ராஜபுத்திரன் சினிமா விமர்சனம் : ராஜபுத்திரன் பாசத்தில் தாயுமானவன் | ரேட்டிங்: 3/5
கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எம்.சபி தயாரிக்க, மகா கந்தன் இயக்கியுள்ள படம் ராஜபுத்திரன்.
இதில் இளைய திலகம் பிரபு, வெற்றி, கிருஷ்ண பிரியா, கோமல் குமார், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆர். வி .உதயகுமார் உடன் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ளார் . நௌஃபல் ராஜா இசையமைத்ததுள்ளார். பாடல்களை வைரமுத்து, மோகன் ராஜன் எழுதியுள்ளனர். ராகேஷ் ராக்கியின் சண்டைக்காட்சிகள். கமலக்கண்ணன் படத்தொகுப்பு.இணை தயாரிப்பாளர்கள் கே.கோதர் ஷா மற்றும் டி.ஃபாருக். மக்கள் தொடர்பு டைமண்ட் பாபு.
முதல் காட்சியில் நாயகி பூச்செண்டு (கிருஷ்ணபிரியா) கத்தியை எடுத்து வந்து கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும் லிங்காவை( கோமல்குமார்) குத்தி கொலை செய்வது போல் கதைக்களம் தொடங்குகிறது. ராமநாதபுரம் அருகே கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா (இளைய திலகம் பிரபு). ஊர் மக்கள் மதிக்கும் அளவுக்கு பெரிய குடும்பத்தை சேர்ந்த பிரபுவின் மனைவி இறந்ததை அடுத்து மகன் பட்டமுத்து (வெற்றி) மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயது முதல் மகனை செல்லமாக வளர்க்கும் செல்லையா, அவனை வேலைக்கு கூட அனுப்ப மறுக்கிறார். விவசாயம் மழை இல்லாமல் நொடிந்து போக, வேறு வழியில்லாமல் கஷ்டப்படும் தந்தை செல்லையாவிற்கு பணம் சம்பாதித்த கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் பட்டமுத்து. அதனால் தன் நண்பரின் சிபாரிசின் பேரில் அப்பா செல்லையாவுக்கு தெரியாமல், சட்டவிரோத செயல்கள் செய்வதோடு, வெளிநாடுகளில் பணிபுரிவோர் சொந்த ஊரில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு ஏஜென்ட் மூலம் பண பரிமாற்றம் உண்டியில் முறையில் செய்யும் தாதா லிங்காவிடம் (கோமல் குமார்) வேலைக்கு சேர்கிறார். தாதா லிங்காவிற்கு வலது கையாக இருப்பவர் மீசை (லிவிங்ஸ்டன்). இவர்களின் எதிரி கோஷ்டி பெருமாள் (ஆர்.வி.உதயகுமார்) எப்படியாவது லிங்காவின் இடத்தை பிடிக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறார். இந்நிலையில் மீசை வெளிநாட்டிலிருந்து குடும்ப உறுப்பினர் அனுப்பும் பணத்தை அவர்களின் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் வேலையை பட்டமுத்துவிடம் கொடுக்கிறார்.பட்டமுத்து முதலில் சிறிய பண மாற்றத்தை கச்சிதமாக செய்து முடிக்க, லிங்காவின் நன்மதிப்பை பெற்று பெரிய அளவில் பணத்தை கொண்டு சேர்க்கும் பணி கொடுக்கப்படுகிறது. அங்கே வேலை செய்யும் சில பேருக்கு எடுத்துச் செல்லும் பணத்தை வழியில் யாரோ கொள்ளை அடித்து சென்று விட, அதனால் லிங்காவிடம் காணாமல் போன பணத்திற்கு அடமானமாக வீட்டை எழுதி வாங்குவதும், இல்லையென்றால் கொலை செய்யப்படுவதும் வாடிக்கையாக நடக்கிறது. இந்நிலையில் பட்டமுத்துவும் அடுத்த கிராமத்தில் இருக்கும் பூச்செண்டும் காதலிக்கிறார்கள். இந்த சமயத்தில் பட்டமுத்துவின் உண்டியல் பணம் கொள்ளை போகிறது. இதனால் பட்டமுத்துவை அடித்து இழுத்து போகும் லிங்காவிடம் வீட்டு பத்திரத்தை கொடுத்துவிட்டு பட்டமுத்துவை மீட்டு வருகிறார். காணாமல் போன பணம் கண்டுபிடிக்க பட்டமுத்து களமிறங்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
இளைய திலகம் பிரபு (செல்லையா) பாசத்துடன் பிள்ளைகளை வளர்ப்பவராக, அவர்களுக்கு உறுதுணையாக இருந்து இன்பத்திலும் துன்பத்திலும் என்றுமே புன்சிரிப்புடன் எளிதாக எடுத்துக் கொள்ளும் பாங்கு, அமைதியாக அனைத்து சிக்கல்களையும் தீர்க்க முடிவு செய்வது, மகனின் எந்த ஆசைக்கும் தடை போடாமல் அன்பாக இருப்பதும், என ஒவ்வொரு காட்சிகளிலும் அவரின் அனுபவ நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக இருப்பதுடன் ரசிக்கவும் வைக்கிறது.
