ராஜாகிளி சினிமா விமர்சனம் : ராஜாகிளி – சபல கிளியின் கர்ம வினை | ரேட்டிங்: 3/5

0
339

ராஜாகிளி சினிமா விமர்சனம் : ராஜாகிளி – சபல கிளியின் கர்ம வினை | ரேட்டிங்: 3/5

நடிகர்கள்: தம்பி ராமையா, சமுத்திரக்கனி, தீபா ஷங்கர், பிரவீன் குமார் ஜி, டேனியல் அன்னி போப், பழ கருப்பையா, வெற்றிக்குமரன், கிரிஷ், அருள் தாஸ், சுவேதா ஷ்ரிம்டன், ரேஷ்மா பசுபலேட்டி, சுபா, வி.ஜே. ஆண்ட்ரூஸ், மாலிக், கிங் காங் மற்றும் பலர்

தொழில்நுட்ப வல்லுநர்கள் :
தயாரிப்பாளர்: சுரேஷ் காமாட்சி
இயக்குனர்: உமாபதி ராமையா
பேனர்: வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்
ஒளிப்பதிவு: கேதார்நாத் – கோபிநாத்
பிஜிஎம்: சாய் தினேஷ்
ஒலிப்பதிவாளர்: தபஸ் நாயக்
எடிட்டர்: சுதர்சன் ஆர்
கலை இயக்குனர்: வைரபாலன் – வீரசமர்
நடனம்: பிருந்தா – சாண்டி
ஸ்டண்ட் இயக்குனர்: சில்வா மாஸ்டர்
ஸ்டில்ஸ்: மிலன் சீனு
ஆடை வடிவமைப்பாளர்: நவதேவி ராஜ்குமார்
விளம்பர வடிவமைப்பாளர்: சிந்து கிராஃபிக்ஸ்
மேலாளர்: கே எச் ஜெகதீஷ்
நிர்வாக தயாரிப்பாளர்: சுப்ரமணியன் என்
பத்திரிக்கை தொடர்பு: ஜான் ஏ
விஎச் இசையில் இசை

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அன்பு இல்லம் நடத்தி வரும் ஆனந்தன் (சமுத்திரக்கனி), தெருவில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், குப்பையில் கிடைப்பதை எடுத்து சாப்பிட்டு வந்த ஒரு நபரை தனது அன்பு இல்லத்திற்கு அழைத்து வந்து அடைக்கலம் கொடுத்து அன்புடன் பார்த்துக் கொள்கிறார். அந்த நபர் கையில் வைத்திருந்த ஒரு டைரியை எடுத்து படிக்கும் போது இந்த நபர் தான் பிரபல தொழில் அதிபர் முருகப்பா சென்றாயர் (தம்பி ராமையா) என்று தெரிந்து வியப்பில் ஆழ்ந்து தொடர்ந்து டைரியை படித்து அவரைப் பற்றிய கதையை விவரிக்கிறார்.
உழைப்பை மூலதனமாக வைத்து பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வரும் படிக்காத மேதை பிரபலமான தொழிலபதிர் முருகப்ப சென்றாயர் (தம்பி ராமையா). முருக பக்தரான இவர் முருக கடவுளுக்கு அடுத்து நேசிப்பது தனது மனைவியை தான் (தீபா சங்கர்). ஆனால், மனைவி எப்போதும் தன் கணவன் மீது சந்தேகப்பட்டு சண்டை போட்டு கொண்டு தான் இருக்கிறார். இந்நிலையில், பெண் சபலத்தில் விழும் அவர் இரண்டாவதாக தனது துணிக்கடையில் வேலை பார்க்கும் வள்ளிமலர் (சுபா) என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அதன்பிறகு, கல்லூரி மாணவி விசாகாவின் (சுவேதா ஷ்ரிம்டன்) அம்மா விரிக்கும் வலையில் சிக்கும் அவர் மூன்றாவதாக விசாகாவை ஆசை நாயகியாக வைத்துக் கொள்கிறார். விசாகாவின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாத முருகப்ப சென்றாயரை ஏமாற்றி ஒரு கட்டத்தில் விசாகா நடன பயிற்சியாளர் ஆல்பர்ட் (கிரிஷ்) என்பவர் மீது காமம் கலந்த காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகு  ஆல்பர்ட்டின் ஆசை காட்டி மோசம் செய்யும் உண்மையான குணம் தெரிய வந்தும் விசாகாவைக் கொடுமை செய்கிறார். ஆல்பர்ட்டால் ஏற்படும் கொடுமையிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு விசாகா முருகப்ப சென்றாயரிடம் வேண்டுகிறாள். முருகப்ப சென்றாயர் ஆல்பர்ட் மற்றும் விசாகாவை  அழைத்து புத்திமதி கூறி புது கார் வாங்கி கொடுத்து டிராவல்ஸ் வைத்து குடும்பம் நடத்தும் படி அறிவுரை கூறி அனுப்பி வைக்கிறார். மீண்டும் பழையபடி ஆல்பர்ட் குடித்து விசாகாவைக் கொடுமைப்படுத்துகிறார். விசாகா முருகப்ப சென்றாயரிடம் வந்து தன்னை ஆல்பர்ட் இடம் இருந்து காப்பாற்றும்படி கதறுகிறார். இம்முறை தனது பாதுகாவலர்களை விட்டு ஆல்பர்ட்டை தீர்த்துகட்ட சொல்கிறார் முருகப்பா சென்றாயர். ஆல்பர்ட்டும் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலைக்கு முருகப்பா சென்றாயரும்; அவரது அடியாட்களும் தான் காரணம் என்று கூறி காவல்துறை அவர்களை கைது செய்கிறது. அதன் பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

