மெய்யழகன் விமர்சனம் : மெய்யழகன் உறவுகளை வார்த்தை ஜாலத்தில் வசீகரித்து கவர்ந்து இழுக்கும் சொல்லழகன் | ரேட்டிங்: 4/5
நடிகர்கள்:
கார்த்தி, (27வது படம்) அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், சரன், சுவாதி கொண்டே, தேவதர்ஷினி, ஜே.பி, ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண் சக்தி
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு நிறுவனம் : 2 டி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பாளர்கள் : ஜோதிகா – சூர்யா
துணை தயாரிப்பாளர் : ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : சி.பிரேம் குமார்
இசை : கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு : மகேந்திரன் ஜெயராஜ்
படத்தொகுப்பு : கோவிந்த ராஜ்
கலை : ஐயப்பன்
ஸ்டண்ட் : மாஸ்டர் ராம் குமார்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
1996 ல் பால்ய பருவத்தில் அருள்மொழி (சரண்), அவரது தந்தை (ஜெயபிரகாஷ்) குடும்ப பிரச்சனை காரணத்தால் தஞ்சாவூர் நீடாமங்கலத்தில் உள்ள தனது சொந்த வீட்டை இழந்து கனத்த இதயத்துடன், குடும்பத்துடன் ஊரை விட்டு வெளியேறி சென்னைக்கு செல்கிறார்கள். வருடங்கள் விரைவில் செல்ல, அருள்மொழி (அரவிந்த் சுவாமி), அவரது குடும்பத்தினரும் பண ஆசை பிடித்த உறவினர்களை விட்டு பிரிந்து சென்னையில் வசித்து வந்தாலும், அன்பான சொக்கு மாமா (ராஜ்கிரண்) மற்றும் தான் மிகவும் நேசிக்கும் தனது சித்தப்பா மகள் புவனாவுக்காக ரிசப்ஷனில் கலந்து கொண்டு அன்றிரவே சென்னை திரும்புவது அவரது திட்டம். 2018 ல், அதாவது 22 ஆண்டுகளுக்குப் பிறகு புவனாவின் திருமணத்தில் கலந்து கொள்ள அருள்மொழி மட்டும் தன் சொந்த ஊருக்கு திரும்புகிறார். அங்கு ஒரு உறவினரை (கார்த்தி) சந்திக்கிறார், கிராமத்திற்குத் திரும்பும் அருள்மொழியை அத்தான் அத்தான் என்று அன்புடன் அழைத்து என விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கிறார் கார்த்தி. அவரது குழந்தை போன்ற புன்னகை, அப்பாவித்தனமும், எரிச்சலூட்டும் மற்றும் வசீகரிக்கும், யாரென்றே தெரியாத கார்த்தியின் இந்த சந்திப்பு அவர் யார் என்பதை நினைவு படுத்துவதற்கு போராடுகிறார் அருள்மொழி. அப்போது திருமண வரவேற்பில் புவனாவிடம் நகைகள் நிரம்பிய ஒரு பெட்டியை பரிசு கொடுக்கும் போது, அதை அணிய உதவுமாறு வற்புறுத்துகிறாள். அருள் தரையில் அமர்ந்து, புவனாவின் காலை அவன் மடியில் வைத்து, வெள்ளிக் கொலுசை அவள் கணுக்காலில் கட்டிவிடுகிறான். இருவரும் கண்ணீர் விடுகிறார்கள். அப்போது வரவேற்பு நிகழ்ச்சி வரிசையில் நின்றிருந்தவர்கள் ஒரு கணம் உடன்பிறப்புகளுக் கிடையேயான அன்பை புரிந்து கண் கலங்கி நிற்கிறார்கள். இந்நிலையில் மிகவும் தெரிந்தவர் போல் கூடவே வலம்வந்து பழைய நினைவுகளைப் பகிரும் கார்த்தியிடம், உங்களை அடையாளம் தெரியவில்லை என்று கூறச் சங்கடப்படுகிறார் அருள்மொழி. இச்சூழலில் சென்னைக்கு செல்லும் பேருந்தையும் தவறவிட ‘பெயர் தெரியாத நபரின் வீட்டில் இரவு தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அன்று இரவு அவர்கள் இருவருக்கும் நடக்கும் உரையாடல்கள், உணர்வுப் பகிர்வுகள், நினைவலைகள், கார்த்தியின் பாசமும், உபசரிப்பும் ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவருக்கு உணர்த்துகிறது. தன்னையே தனக்கு அடையாளம் காட்டிய கார்த்தி மீது அருள் மொழிக்கு ஒரு மரியாதையும் ஏற்படுகிறது. இருவரும் அவர்களுக்குள் ஒரு பிணைப்பை வளர்த்துக் கொள்ளும் போது, தன் மீது பாசத்தை பொழியும் நபரின் பெயர் தெரியாமல், அவர் யாரென்று தெரிந்து கொள்ள முடியாமல் குழப்பத்தில் இருக்கும் அருள்மொழி, கார்த்தியிடம் சொல்லாமலேயே சென்னைக்கு திரும்புகிறார். கடைசிவரை கார்த்தியின் பெயர் கூட தெரியாமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியில் தவிக்கும் அரவிந்த்சாமி வாழ்க்கையில் இந்த மறு சந்திப்பு எவ்வாறு இணைக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
கார்த்தி படத்தில் நான் நடிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனிதர் அந்த பாத்திரமாகவே மாறி வாழ்ந்திருக்கிறார். கிராமத்து இளைஞனாக அப்பாவித்தனத்தையும் பாசத்தையும் வெளிப்படுத்தி இருப்பது அருமை. கார்த்திக்கு மெய்யழகன் மற்றும் ஒரு மணிமகுடம்.
அருள்மொழி என்ற கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி வியக்கத்தக்க குணச்சித்திர நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளார். 30 வருடங்களுக்கு ‘ரோஜா’ படத்தில் அறிமுகமாகி அனைவரையும் அழகில் மயக்கிய அரவிந்த்சாமியிடம் இன்றும் அனைவரையும் மயக்கும் செயல்திறன் அவரிடம் உள்ளது.கார்த்தியும், அரவிந்த்சாமியும் மனதை வருடும் திரைக்கதை திரைக்கதைக்கு உயிர்மூச்சாய் இருக்கிறார்கள்.
அவர்கள் இருவரைத் தாண்டி படத்தில் வரும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், சுவாதி கொண்டே, தேவதர்ஷினி, ஜே.பி, ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண் சக்தி, ரைச்சல் ரபேக்கா, ஒரு சில காட்சிகளுக்கு மட்டும் தோன்றினாலும், தங்களின் அழுத்தமான நடிப்பால் நம் நினைவில் நிற்கிறார்கள்.
மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு, கோவிந்த ராஜ் பட தொகுப்பு, ஐயப்பன் கலை, கோவிந்த் வசந்தா இசை மற்றும் பின்னணி இசை அடங்கிய டெக்னிக்கல் டீம் படத்தின் அழகை கூட்டி, எனர்ஜி லெவலை ஒரே சீராக வைத்திருக்கிறது.
எளிமையான மற்றும் தூய்மையான உணர்வுகளை ரொம்ப எதார்த்தமாக அழகான எமோஷனலான மனதை வருடும் திரைக்கதை அமைத்து வன்முறைக் காட்சிகள் இல்லாமல் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தொடர்புடைய குடும்ப பொழுதுபோக்கு சித்திரம் படைத்துள்ளார் இயக்குனர் சி.பிரேம் குமார். இருப்பினும் இயக்குனர் 3 மணி நேரம் பயணிக்கும் நேரத்தில் சற்று தொய்வு ஏற்படுத்தும் காட்சிகளை குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜோதிகா – சூர்யா இணைந்து தயாரித்திருக்கும் மெய்யழகன் உறவுகளை வார்த்தை ஜாலத்தில் வசீகரித்து கவர்ந்து இழுக்கும் சொல்லழகன்.