நேசிப்பாயா சினிமா விமர்சனம் : அதிக பட்ஜெட்டில் உருவாகிய நேசிப்பாயா தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உட்பட பார்வையாளர்களையும் ஏமாற்றி விட்டது | ரேட்டிங்: 2/5
நடிகர்கள் : ஆகாஷ் முரளி, அதித்தி சங்கர், சரத்குமார், குஷ்பு சுந்தர், பிரபு, ராஜா, கல்கி கோச்சலின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு : கேமரூன் எரிக் பிரிசன்
படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : சரவணன் வசந்த்
பாடலாசிரியர்கள் : பா விஜய், விக்னேஷ் சிவன், ஆதேஷ் கிருஷ்ணா
நடனம் : தினேஷ்
ஒலி வடிவமைப்பு – மிக்ஸிங் : தபஸ் நாயக்
ஆடை வடிவமைப்பாளர் : அனு வர்தன்
இணை தயாரிப்பு : சினேகா பிரிட்டோ
தயாரிப்பு : சேவியர் பிரிட்டோ
இயக்கம் : விஷ்ணுவர்தன்
பத்திரிக்கை தொடர்பு : சுரேஷ் சந்திரா- அப்துல் நாசர்
நண்பர்களுடன் காரில் அலுவலக கூட்டத்துக்காக புறப்பட்டுச் செல்லும் அர்ஜுன் (ஆகாஷ் முரளி), அலுவலகத்தில் நுழையும் போது தொலைக்காட்சியில், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரேக் அப் ஆன தனது முன்னாள் காதலி தியா (அதிதி ஷங்கர்) போர்ச்சுகல் நாட்டில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இதையடுத்து அவரைக் காப்பாற்ற போர்ச்சுகல் செல்ல முடிவெடுத்து புறப்படுகிறார். அங்கு தியாவுக்கு வாதாடும் வழக்கறிஞர் இந்திராணி ஜோஹானை (கல்கி கோச்லின்) சந்திக்கிறார். தியாவை காப்பாற்றும் முயற்சியில் இருக்கும் அர்ஜுனிடம் அவர்கள் காதலை பற்றி விசாரிக்கிறார். அர்ஜுன்-தியா காதல் எப்படி மலர்ந்தது, எதனால் பிரிந்தார்கள் என்ற பிளாஷ்பேக் கதையைச் சொல்லி, பிரிந்து இரண்டு வருடங்கள் ஆனாலும் தியா மீது இன்றும் அதே நேசத்துடன் காதலிப்பதால் அவளை காப்பாற்ற வந்துள்ள விவரம் கூறுகிறார். இந்நிலையில் மேலும் செல்வாக்கு மிக்க நபர்கள் அழுத்தம், சிறையில் தியா மீது நடக்கும் கொலை முயற்சியையும் அவர்கள் எப்படி சமாளித்தார்கள்? இந்த கொலைக்கு காரணமான உண்மையான கொலையாளி யார், அவர்களுடைய நோக்கம் என்ன? அர்ஜுன் தியாவை மீட்டெடுக்க என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆகாஷ் முரளி அர்ஜுனாக கண்டதும் காதல் என்று சேட்டை செய்து சுற்றும் வழக்கமான கதாபாத்திரத்தில் எந்த ஒரு புதுமையும் இல்லை. காதலுக்கும் துன்பத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் உணர்ச்சியை வெளிக்கொண்டு வர மிகவும் சிரமப்படுகிறார். நடிப்பில் அவரது உடல் மொழி மற்றும் டயலாக் டெலிவரி இன்றைய கதாநாயகன் ஒருவரை நினைவூட்டுகிறது. ஆகாஷ் முரளி எதிர்காலத்தில் தனக்கென ஒரு பாணியை கடைபிடித்தால் தமிழ் சினிமாவில் ஜொலிக்கலாம்.
தியா கதாபாத்திரத்தில் அதிதி ஷங்கர் வலிமையான மன உறுதியுள்ள பெண்ணாக பிரகாசித்தாலும் அவ்வப்போது அவரது நடிப்பில் ஓவர் டோஸ் தெரிகிறது.
போர்ச்சுக்கல் வழக்கறிஞராக நடித்துள்ள கல்கி கோச்சலின், வழக்கறிஞர் இந்திராணி ஜோஹான் கதாபாத்திரத்தில் ஒரு முத்திரை பதிக்கிறார்.
தொழிலதிபர் ஆதி நாராயணனாக சரத்குமார், அவர் மனைவி வசுந்தராவாக குஷ்பு மற்றும் எதிர்மறை வேடத்தில் வரதராஜனாக ராஜா ஆகியோர் அமெச்சூரான திரைக்கதைக்கு தங்களால் ஆன சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
ஃபெடரிகோ கியூவாவின் அதிரடி காட்சிகள், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் மிகச் சிறப்பாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் கேமரூன் எரிக் பிரிசனின் ஒவ்வொரு பிரேமும் பார்வையாளர்களை அழகிய ஐரோப்பிய கிராமப்புறங்களுக்கு அழைத்துச் செல்கின்றன.
யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் பின்னணி இசை அற்புதம். இந்த தொழில்நுட்ப கலைஞர்களின் ஆத்மார்த்தமான பங்களிப்புகள் பலவீனமான திரைக்கதையால் வீணடிக்கப்பட்டு உள்ளது.
சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தனின் படங்களில் காதல், நகைச்சுவை, அதிரடி, சஸ்பென்ஸ் என அனைத்தும் அவரது திரைக்கதையில் வலுவான கூறுகளாகும். ஆனால் நேசிப்பாயாவில் இவை அனைத்தும் இருந்தும் ஒரு அமெச்சூர் இயக்குனர் திரைக்கதை அமைத்து இயக்கியது போல் இருக்கிறது இயக்குனர் விஷ்ணுவர்தன் படைப்பு.
மொத்தத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகிய நேசிப்பாயா தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உட்பட பார்வையாளர்களையும் ஏமாற்றி விட்டது.