மாமன்னன் சினிமா விமர்சனம் : மாமன்னன் சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை பேசும் பவர்ஃபுல் அரசியல் த்ரில்லர் | ரேட்டிங்: 4/5

0
855

மாமன்னன் சினிமா விமர்சனம் : மாமன்னன் சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை பேசும் பவர்ஃபுல் அரசியல் த்ரில்லர் | ரேட்டிங்: 4/5

கர்ணன், பரியேறும் பெருமாள் ஆகிய இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் மாமன்னன். வைகைப்புயல் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், சுனில் ரெட்டி, லால், கீதா கைலாசம், விஜயகுமார், அழகம் பெருமாள், ரவீனா ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கவனிக்க, செல்வா ஆர்.கே எடிட் செய்துள்ளார். பாடல்கள் யுகபாரதி. கலை குமார் கங்கப்பன். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் 10 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு). அடிமுறை தற்காப்புக் கலைப் பயிற்சியாளரும், பன்றி வளர்ப்புத் தொழில் செய்பவருமான அவரின் மகன் வீரன் என்னும் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்) சிறுவயதில் தான் சந்தித்த சாதி அடக்குமுறைக்கு அடிபனிந்து போன தந்தையின் செயல் பிடிக்காமல் அவருடன் 15 ஆண்டுகள் கடந்தும் பேசாமல் இருக்கிறார். மாமன்னனும் வீரனும் வசிக்கும் அதே கிராமத்தில் அரசியல் பிரமுகர் சுந்தரத்தின் (அழகம் பெருமாள்) மகன் ரத்னவேல் (ஃபஹத் ஃபாசில்). மாமன்னன் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் ரத்னவேல். தான் வளர்க்கும் அரண்மனை நாய்களைப் போல மற்ற சமூகத்தினரை நடத்தும் இரக்கமற்ற குணம் கொண்டவர். உங்களுக்கு மேலே இருப்பவரை வணங்குங்கள் அல்லது உங்களுடன் இருப்பவரை வணங்குங்கள், ஆனால் உங்களுக்கு கீழே இருப்பவரை வணங்காதீர்கள். கீழே அமர்ந்திருப்பவரைக் கும்பிட்டால் செத்துப்போய் விட்டதுக்கு சமம் என்று ரத்னவேல்  தந்தையின் அறிவுரையும்,  அதிகாரமும் ரத்னவேலை மனித விலங்காக மாற்றிவிடுகிறது. மாமன்னன் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சியின் மாவட்டச் செயலாளராக தந்தையின் வழித்தோன்றலில் (வாரிசு அரசியல்வாதியாக)  செயல்படுகிறார்.  பந்தயத்தில் தோற்று கௌரவத்திற்கு இழப்பு ஏற்படுத்திய தனது விலைமதிப்பற்ற நாயை கொடூரமாக கொன்று போடுகிறார். கல்வி நிறுவனங்களின் குழுமத்தை நடத்தி வரும் ரத்னவேலுவின் பண ஆசை கொண்ட சகோதரர் (சுனில் ரெட்டி), லீலா (கீர்த்தி சுரேஷ்) மற்றும் அவரது கல்லூரி நண்பர்களால் நடத்தப்படும் பயிற்சி வகுப்பை மூடுமாறு  வலியுறுத்துகின்றனர். அதன் பின் கல்லூரி நண்பரான அதிவீரன் நடத்தி வரும் தற்காப்புக் கலைப் பள்ளி வளாகத்தை இலவச கோச்சிங் சென்டரை நடத்த பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நண்பர்களுடன் லீலா நடத்தி வரும் கோச்சிங் சென்டரை ரத்னவேலின் அண்ணன் அடித்துநொறுக்க பிரச்சினை அரசியலாகிறது. அதனால் அதிவீரனுக்கும் ரத்னவேலுவிற்கும் இடையே பிரச்னை வருகிறது. ரத்னவேல் பேசி பிரச்சனையை முடிக்க மாமன்னன் மற்றும் அதிவீரனை அழைக்கிறார். அப்பா மாமன்னன், எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் அவரை மாவட்டச் செயலாளர் ரத்னவேல் தரக்குறைவாக நடத்தி அவமானப்படுத்தப் படுகிறார். அதனால ரத்னவேலுவை அதிவீரன் அடித்து விடுகிறார். இந்தப் பிரச்னை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாமன்னனுக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ரத்னவேலுக்குமான பிரச்சனையாகவும், பின் இரு சமூகங்களுக்கு இடையிலான பிரச்சனை ஆகவும் மாறுகிறது, மாமன்னன் மற்றும் அதிவீரனை கொல்ல திட்டம் ரத்ன வேலு போடுகிறார். இது கட்சிக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுக்கிறது. இதனால் வேறு கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறார் ரத்னவேல். அடுத்ததாக தேர்தல் வருகிறது, அதில் வடிவேலு ச.ச.ம.க.,வின் வேட்பாளராக களம் இறங்குகிறார். அந்த அரசியலில் ஆதிக்க வர்க்கத்தினர் எளியவர்களின் உரிமைகளை அடக்கத் துடிக்கிறார்கள் அதை எப்படி மாமன்னன் முறியடித்தார்? அதிகாரம், கௌரவம் மற்றும் ஆதிக்கத்தை எப்படி அதிவீரன் நிலைநாட்டினார் என்பதுதான் மீதிக்கதை.

