பம்பர் விமர்சனம் : பம்பர் மனிதநேயத்தை உணர்த்தும் சிறந்த ஃபீல் குட் மூவி | ரேட்டிங்: 3/5
வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.தியாகராஜா, ஆனந்த ஜோதி தயாரித்திருக்கும் படம் பம்பர். எழுதி இயக்கியிருக்கிறார் எம்.செல்வகுமார். வெற்றி, ஹரிஷ் பேரடி, ஷிவானி நாராயணன், கவிதா பாரதி, ஜி.பி.முத்து, அருவி மதன், ஆதிரா, தங்கதுரை, டிடோ வில்சன், சீமா ஜி.நாயர், அஜய், அஸ்னா, கீர்த்தி, கார்த்திகா, பாரி, முத்து, வீரன், திலீப், கல்கி, சௌந்தர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு-வினோத் ரத்தினசாமி, இசை-கோவிந்த் வசந்தா, எடிட்டர்-மு. காசி விஸ்வநாதன், பாடல்கள்-கார்த்திக் நேதா, கலை-சுபந்தர், சண்டை-சுதேஷ், உடை-முத்து, ஒப்பனை-பட்டினம் ரஷித், தயாரிப்பு மேற்பார்வை-ராஜ் கமல், பிஆர்ஒ நிகில் முருகன்.
தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு-வினோத் ரத்தினசாமி, இசை-கோவிந்த் வசந்தா, எடிட்டர்-மு. காசி விஸ்வநாதன், பாடல்கள்-கார்த்திக் நேதா, கலை-சுபந்தர், சண்டை-சுதேஷ், உடை-முத்து, ஒப்பனை-பட்டினம் ரஷித், தயாரிப்பு மேற்பார்வை-ராஜ் கமல், பிஆர்ஒ நிகில் முருகன்.
புலிப்பாண்டி (வெற்றி) பணமே எல்லாம் என்று நினைக்கும் பொறுப்பற்ற இளைஞன், அவர் தனது மூன்று சகாக்களுடன் சேர்ந்து, பணத்திற்காக எதையும் செய்வான். மக்களை கொள்ளை அடிப்பதில் இருந்து காந்தி ஜெயந்தியின் போது மது விற்பதன் மூலம் நிறைய சம்பாதிக்கலாம் என்று தனது தாயிடம் யோசனை சொல்லி வட்டிக்கு பணம் வாங்கி தரும்படி கேட்கிறான். புலிப்பாண்டி உள்ளூர் காவல் நிலையத்தில் சில்லறை திருட்டு வழக்குகளில் அடிக்கடி சிக்குவான். சட்டவிரோதமான முறையில் சம்பாதிக்கும் பணத்தில் லஞ்சம் வாங்கும் போலீஸ்காரர் மாடசாமி (கவிதா பாரதி) புலிப்பாண்டி இடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு அவனுக்கு அவ்வப்போது உதவுவான். இந்தச் சூழ்நிலையில் ஒரு நாள் புலிப்பாண்டிக்கு மாடசாமி ஒரு மனிதனை கொலை செய்யும் திட்டத்தை கூறி பெருசா சம்பவம் செய்து நிறைய சம்பாதிக்கலாம் என்று கூறுகிறான். அதாவது மாடசாமி புலிப்பாண்டி இடம், சகோதரர்கள் இருவரும் சொத்துக்காக சண்டையிடுவதாகவும், மூத்தவர் தம்பியைக் கொல்ல யாரையாவது தேடுவதாகவும் கூறுகிறார். புலிப்பாண்டி ஆரம்பத்தில் தயங்கினாலும், பண மோகம் இறுதியில் அவரை ஒப்புக்கொள்ள வைக்கிறது. ஆனால் விஷயம் வேறு விதமாக மாறுகிறது. பின் புலிப்பாண்டியும் அவனது நண்பர்களும் தாங்கள் செய்யாத அந்த கொலையில் சிக்கிக் கொள்கிறார்கள். இந்த கொலை குற்றவாளியை பிடிக்க நேர்மையான மற்றும் கடமை உணர்வுள்ள புதிய காவல் கண்காணிப்பாளர் பெஞ்சமின் (அருவி மதன்) நியமிக்கப்படுகிறார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரியிடம் இருந்து தப்பிக்க, நண்பர்களுடன் சேர்ந்து புலிப்பாண்டியும் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்ல முடிவு செய்கிறான். அந்தப் பயணத்தின் போது தன் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்படும் என்பது புலிப்பாண்டிக்குத் தெரியாது. சபரிமலையில், புலிப்பாண்டி முஸ்லீம் மலையாளி லாட்டரி சீட்டு விற்பவரான இஸ்மாயிலை (ஹரீஷ் பேரடி) சந்திக்கிறார். பேச்சு வாக்கல் தன் சொந்த ஊர் தூத்துக்குடி என்று கூறுகிறான். அவர் மீது இரக்கம் கொண்டு, புலிப்பாண்டி பம்பர் லாட்டரி சீட்டை வாங்குகிறான். ஆனால் அதே இடத்தில் அதை தவற விட்டு வீடு திரும்புகிறான். தொலைந்து போன லாட்டரி சீட்டை கண்டெடுத்து பத்திரமாக வைக்கும் இஸ்மாயிலுக்கு, அந்த சீட்டுக்கு ₹10 கோடி பம்பர் பரிசு வென்றது தெரிய வருகிறது. ஆனால் பரிசுத் தொகையை தனக்காகக் கோருவதற்குப் பதிலாக, புலிப்பாண்டியைக் கண்டுபிடித்து லாட்டரி சீட்டை அவரிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார். குடும்ப சூழ்நிலையை சுட்டி காட்டி அந்த பணத்தை தனதாக்கிக் கொள்ளலாம் என்று ஒட்டு மொத்த குடும்பத்தினரும் கூறியும், மிரட்டியும் அவர்களுக்கு இஸ்மாயில் பணியவில்லை. 10 கோடி ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டை, புலிப்பாண்டியை கண்டுபிடித்து ஒப்படைக்கும் நோக்கில், கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு முதியவர் பயணத்தை தொடர்கிறார். கஷ்டப்பட்டு புலிப்பாண்டியைத் தேடிச் கண்டு பிடித்து ₹10 கோடி பம்பர் பரிசை வென்ற லாட்டரி சீட்டை அவனிடம் ஒப்படைக்கிறார். அதன் பின் அடுத்து அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.
