மாவீரன் திரைப்பட விமர்சனம் : மாவீரன் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து உணர்ச்சியையும் மற்றும் சிந்தனையையும் தூண்டும் சிறந்த பொழுதுபோக்கு சித்திரம் | ரேட்டிங்: 4/5
சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்துள்ள படம் மாவீரன். மண்டேலா படத்துக்கு பிறகு இந்தப் படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, இயக்குனர் மிஷ்கின், சரிதா, சுனில், அருவி மதன், திலீபன், மோனிஷா பிளெஸ்ஸி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மேலே இருந்து ஒரு குரல் கேட்கும். அந்த குரலை விஜய் சேதுபதி கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவு : விது அய்யன்னா
இசை : பரத் சங்கர்
படத்தொகுப்பு : பிலோமின் ராஜ்
கலை இயக்கம்: குமார் கங்கப்பன் மற்றும் அருண் வெஞ்சரமூடு,
சண்டைப்பயிற்சி: யானிக் பென்,
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி மற்றும் அழகியகூத்தன்,
கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம்: சந்துரு ஏ,
ஒலிக்கலவை: சுரேன் ஜி, ஆடை வடிவமைப்பு: தினேஷ் மனோகரன்,
ஒப்பனைக் கலைஞர்: ஷைட் மாலிக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்.
சத்யா (சிவகார்த்திகேயன்) உயிர் மேல் ஆசை இருக்கக் கூடிய ஒரு சாதாரணமான பயந்த சுபாவமுள்ள கோழைத்தனமான கார்ட்டூனிஸ்ட் கலைஞர். எல்லாவற்றிற்க்கும் அட்ஜஸ்ட் பண்ணி வாழ கத்துக்கணும் என்ற கருத்துடன், தனது தாய் ஈஸ்வரி (சரிதா) மற்றும் சகோதரி ராஜி (மோனிஷா) உடன் ஒரு குடிசை பகுதியில் வசிக்கிறார். ஒரு நாள், அரசாங்கத்தின் ஒரு கெடுபிடி நடவடிக்கையுடன் குடிசைப் பகுதி அகற்றப்பட்டு, ஒட்டுமொத்த அந்த குடிசைவாசி சமூகம் அமைச்சர் ஜெயக்கொடிக்கு (மிஷ்கின்) ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புக்கு வலுக்கட்டாயமாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அங்கே சென்றவுடன் பிளாட் மோசமாக கட்டப்பட்டிருப்பது அனைவரும் உணர்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு முறையாக கட்டப்படாததால், ஆங்காங்கே விரிசல், கசிவு ஏற்பட்டு கதவு கைப்பிடிகள் வெளியேறத் தொடங்குகின்றன, வண்ணப்பூச்சு சுவர்களில் இருந்து உரியத் தொடங்குகிறது மற்றும் சிறிய அழுத்தத்தில் விரிசல் தோன்றுகிறது. அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் தரமற்ற நிலையை பார்த்து கோபம் கொள்ளும் தனது தாயிடம் (சரிதா) ‘அட்ஜஸ்ட் பண்ணி வாழ கத்துக்கணும்” என்று சொல்லி பெரிய பயத்துடன் விலகி நிற்கிறார். பொறியாளர் தனது சகோதரியை துன்புறுத்தினாலும், அவரை எதிர்த்து நிற்கும் அளவுக்கு அவனால் தைரியமாக இருக்க முடியவில்லை. இந்நிலையில் சத்யாவின் தாய் கோழையாக வாழ்வதை விட சாகலாம் என்று கூறும் வார்த்தையை கேட்டு மனஉளைச்சல் ஏற்பட்டு வீட்டின் மொட்டை மாடியில் தற்கொலை செய்து கொள்ள நினைத்து சுவரின் மீது ஏறி நிற்கிறான். ஒரு கட்டத்தில் தாய் மற்றும் தங்கை பற்றி நினைக்கும் போது, தற்கொலை எண்ணத்தை கைவிட்டு திரும்பி கீழே இறங்கும் போது எதிர்பாரா விதமாக சுவர் முனை பகுதி உடைந்து கீழே விழுகிறான். தலையில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு, சத்யா தனது வாழ்க்கையை வீரத்தின் காவியமாக விவரிக்கும் ஒரு மர்மமான குரலைக் (விஜய் சேதுபதியின் குரல்) கேட்கத் தொடங்குகிறான். மேலும் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்தக் குரல் சரியாகச் சொல்கின்றது. ஊழல் அரசியல்வாதியான ஜெயக்கொடியை (மிஷ்கின்) எதிர்கொண்டு ஒரு துணிச்சலான போர்வீரராக வீரப் பயணத்தை தொடங்க வேண்டும் என்று இந்த குரல் அவனைத் தூண்டி மக்களுக்காக போராட அவனை வலியுறுத்துகிறது. விரைவில் அடுக்குமாடி குடியிருப்பில் பேரழிவு ஏற்பட போகிறது என்று அந்த குரல் ஒலிக்கிறது. சத்யாவும் ஊழல் அமைச்சர் ஜெயக்கொடியை எதிர்த்து நிற்கிறான். அமைச்சரின் கோபத்துக்கு ஆளாகிறான். பயந்த சுபாவமுள்ள கோழைத்தனமான கார்ட்டூனிஸ்ட் சத்யா எப்படி சூப்பர் ஹீரோவாகிறான்? ஊழல் அமைச்சர் ஜெயக்கொடியை சமாளித்து பேரழிவிலிருந்து தன் மக்களைக் எப்படி காப்பாற்றினான்? இறுதியில் அமைச்சர் ஜெயக்கொடி என்ன ஆனார்?