வைகை புயல் வடிவேலு தமிழ் சினிமாவில் நகைச்சுவை சக்கரவர்த்தி.   அவர் தனது தோற்றத்தாலும், அனல் பறக்கும் உரையாடல்களும் திரையில் நெருப்பை ஏற்படுத்தினார். வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளை பார்த்து வாய்விட்டு சிரித்த பார்வையாளர்கள் அவரை இன்றும் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். தமிழ் நகைச்சுவை உலகில் ஈடுசெய்ய முடியாத அந்த நகைச்சுவை மன்னன் இன்று 62 வயதில் ‘மாமன்னன்’ படத்தில் வேறொரு பரிணாமத்தில் தான் ஒரு சிறந்த குணசித்திர நடிகர் என்பதை மாமன்னனாக உயர்ந்து நின்று நடிப்பில் மாஸ் காட்டி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார். அவரது குரலில் வரும் பாடல்கள், அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இன்று அவரைப் பார்த்து பெருமூச்சு, ஆச்சரியமும், சிலிர்ப்பும் ஏற்படுத்தி இப்படி அவருக்குள் இருந்த இன்னொரு நடிகனை வெளிக் கொண்டு வந்த இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டியே ஆக வேண்டும்.

ஒரு பக்கம் மாமன்னன் என்றால் மறு பக்கம் ரத்னவேலுவாக வரும் பஹத் ஃபாசில் மிரட்டியிருக்கிறார். தன் சாதியின் மீது பற்று கொண்ட தன்முனைப்பு அரசியல்வாதியாக, மூர்க்கத்தனமான வில்லனாக கண்களால் மிரட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை வசீகரித்துள்ளார்.

சாதியின் மீது பற்று கொண்ட தன்முனைப்பு அரசியல்வாதிகளிடம் இருந்து அப்பாவுக்கான கௌரவத்தை பெற்றுத் தர துடிக்கும் மகனாகவும், வலிகளை சுமந்து கொண்ட இளைஞனாகவும் திரைக்கதையில் முக்கிய அங்கமாக அதிவீரனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மாமன்னன் வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோருடன் இணைந்து படத்தை வேறு வெலுக்கு தூக்கி நிறுத்தி உள்ளார் உதயநிதி.


கீர்த்தி சுரேஷ் மற்றும் சுனில் ரெட்டிக்கு படத்தின் முக்கிய இணைப்பு கேரக்டர்களாக இருந்து கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து இருவரும் திரைக்கதை நகர்வுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர். லால், அழகம் பெருமாள், கீதா கைலாசம், விஜயகுமார், ரவீனா ரவி போன்ற துணை கதாபாத்திரங்கள் அவரவர் ரோலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், செல்வா ஆர்.கே-வின் படத்தொகுப்பும் உணர்வுபூர்வமாக கதையை பார்வையாளர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்வதற்கு அவர்களது பங்களிப்பு கூடுதல் வலு சேர்த்திருக்கிறது. அதே போல் கலை இயக்குனர் குமார் கங்கப்பன் உழைப்பும் பாராட்டத்தக்கது.கவனிக்க வைக்கும் யுகபாரதியின் பாடல் வரிகள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் கைவண்ணம்தான் படத்துக்கு பெரிய பலம் சேர்த்துள்ளது. அதோடு தான் எப்போதும் ஒரு ‘மாமன்னன்’  என்பதை ஏ.ஆர்.ரஹ்மான்  பின்னணி இசை மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார்.

யாரையும் அடிமையாக நடத்த கூடாது, அனைவரும் சமம். அந்தஸ்தும், பணமும், ஜாதியும் தாண்டியவர்கள் வரும்போது கைகூப்பி வணங்கும் சாமானியனின் இயலாமை, ஏற்றத்தாழ்வுகள் என  தன் முதல் இரு படங்களில் பேசியது போல மாமன்னனிலும் பேசி இருக்கிறார். தன் சுற்றுப்புறத்தில் பார்த்த சம்பவங்களை மையமாக வைத்து  அரசியலில் உள்ள குறைகளை வெளிக்கொணர்ந்து, தேர்தல் முடிவுகள் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துகிறது என்ற யதார்த்தத்தை திரைக்கதையில் அமைத்து அரசியலில் உள்ள குறைகளை உணர்ச்சிகரமான வசனங்கள் மூலம் வெளிக்கொணர்ந்து அற்புதமாக காட்சி படுத்தி உள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

மொத்தத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள மாமன்னன் சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை பேசும் பவர்ஃபுல் அரசியல் த்ரில்லர்.