எப்போதும் நல்ல ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுக்கும் வெற்றி, பம்பரில் புலிப்பாண்டி கதாபாத்திரத்தில் தூத்துக்குடியில் ரவுடியாக சுற்றி தெரியும் இளைஞனாக நேர்த்தியான மற்றும் பாராட்டத்தக்க நடிப்புடன் ஸ்கிரிப்ட்டுக்கு என்ன தேவையோ அதை அப்படியே வழங்கி உள்ளார்.
லாட்டரி சீட்டு விற்பவரான ஏழை இஸ்மாயில் கதாபாத்திரத்தில் ஹரீஷ் பேரடி அமைதியான மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் தான் எப்போதும் ஒரு அற்புதமான நடிகன் என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார்.
ஷிவானியின் காட்சிகள் குறைவு என்றாலும், அவருக்கு கிடைத்த வாய்ப்பை திறம்பட செய்துள்ளார்.
சுவாரசியமான கதாபாத்திரத்தில் தங்கதுரை மற்றும் துப்பாக்கி பாண்டியன் எனும் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் ஜிபி முத்து அப்பாவித்தனமான நடிப்பில் கவனம் பெறுகிறார்.
கவிதா பாரதி, ஆதிரை, அருவி மதன், ஆதிரா, தங்கதுரை, டிடோ வில்சன், சீமா ஜி.நாயர், அஜய், அஸ்னா, கீர்த்தி, கார்த்திகா, பாரி, முத்து, வீரன், திலீப், கல்கி, சௌந்தர்யா உள்ளிட்டோர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு வலுசேர்த்துள்ளனர்.
முதல்பாதியில் காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் கொஞ்சம் கைவைத்திருக்கலாம்.
தூத்துக்குடி மற்றும் கேரளாவில் பயணிக்கும் திரைக்கதைக்கு வினோத் ரத்தினசாமியின் காட்சி கோணங்கள் பெரிய பலம் சேர்த்துள்ளது.
கிருஷ்ணாவின் பின்னணி இசையும், கார்த்திக் நேத்தாவின் வரிகளுக்கு கோவிந்த் வசந்தாவின் இசை மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இயக்குனரோடு கைகோர்த்து சிம்பிலான, உணர்வுபூர்வமான கதைகளத்துக்கு வலு சேர்த்து இருக்கிறார்கள்.
துரோகிகளும் குற்றவாளிகளும் ஆட்சி செய்யும் இன்றைய காலத்திலும் நேர்மையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டி, மனிதநேயத்தின் ஆழங்களை ஆராய்ந்து ஆழமான உணர்ச்சிகளைத் தூண்டும் கதைக்களம். அதில் விவரம் தெரியாத ஒருவரை தேடிச்செல்லும் பயணம், பணத்துக்காக தந்தையை கொல்ல துடிக்கும் மகன், அதே பணத்துக்காக நண்பனை கொல்ல திட்டமிடும் நண்பர்கள், இறுதிக் காட்சியில் கரையும் உள்ளங்கள் என மனித மனவோட்டங்கள் என அனைத்தையும் திரைக்கதையில் வடிவமைத்து கேரள பம்பர் லாட்டரியை மையக்கருவாக வைத்து சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து உயிரோட்டமான படைப்பை அளித்துள்ளார் இயக்குனர் எம்.செல்வகுமார்.
மொத்தத்தில், வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.தியாகராஜா, ஆனந்தஜோதி தயாரித்திருக்கும் பம்பர் மனிதநேயத்தை உணர்த்தும் சிறந்த ஃபீல் குட் மூவி.