குஞ்சக்கோ போபனிடம் சொல்கிறார். இதற்கு சம்மதம் தெரிவிக்கும் குஞ்சக்கோ, சினிமா தியேட்டரில் கேன்டீன் வைத்திருக்கும் அரவிந்த்சாமியுடன் அறிமுகமாகி நல்ல நட்புடன் பழகி வருகிறார். எவ்வளவு முயன்றும் அப்பாவியாக தெரியும் அரவிந்த்சாமியிடமிருந்து உண்மையை வரவழைக்க முடியாமல் குஞ்சக்கோ தவிக்கிறார். அதன் பின் புதிய காரை பெங்க@ரில் ஒப்படைத்து வர வேண்டும் என்று நம்பகத்தன்மையோடு பேசி அரவிந்த்சாமியை அழைத்துக்கொண்டு குஞ்சக்கோ போபன் பயணிக்கிறார். கோவாவில் தங்க நேரிடும் போது பாரில் நடக்கும் கைகலப்பில் அரவிந்த்சாமி குஞ்சக்கோ போபனை சண்டை போட்டு காப்பாற்றுகிறார். இதில் குடிபோதையில் குஞ்சக்கோ தனக்கு கொடுத்த வேலையை பற்றி அரவிந்த்சாமியிடம் உலறிவிடுகிறார். அதைக் கேட்கும் அரவிந்தசாமி குஞ்சக்கோவிற்கு அதிர்ச்சி தரும் செய்தியை சொல்கிறார்? அது என்ன? யார் டேவிட்? யார் கிச்சா? என்பதே படத்தின் மீதிக் கதை.

அரவிந்த்சாமி  தாதா அசைனாரின் வலது கரம், கொடூரமான கேங்ஸ்டர் டேவிட் என்று சித்தரித்து அழைக்கப்பட அதற்கு முற்றிலும் மாறான எளிமையான தோற்றத்தில் அப்பாவித்தனமாக நினைவுகளை மறந்த முகத்துடன் வலம் வருவது இயல்பாக பிரதிபலித்துள்ளார். ஆனால் அமைதி காக்கும் வில்லனாக, மறைக்கப்பட்ட தங்கத்திற்கான தேடுதல் வேட்டையில் காத்திருக்கும் சிங்கமாக சுயரூபத்தை சித்தரித்துள்ளனர். இவரின் பங்கை சிறப்பாக இறுதியில் சொல்லியிருக்கும் விதம் அற்புதம். எதிர்பாராத திருப்பம் படத்தின் எதிர்பார்பை தன் நடிப்பில் மூலம் எகிற செய்துள்ளார்.

கிச்சா என்ற கதாபாத்திரத்தில் குஞ்சக்கோ போபன் இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு சென்று விட வேண்டும் என்பதே குறிக்கோளுடன் பணத்திற்காக சொன்ன காரியத்தை கச்சிதமாக முடிக்க வேண்டும் என்ற முனைப்பும், பின்னர் அதில் மாட்டிக் கொண்டு வழிதெரியாமல் தவிப்பது, டேவிட்டை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவது யதார்த்தம்.

சிறப்பு தோற்றத்தில் மிரட்டி உயிரை விடும் ஜாக்கி ஷெராப், காதலியாக ஈஷா ரெப்பா, சித்தப்பாவாக ஆடுகளம் நரேன், தாதா தலைவியாக அமல்டா லிஸ், ஜின்ஸ் பாஸ்கர், சியாத் யாது, அனீஷ் கோபால், லபான் ரனே, ஸ்ரீகுமார் மேனன் மற்றும் பல மலையாள அறியாத முகங்கள் என்றாலும் மனதில் நிற்கும் அழுத்தமாக கதாபாத்திரங்கள் திரைக்கதையை சுவாரசியப்படுத்துகிறது.

எஸ்.சஞ்சீவ் அசத்தலான கதை, திரைக்கதை எழுதி இணை இயக்குனர் சசிகுமரன் சிவகுரு வசனத்தில் ரெண்டகம் துரோகத்தை மையமாக வைத்து இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது.

கௌதம் ஷங்கர் கூடுதல் ஒளிப்பதிவாளராக விஜய்யுடன் கை கோர்த்து படத்தின் முக்கிய இடங்களான குட், பேட், அக்ளி ஹாலிவுட் படம் ஒடும் டிரைவ் இன் தியேட்டர், பப், பழைய மாடல் கார்கள் என்று புழுதி படிந்த இடத்தில் நடக்கும் துப்பாக்கி சூடு கடந்த கால நிகழ்வுகளை தொடக்கத்தில் சில காட்சிகளில் காண்பித்து விட்டு பின்னர் மும்பையில் நிகழ்கால சம்பவங்களை கோர்வையாக கொடுத்து, அதன் பின் இறுதிக்காட்சியில் காட்சிகளுக்கேற்ற கார் பயணம், ஆக்ஷனை கலந்து திருப்புமுனையுடன் சிறப்பாக கொடுத்து ஒளிப்பதிவில் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

அருள்ராஜ் கென்னடி, ஏ.எச்.காஷிப், கைலாஸ் மேனன் ஆகியோர் சேர்ந்து கேங்ஸ்டர் படத்திற்கான டெம்போவை தங்கள் இசையால் மூழ்க செய்துள்ளனர். இதில் அருள்ராஜ் கென்னடியின் பின்னணி இசை படத்தின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தும் திக் திக் காட்சிகளில் டைம் பாம்ப் போல் அதிரடியாக கொடுத்துள்ளார். வெல்டன்.

ரெண்டகம் மலையாளத்தில் ஒட்டு என்ற பெயரில் போன வாரம் வெளிவந்துள்ளது.மும்பை தாதா களத்துடன் தொடங்கும் கதைக்களம் ஆனால் முதலில் ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல் தாதாவின் அடியாளின் துரோகத்தை மையப்படுத்தி அவரின் நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் வெற்றியா? தோல்வியா? என்பதை சொல்லி சிறப்பாக இயக்கியுள்ளார் பெளினி டி.பி. முதல் பாகத்தை எடுத்து விட்டு அதை வெளியிடாமல் இரண்டாம் பாகத்தை முதலில் ரிலீஸ் செய்துள்ளனர். இப்பொழுது மூன்றாம் பாகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் படத்தின் திரைக்கதையை அனைவரும் புரியும் வண்ணம் இறுதிக் காட்சியில் வந்து முடித்திருப்பது எதிர்பாரத ஒன்று. அடுத்த கதைக்குள் இணைக்கும் அளவிற்கு திரைக்கதை வலுவாக அமைதுள்ளார்.

மொத்தத்தில் ஷோ பிபுள் சார்பில் ஆர்யாவும் ஆகஸ்ட் சினிமா சார்பில் ஷாஜி நடேசன் தயாரிப்பில் ரெண்டகம் வித்தியாசமான கோணத்தில் திருப்பங்களுடன் பயணித்து வெற்றி முகமாக திகழ்கிறது.