ரங்கோலி திரைப்பட விமர்சனம் : பள்ளி நாட்களின் ஏக்கத்தை ஞாபகப்படுத்தி அனைத்து வயதினரையும் கவர்ந்திழுத்து மனதை கவரும்  ‘ரங்கோலி’ | ரேட்டிங்: 3/5

0
404

ரங்கோலி திரைப்பட விமர்சனம் : பள்ளி நாட்களின் ஏக்கத்தை ஞாபகப்படுத்தி அனைத்து வயதினரையும் கவர்ந்திழுத்து மனதை கவரும்  ‘ரங்கோலி’ | ரேட்டிங்: 3/5

கோபுரம் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக பாபுரெட்டி மற்றும் சதீஷ்குமார் அவர்கள் தயாரித்துள்ள படம் ”ரங்கோலி”. வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கி இருக்கிறார்.

ஹமரேஷ், பிரார்த்தனா, சாய்‌ ஸ்ரீ, அக்‌ஷயா, ஆடுகளம் முருகதாஸ்  முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார்.

எடிட்டிங் சத்யநாராயணன். இசை கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு மருதநாயகம். கலை ஆனந்த் மணி, மக்கள் தொடர்பு சதீஷ் (AIM)

லாண்டரி தொழிலை செய்து வரும்‌ காந்தி (ஆடுகளம் முருகதாஸ்) காளியம்மா (சாய்ஸ்ரீ பிரபாகரன்) தம்பதிகளுக்கு சத்யா (‌ஹமரேஷ்‌) எனும்‌. மகனும்‌, வேம்பு லட்சுமி (அக்ஷயா) எனும்‌ மகளும்‌ உள்ளனர்‌. நேர்மையாக உழைத்து தான் கஷ்டப்பட்டாலும் குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக் கொண்டு கடனாளியாக வாழ்ந்து வருகிறார். மகன்‌ சத்யா அங்குள்ள அரசு பள்ளியில்‌ படித்து வருகிறான்.வீட்டின் அருகில் விளையாடும் போது  நண்பர்களுடன்‌ ஏற்பட்ட தகராறால்‌ இவர்களை காவலர்கள்‌, காவல்‌ நிலையத்திற்கு அழைத்துச்‌ செல்கிறார்கள்‌. காவல்‌ நிலையத்திற்கு குடும்பத்தை வரவழைத்து விட்டான் என்று கோபத்தில் இருக்கும் அவனுடைய பெற்றோர்கள், அவன் படிக்கும் பள்ளி மாணவர்களுடனான சேர்க்கை சரி இல்லை என்று கருதி அரசு பள்ளியிலிருந்து மாற்றி தனியார்‌ பள்ளியில்‌ சேர்க்கிறார்கள். காந்தி தனது மகனை ஒரு தனியார் பள்ளியில் சேர்க்க கடன் வாங்கி, அந்த கடனை அடைக்க அவரது மனைவி காளியம்மா மற்றும் மகள் வேம்பு லக்ஷ்மி ஆகிய முழுக் குடும்பமும் கூடுதல் நேரம் வேலை செய்து வருகிறார்கள். மறுபுறம், பள்ளியில் அவனை சக பணக்கார மாணவர்கள் கொடுமை படுத்த அதனால் கோபப்படும் அவன் அவர்களுடன் சண்டை போடுகிறான். அத்துடன் தமிழ் மீடியத்தில் படித்ததால் ஆங்கில மீடியத்தில் படிக்கவும் சிரமப்படுகிறான். சூழ்நிலைகள் அவனுக்கு எதிராகவும் அமைந்து விட பல விளைவுகளை சந்திக்கிறான். இந்த நிலையில் பார்வதி (பிரார்த்தனா) என்ற பெண்ணிடம் காதல் உணர்வுகளை வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் அவனது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் போது, அவன் தனக்காக தன் மொத்தக் குடும்பமும் எப்படி துன்பங்களை அனுபவித்து போராடுகிறார்கள் என்பதை பின்னர் உணர்கிறான். அதன் பின் என்ன நடக்கிறது என்பதை எதிர்பாராத திருப்பத்துடன் மீதிக்கதை நகர்கிறது.

அரசு பள்ளியில் தமிழில் படிக்கும் மாணவன் சக மாணவ நண்பர்களை பிரிந்து குடும்பத்தின் வற்புறுத்தலால் தனியார் பள்ளிக்கு மாறும் மாணவனுடைய மனநிலை, அங்கு ஆங்கிலத்தில் பயில எப்படி கஷ்டப்படுவான் என்பதை பள்ளி மாணவன் சத்தியமூர்த்தியாக ஹமரேஷ் எதார்த்தமாக அசத்தலான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். பார்ப்பதற்கு அசப்பில் ஜிவி பிரகாஷ் குமார் போல் இருக்கும் ஹமரேஷ் ஜீவியை போல் காதல், எமோஷன் என நடிப்பில் தூள் கிளப்பி ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார். சிறந்த எதிர்காலம் இவருக்கு இருக்கிறது.

அப்பாவாக வரும் முருகதாஸ் ஒரு தந்தை தன் குடும்பத்தினர் நலனுக்காக தான் படும் கஷ்டங்களை மறைத்து அவர்களுக்கு உண்மையாக இருந்து கஷ்டப்பட்டு உழைக்கும் பாசமிகு தந்தையாக உணர்வுபூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார்.

இளம் வயதில் சாய்ஸ்ரீ பிரபாகரன் அம்மா காளியம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கு ஒரு துணிவு வேண்டும். அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பில் அசத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

சத்யாவின் அக்காவாக அக்ஷயா ஹரிஹரன் சிறப்பான நடிப்பை வழங்கி திரைக்கதைக்கு மேலும் பலம் சேர்த்துள்ளார்.

பிரார்த்தனா சந்தீப் பார்வதியாக பார்வையிலேயே கவர்ந்து அழகாக ஜொலிக்கிறார். அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்து பள்ளி வாழ்க்கையை ஞாபகப்படுத்துவதோடு கதைக்கும் படத்திற்கும் வலு சேர்த்து இருக்கின்றனர்.

நமது பள்ளி காலத்தை அப்படியே மனதில் ஓட வைத்து இருக்கிறது சத்யநாராயணன் படத்தொகுப்பு.

ஒளிப்பதிவாளர் மருதநாயகம் மற்றும் இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே.எஸ்  இருவரும் இணைந்து பள்ளி வாழ்க்கையை ஒரு அழகான காவியமாக கொடுத்துள்ளனர்.

அரசு பள்ளியில் மகிழ்ச்சியாக படிக்கும் மாணவன் குடும்ப வற்புறுத்தலால் தனியார் பள்ளிக்கு மாறி, தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையின் சூழலை எவ்வாறு எதிர்கொண்டான். நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் சம்பாதிக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் இந்த சூழலில் கவனத்தை சிதறடித்தாலும், தங்கள் வளர்ச்சிக்கு உழைக்கும் பெற்றோர்களின் தியாகத்தை உணரும் போது அவர்கள் தங்கள் இலக்கில் கவனம் செலுத்துவதில் எப்படி முனைகிறார்கள் என்பதை நடுத்தர குடும்ப உணர்வுகளை அழகியலோடு, படைத்துள்ளார் அறிமுக இயக்குனர் வாலி மோகன்தாஸ்.

மொத்தத்தில் பள்ளி நாட்களின் ஏக்கத்தை ஞாபகப்படுத்தி அனைத்து வயதினரையும் கவர்ந்திழுத்து மனதை கவரும்  ‘ரங்கோலி’