பராரி சினிமா விமர்சனம் : பராரி எளிய மக்கள் வாழ்க்கை முறையையும் அவர்களுக்கான அரசியலையும் அழுத்தமாக பேசுகிறது | ரேட்டிங்: 3/5
நடிகர்கள்
ஹரிசங்கர் – மாறன்
சங்கீதா கல்யாண் – தேவகி.
குரு ராஜேந்திரன் – வேதி
சாம்ராட் சுரேஷ் – சாம்ராட்
புகழ் மகேந்திரன் – ஜெகன்
பிரேம் நாத் – ஜெய குமார்
ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் ஆர்.டி.எக்ஸ் படத்தொகுப்பு செய்ய, உமா தேவி பாடல்கள் எழுதியுள்ளார். ஏ.ஆர்.சுகுமாரன் கலை இயக்குநராக பணியாற்ற, எஸ்.அழகிய கூத்தன் மற்றும் சுரேன்.ஜி ஒலி வடிவமைப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். ஃபயர் கார்த்தி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, அபிநயா கார்த்திக் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். எழில் பெரியவேதி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். கலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் கீழ் ஹரிசங்கர் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர் ராஜுமுருகன் வழங்குகிறார். மக்கள் தொடர்பு – டி ஒன்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதி சமூகத்தை பிளவுபடுத்தும் ராஜபாளையம் கிராமத்தில், மாறனின் (ஹரிசங்கர்) ஒடுக்கப்பட்ட சமூகத்தில் வளர்க்கப்படும் ஒரு பன்றி, கிராமத்தின் தெருக்களில் வழிதவறி ஓடுவதை மாறனும் அவரது நண்பர்களும் சேர்ந்து, பன்றியைப் பிடிக்க முயல்கிறார்கள், இது சாதி அடிப்படையிலான சமூகத்தில் பதற்றத்தை எழுப்புகிறது. ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள், தன் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மாறனுக்கும் அவரது நண்பர்களுக்கும் தொடர்ந்து தொல்லைகளை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். தந்திரமான அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட ஆதாயம் தேடும் சூழ்ச்சியால் சாதி வேறுபாடுகள் மற்றும் பொருளாதார சவால்கள் பகையை தீவிரப்படுத்துகிறது. அவர்கள் வலையில் மைய நபர்களான மாறனும் ஜெய்குமாரும் சிக்கிக் கொள்கிறார்கள். அதே நேரத்தில், ஆதிக்க சாதியைச் சேர்ந்த தேவகிக்கு (சங்கீதா கல்யாண்) மாறன் மீது காதல் உணர்வுகளை வளர்க்கும் போது, மாறனை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். மேலும், மலை உச்சியில் (கொட்டாங்கல் பாறை) உள்ள கோவிலில் பிரார்த்தனை செய்ய வந்த மாறன் மற்றும் அவரது சமூகத்தினர்கள் மீது ஆதிக்க சாதி சமூகம் தங்கள் கோபத்தை கட்டவிழ்த்துவிடும் போது அவர்களது கிராம மோதல் தீவிரமடைகிறது. இந்நிலையில், இரு குழுக்களும் கர்நாடகாவில் உள்ள ஒரு பழச்சாறு தொழிற்சாலைக்கு 3 மாத பணிக்கு செல்லும் போது கதை மாறுகிறது, இங்கு சாதி பதட்டங்கள் மொழி ரீதியான பாகுபாடுகளுக்கு வழிவகுக்கின்றன. அந்த பேக்டரியில் பணிபுரியும் ஒரு சில கன்னட வெறியர்கள் தங்களது மொழி வெறியை அவர்கள் மீது காட்டும் போது என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் மாறன் கதாபாத்திரத்தில் ஹரி சங்கர், கோபம், ஆக்ரோஷம் என உடல் மொழி மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.
அதோ போல், தேவகி கதாபாத்திரத்தில் சங்கீதாவின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. கிளைமாக்ஸ் அரை நிர்வாணத்துடன் நாயகன் ஹரி சங்கர்;, அவர் அருகில் கிழிந்த ஆடையுடன் நாயகி சங்கீதா உடல் முழுவதும் காயங்களுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் உட்கார்ந்திருக்கும் காட்சியில் இருவரும் சேர்ந்து உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பெரிய பலம் சேர்த்ததுடன், பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளனர்.
படத்தில் நடித்த குரு ராஜேந்திரன், புகழ் மகேந்திரன், பராரி, சாம்ராட் சுரேஷ், ப்ரேம்நாத் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரத்தில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி ஜொலிக்கிறார்கள்.
ஸ்ரீதரின் ஒளிப்பதிவு கிராம வாழ்க்கைக்கும் கர்நாடகாவின் தொழில்துறை அமைப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை படம் பிடிக்கிறது.
ஷான் ரோல்டனின் இசை மற்றும் பின்னணி இசையும், சாம் ஆர்.டி.எக்ஸ் படத்தொகுப்பும், ஃபயர் கார்த்தி சண்டைக்காட்சிகள் கதைகளத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
ஒரே குல சாமியை வணங்கும் இரண்டு சமூகங்கள். ஒரு சமூகம் மேல் சாதி என்னும் ஒரு சமூகம் கீழ் சாதின்னும் சொல்லப்படுவதும் ரெண்டு சமூகத்துல இருக்கவங்களுமே கூலி வேலை செய்பவர்கள். அவர்களுக்குள் இருக்கும் சாதி மோதல், காதல் இவற்றின் பின்னணியில், பெங்களூருக்கு வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் பற்றியும், சாதி, மொழி, மதத்தை வைத்து சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சமகால அவலங்களை பேசுவதோடு, சாதி மதம் மொழியை வைத்து அரசியல் செய்யும் இந்தச் சமூகத்தை கேள்வி கேட்டு, அறத்தை நிலைநாட்ட, அன்பை விதைக்கும் படமாக படைத்துள்ளார் இயக்குநர் எழில் பெரியவேதி.
மொத்தத்தில் கலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் கீழ் ஹரிசங்கர் தயாரித்துள்ள பராரி எளிய மக்கள் வாழ்க்கை முறையையும் அவர்களுக்கான அரசியலையும் அழுத்தமாக பேசுகிறது.