வறுமையான சூழலில், நாமுண்டு நம் குடும்பம் உண்டு என்று, எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதிலிருந்து அஞ்சி விலகி, அரசியல் செய்து அட்டூழியம் செய்யும் கும்பலிடமிருந்து ஒதுங்கி, உயிர் மேல் ஆசை இருக்கக் கூடிய பயந்த சுபாவம் உள்ள ஒரு சாதாரணமான இளைஞனாக (அவர் நம்மில் பெரும்பாலனோரை பிரதிபலிக்கிறார்) சத்யா கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சாந்தகுணமுள்ள இளைஞனாக மாவீரன் அவரை ஒரு அற்புதமான நடிகராக உயர்த்தி பார்வையாளர்களிடம் பாராட்டையும் பெறுகிறார்.
மிஷ்கின் அற்புதமாக சித்தரிக்கப்பட்ட ஊழல் அரசியல்வாதியான ஜெயக்கொடி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடிப்பில் குறும்புத் தனம் கலந்து, கண்களால் மிரட்டி இருக்கிறார். இன்றைய தமிழக அரசியல்வாதி எப்படி இருக்கிறார்கள் என்பதை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் மிஷ்கின்.
சிவகார்த்திகேயன், மிஷ்கினுக்கு அடுத்தபடியாக கட்டிடத்தில் பேட்ச் ஒர்க் செய்யும் கூலித் தொழிலாளியாக திரையை களவாடுபவர் யோகி பாபு. வட இந்தியாவில் இருந்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மலிவாக வந்து, முதலாளிகளின் உத்தரவைக் கேள்வி கேட்காமல், தனது வேலையைக் கைப்பற்றுவதை உணர்ந்த தமிழ்த் தொழிலாளியாக தனது நகைச்சுவையான ஒன்-லைனர்களால் தியேட்டரை அதிர வைக்கிறார். தீவிரமான திரைக்கதைக்கு மத்தியில் சிவகார்த்திகேயன் மற்றும் யோகி பாபு ஆன்-ஸ்கிரீன் பிரசன்ஸ் மொத்த தியேட்டரையும் கலகலப்பாக்குகிறது.
அதிதி சங்கர் ‘தினத் தீ’ நாளிதழின் துணை ஆசிரியராகவும் சத்யாவின் அழகிய காதலி நிலாவாக ஜொலித்து, அவரது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை துடிப்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
அம்மா ஈஸ்வரியாக முக்கிய பாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் சரிதா எப்போதும் தான் ஒரு சிறந்த குணசித்திர நடிகை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
மிஷ்கினின் நண்பர் பரமுவாக வரும் தெலுங்கு நடிகர் சுனில், சத்யாவின் சகோதரி ராஜியாக மோனிஷா பிளெஸ்ஸியும், என்ஜினீயராக அருவி மதன், திலீபன், உட்பட அனைத்து நட்சத்திரங்களும் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
யானிக்பெனின் சூப்பர் சண்டைக்காட்சியும், பரத் சங்கரின் இசை மற்றும் பின்னணி இசையும் முக்கிய காட்சிகள் உணர்ச்சித் தாக்கத்தை திறம்பட உயர்த்துகிறது.
மாவீரனின் ஒவ்வொரு காட்சியின் மனநிலையை அற்புதமாக உணர சிறப்பு ஒளிப்பதிவு மூலம் காட்சிகளுடன் பயணிக்க வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா.
பல காட்சிகள் செட் சொட்டாக தெரியாமல் மிகவும் யதார்த்தமான உணர்வைத் தருகிறது குமார் கங்கப்பன் மற்றும் அருண் வெஞ்சரமூடு ஆகியோரின் கலைப்படைப்பு.
எடிட்டிங் மற்றும் ஒலி வடிவமைப்பு ஆகியவை திரைக்கதையை விறுவிறுப்பாக முன்னோக்கி கொண்டு செல்கிறது.
ஒவ்வொரு அரசியலிலும் இன்றளவும் நடக்கும் ஊழல், அரசியல்வாதிகள் மேற்பார்வையில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் மோசமான கட்டுமானத் தரத்தை மையக்கருவாக வைத்து மக்களின் குமுறல்களை மறைமுகமாகச் சொல்ல முயன்றுள்ளார் இயக்குனர் மடோன் அஸ்வின். மக்களுக்காக போராடிய மாவீரர்களின் கதைகள் பார்வையாளர்களுக்கு புதிதல்ல. ஆனால் பாதி படத்திற்கு மேல் குரல் வழியாக கதை சொல்லப்படுகிறது. படத்தில் முகமே காட்டாமல் குரல் வழியாக விஜய் சேதுபதியின் மூலம் குரல் கொடுக்கும் வித்தையை புகுத்தி, இந்தப் படத்துக்குப் புதுமையைக் கொண்டு சேர்த்திருக்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின். தைரியம் மற்றும் வீரம் பற்றிய கதையை முதல் பாதி முழுக்க கலகலப்பான காட்சிகளுடன் நகைச்சுவையாக பயணிக்க வைத்து, இரண்டாம் பாதியில் உணர்ச்சிகரமான மற்றும் சிந்தனையைத் தூண்டும் வகையில் படைத்து கதையை அழகாக நிறைவு செய்துள்ளார் மடோன் அஸ்வின்.
மொத்தத்தில் சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ள மாவீரன் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து உணர்ச்சியையும் மற்றும் சிந்தனையையும் தூண்டும் சிறந்த பொழுதுபோக்கு சித்திரம்.