போகுமிடம் வெகு தூரமில்லை சினிமா விமர்சனம் : போகுமிடம் வெகு தூரமில்லை பார்வையாளர்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் | ரேட்டிங்: 3.5/5
அறிமுக இயக்குனர் மைக்கல் கே ராஜா இயக்கத்தில், ஷார்க் 9 பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விமலுடன் இணைந்து கருணாஸ் முக்கிய பாத்திரத்தில் நடித்து இருக்கும் திரைப்படம் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ் குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்குனர்: மைக்கேல் கே ராஜா
தயாரிப்பாளர்: சிவா கில்லாரி
இசையமைப்பாளர்: என்.ஆர்.ரகுநந்தன்
ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்
படத்தொகுப்பு : எம்.தியாகராஜன்
ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ்
நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன்
கலை இயக்குனர்: சுரேந்தர்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ராகேஷ் ராகவன்
நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கி மகி
மக்கள் தொடர்பு – சதீஷ் (ஏஐஎம்)
திருநெல்வேலி மக்களிடையே பிரபலமான ஒரு பெரிய குடும்பத்தின் மூத்த நபர் சென்னையில் விபத்து ஒன்றில் மரணம் அடைகிறார். அவருக்கு திருநெல்வேலியில் இரண்டு குடும்பங்கள். இரண்டு குடும்பங்களுக்குள் பகை இருந்துக்கொண்டே இருக்கிறது. பெரியவர் மரணம் அடைந்த பின் அந்த இரண்டு குடும்பத்தில் பெரியவருக்கு யார் கொல்லி போடுவது என்கிற மேலும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதே வேலையில் சென்னையில் குமார் (விமல்) என்ற அமரர் ஊர்தி ஓட்டுநர் தன் மனைவியின் பிரசவ செலவிற்கு பணத்திற்காக கஷ்டப்படுகிறார். பண தேவைக்காக அன்று தன் மனைவியை மருத்துவமனையில் தாத்தா பொறுப்பில் விட்டு விட்டு இறந்த அந்த பெரியவர் உடலை எடுத்துக் கொண்டு திருநெல்வேலி செல்கிறார் அமரர் ஊர்தி ஓட்டுநர் குமார்(விமல்). திருநெல்வேலி செல்லும் வழியில் கூத்து கலைஞர் நளினமூர்த்தி (கருணாஸ்) லிப்ட் கேட்டு அந்த வண்டியில் ஏறுகிறார். இரண்டு பேரும் முரண்பட்ட கதாபாத்திரங்கள். மன அழுத்தத்தில் இருக்கும் குமார் எப்போதும் தொணதொண வென்று பேசிக்கொண்டிருக்கும் கூத்து கலைஞர் நளினமூர்த்திக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. இதனிடையே இருவருக்கும் வழியில் வேறு பிரச்சனையும் வருகிறது. இந்த பிரச்சனையால் வழியில் அந்த பெரியவர் உடலை யாரோ கடத்தி விடுகிறார்கள். அதனிடையே ஊரில் பெரியவர் உடலுக்காக காத்திருக்கும் இரண்டு வீட்டார்கள் இடையே பல குழப்பமான சம்பவங்கள் நடை பெறுகிறது. அதே நேரத்தில் வழியில் பெரியவர் உடலை தொலத்த குமார் மற்றும் நளினமூர்த்தி இருவரும் சந்திக்கும் சூழ்நிலைகளும் மனிதர்களும் அவர்களின் மனநிலையை மாற்றி, அவர்களை ஒரு பொதுவான நிலைக்கு கொண்டு வருகிறது, அது பின்னர் நட்பாக மலர்கிறது. நளினமூர்த்தி தன்னால் ஏற்பட்ட இந்த இக்கட்டான சூழ்நிலையை அவர் சரி செய்வதாக கூறும் போது ஏற்படும் சம்பவம் தான் படத்தின் திருப்புமுனை. பெரியவரின் இரண்டு குடும்பத்தில் உள்ள பிரச்சனை என்ன? யார், எதற்கு பெரியவர் உடலை கடத்தினார்கள்? கடத்தப்பட்ட அந்த பெரியவர் உடல் என்ன ஆனது? குமார் அந்த பெரியவர் உடலை பத்திரமாக கொண்டு சேர்த்தாரா? நளினமூர்த்தி அந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி சரி செய்தார்? போன்ற பல கேள்விகளுக்கு படத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்களின் திரைக்கதை விடை சொல்கிறது.
இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும், மார்ச்சுவரி வேன் ஓட்டும் குமார் கதாபாத்திரத்தில் விமல் நடித்துள்ளார், இதுவரை தனது திரையுலக பயணத்தில் நடிக்காத வித்தியாசமான, அழுத்தமான கதாபாத்திரத்தில் விமல் வாழ்ந்துள்ளார். இந்தப் படத்தில் மிகக் குறைவான உரையாடல்களுடன் விமல் வெறும் முகபாவனைகள் மிகவும் அர்ப்பணிப்புடன் அற்புதமாக இருக்கிறது. சினிமாவில் ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறி வரும் நடிகர் விமல், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ திரைப்படம் நிச்சயம் வெற்றியை தேடி தரும்.
கூத்து கலைஞர் நளினமூர்த்தி கதாபாத்திரத்தில் கருணாஸ் திரைக்கதையின் ஜீவன் என்று சொன்னால் அது மிகையாகாது. திரைக்கதை பயணத்தின் உயிர்நாடி கருணாஸ் கதாபாத்திரம். சிறந்த குணச்சித்திர நடிகராக மனிதன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி வாழ்ந்துள்ளார்.
மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி, இவர்கள் அனைவரும் இணைந்து பரபரப்பான திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.
இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன், ஒளிப்பதிவாளர் டெமில் சேவியர் எட்வர்ட்ஸ், படத்தொகுப்பாளர் எம்.தியாகராஜன் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை படபடப்புடன் வைத்திருக்கிறது.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு வாழ்க்கை அடையாளத்திற்கும் சில தேவைகள் உள்ளன. அந்த மாதிரியான தேவைகள் சில நேரத்துல நெருக்கடியை உருவாக்கும் போது, அவர்கள் சந்திக்கும், துரத்தும் பிரச்சனைகளை அமரர் ஊர்தியில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களை சுற்றியே நகரும் திரைக்கதை அமைத்து
பல சுவாரசியமான காட்சிகள், அழுத்தமான கதாபாத்திரங்கள், வசனங்கள், வாழ்க்கை அனுபவங்கள் என, வாழ்வியலை அழகான படைப்பாக படைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே ராஜா.
மொத்தத்தில் ஷார்க் 9 பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள போகுமிடம் வெகு தூரமில்லை பார்வையாளர்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும்.