கதை, வசனம், இசை, கதையின் நாயகன் என அனைத்து அம்சங்களிலும் தம்பி ராமையா மிளிர்கிறார். மனநலம் குன்றியவராக தனது அசல் சித்தரிப்பு வரை, செல்வந்தராக கம்பீரமான தோற்றம் வரை, பெண்களின் வலையில் சிக்கித் கோமாளித்தனத்துடன் தோன்றும் காட்சிகளில் உடல் மொழி மூலம் தனது மாறுபட்ட நடிப்புத் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

குறைந்த திரையில் இருந்தாலும் அன்பு இல்லத்தை நடத்தி வரும் ஆனந்தனாக தனது வழக்கமான டிரேட் மார்க் நடிப்பை பதிவு செய்திருக்கிறார் சமுத்திரக்கனி.

கணவனை எப்போதும் சந்தேகப்படும் மனைவியாக நடிக்கும் தீபாசங்கர், கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கண்களையும் குளமாக்குகிறார்.

தொழிலபதிர் முருகப்ப சென்றாயரின் மூன்றாவது மனைவியாக (திருமணம் செய்து கொள்ளாமல்) கல்லூரி மாணவி விசாகா கதாபாத்திரத்தை சுவேதா ஷ்ரிம்டன் துணிச்சலாக ஏற்று இளசு மற்றும் பெருசுகளை கவரும் வகையில் துள்ளலான நடிப்பு கச்சிதமாக வெளிப்படுத்தி உள்ளார்.

விசாகாவின் அம்மாவாக ரேஷ்மா, இரண்டாவதாக மனைவி வள்ளிமலராக சுபா, உதவி கமிஷனராக அருள்தாஸ், முருகப்ப சென்றாயருக்கு ஆலோசனை சொல்லும் சாமியாராக பழ கருப்பையா, கல்லூரி கரஸ்பான்டன்ட் மற்றும் நெருங்கிய நண்பனாக ஆடுகளம் நரேன், பாதுகாவலர்களாக ஆன்ட்ரூஸ், மாலிக் மற்றும் ஆல்பர்ட் கதாபாத்திரத்தில் பின்னணிப் பாடகர் கிரிஷ், பிரவீன் குமார் ஜி, டேனியல் அன்னி போப், வெற்றிக்குமரன், வி.ஜே.. கிங் காங் உட்பட அனைவரும் மிகைப்படுத்தப்படாத நடிப்பை வழங்கி திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் தோன்றுகிறார், இது யாரும் எதிர்பாராதது.

ஒளிப்பதிவாளர்கள் கேதார்நாத் மற்றும் கோபிநாத் படத்தின் காட்சி கோணங்களை கதைக்கு ஏற்றவாறு அமைத்துள்ளனர்.

படத்தொகுப்பாளர் சுதர்சன் ஆரின் எடிட்டிங் இரண்டாம் பாதியில் சற்று மந்தமாக இருக்கிறது.

தமிழகத்தையே உலுக்கி பேச்சு பொருளாக மாறிய ஒரு தொழிலதிபரின் வாழ்க்கையில் பெண் சபலத்தால் நடந்த ஒரு கொலை சம்பவத்தை கதை களமாக வைத்து  திரைக்கதையில் ஆங்காங்கே இரட்டை அர்த்த வசனங்கள் கலந்து பேமிலி த்ரில்லராக சொல்லி இருக்கிறார் இயக்குனர் உமாபதி தம்பி ராமையா.

மொத்தத்தில் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் ராஜாகிளி – சபல கிளியின் கர்ம வினை.