வெற்றி (பட்ட முத்து) மகனாக கவலையின்றி சுற்றித் திரியும் இளைஞனாக, காதலியை விடாமல் துரத்தி தன் காதலை சொல்வதும், பணம் பறி கொடுத்தவுடன் பரிதவிப்பதும், ஆக்ஷன் காட்சிகள் என்று கொஞ்சம் கமர்ஷியல் ஹீரோவாக பிரபுவுடன் போட்டி போட்டு நடிக்க முயற்சி செய்துள்ளார்.
காதலி கிருஷ்ணபிரியா (பூச்செண்டு) நல்ல அழகான தேர்வு. கிராமத்து கேரக்டரில் அசத்தலான நடிப்பை தந்திருக்கிறார். வில்லனை பழி வாங்க கத்தியுடன் ஆக்ரோஷமாக ஓடி வரும் காட்சியில் மிரட்டியுள்ளார்.
மன்சூர் அலிகான் ( வட்டி) ஆர்.வி.உதயகுமார்(பெருமாள்), கோமல் குமார் (லிங்கா), லிவிங்ஸ்டன்(மீசை) என்று அவரவர்கள் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளனர்.
இமான் அண்ணாச்சி (சுந்தரம்), தங்கதுரை (குவைத் குமரேசன்) முடிந்த வரை சிரிக்க வைக்க முயற்சித்துள்ளனர். இவர்களுடன் வெற்றியின் நண்பராக வருபவரும் அழுத்தமான நடிப்பை கலகலப்புடன் கொடுத்துள்ளார்.
வைரமுத்து, மோகன் ராஜன் பாடல் வரிகளில் நௌஃபல்; ராஜா இன்னிசை துல்லியமாக ரசிக்க வைத்து பின்னணி இசையும் கவனிக்க வைத்து ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனி ராமநாதபுரத்தின் வறட்சியையும், பாழடைந்த கட்டிடம், 90களில் இருக்கும் வீடுகள், தெருக்கள், பேருந்து, கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை தன் காட்சிக்கோணங்களால் அழகாக செதுக்கியுள்ளார்.
ராகேஷ் ராக்கியின் சண்டைக்காட்சிகள், கமலக்கண்ணன் படத்தொகுப்பு கச்சிதம்.
ஏழை, எளிய மக்களை ஏமாற்றி சுரண்டும் பணத்தாசை பிடித்த வில்லன்கள், அவர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற நினைக்கும் இளைஞன், அவனுக்கு ஏற்படும் சிக்கல்கள், துன்பங்களிலிருந்து மீண்டானா? தந்தையை மகிழ்ச்சியோடு வைத்துக் கொண்டானா? என்பதை தந்தை மகன் பாசத்துடன் செண்டிமென்ட் கலந்து லாஜீக் மீறல்களோடு 90களில் கையாண்ட உண்டியல் முறையையும் மையப்படுத்தி, க்ளைமேக்ஸ் காட்சியில் எதிர்பாராத சம்பவத்துடன் இயக்கியுள்ளார் மகாகந்தன்.
மொத்தத்தில் கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எம்.சபி தயாரித்திருக்கும் ராஜபுத்திரன் பாசத்தில் தாயுமானவன்.