நெஞ்சுக்கு நீதி விமர்சனம்: நெஞ்சுக்கு நீதி சமுத்துவ சமுதாயம் வளர வழி வகுத்து கொடுக்கும் தீர்ப்பு | ரேட்டிங் – 3/5
அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதியில் தான்யா ரவிச்சந்திரன், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு, ஆரி அர்ஜுனன்,ராட்சசன் சரவணன், ஷிவானி ராஜசேகர், ரமேஷ் திலக், மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.பே வியூ பிராஜக்ட்ஸ் சார்பில் போனி கபூர், ஜீ ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இணைந்து தயாரித்து வழங்கும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியீட்டில் வந்துள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இசை – திபு நினன் தாமஸ், ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன், வசனம் -தமிழரசன் பச்சைமுத்து, படத்தொகுப்பு -ரூபன், பாடல்கள்-யுகபாரதி, பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா, ஏய்ம் சதீஷ்.
ஏஎஸ்பியாக பொள்ளாச்சியில் உள்ள ஒரு கிராமத்திற்கு மாற்றலாகி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். காவல்துறையிலும், கிராமத்திலும் சாதி பாகுபாடு, ஆதிக்க துஷ்பிரயோகம் அதனால் ஏற்படும் பிளவுகள், போராட்டங்கள் என்று இரண்டு பட்டு கிடப்பதை காண்கிறார். இரண்டே நாளில் மூன்று பெண்கள் காணாமல் போக, பின் அதில் இரண்டு பெண்கள் பிணமாக தூக்கில் தொங்க, ஒரு பெண் காணாமல் போவதால் பெரிய சிக்கல் ஏற்படுகிறது. இதற்கான விசாரணையில் இறங்கும் போது, அதில் அரசியல்வாதி, போலீஸ் அதிகாரிகள் என்று பலர் சம்பந்தப்பட எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வீணாக போகிறது.தனக்கு எதிராக சதி செய்பவர்களை கண்டறிந்து துரிதமாக விசாரணையை தன் நேரிடிப் பார்வையில் கொண்டு வந்து காணாமல் போன பெண்ணை தேடிச் செல்கிறார். இதனால் தன் பதவி பறி போகும் சூழ்நிலை ஏற்பட, எவ்வாறு உதயநிதி விசாரணையை முடித்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறார்? மறுக்கப்பட்ட நீதியை மீட்டு கொடுத்தாரா? என்பதே மீதிக்கதை.
ஏ.எஸ்.பி விஜயராகவனாக உதயநிதி ஸ்டாலின் நடை, உடை, பாவனையில் அச்சு அசலாக அமைதியான ஆனால் உறுதியான காவல்துறை அதிகாரியாக படத்தில் மிளிர்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் பேசும் வசனங்கள், கேட்கும் கேள்விகள் ரசிகர்களிடையே கைதட்டல் பெறுகிறது. எடுத்த காரியத்தை முடிக்கும் வலிமையோடு இடர்பாடுகளை கடந்து சாதிக்கும் கதாப்பாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.
நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் ஆடல் பாடல்கள் இல்லாத வித்தியாசமான கோணத்தில் அனைத்து கேள்விகளும் ஒரே வாக்கியத்தில் அழுத்தமான சிந்திக்கக்கூடிய பதில்களால் மனதில் ஆழமாக பதிகிறார். வில்லனாக மிரட்டல், உருட்டல் காவல் அதிகாரியாக சுரேஷ் சக்கரவர்த்தி, எதிர்த்து பேச முடியாமல் தவிக்கும் போலீஸ்காராக இளவரசு, ஆரி அர்ஜுனன் போராளிக்குரிய கதாபாத்திரத்திலும் ராட்சசன் சரவணன், ஷிவானி ராஜசேகர், ரமேஷ் திலக், மயில்சாமி ஆகியோர் தங்கள் நடிப்பால் படத்தின் உயிரோட்டமான காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளனர்.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு தனித்துவத்துடன் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
திபு நினன் தாமஸ் இசை படத்தின் காட்சிகளுக்கேற்ற பங்களிப்பை கொடுத்து பின்னணி இசையிலும் கவனிக்க வைத்துள்ளார்.
படத்தின் முக்கிய தூணாக விளங்குவது தமிழரசன் பச்சமுத்துவின் வசனங்கள் பல இடங்களில் சிந்திக்கும்படியாகவும், சாட்டையடியாகவும் கொடுத்து அசர வைத்துள்ளார். படத்தொகுப்பு ரூபன் திரைக்கதையின் சுவாரஸ்யத்திற்கு நன்றாக மெனக்கெட்டிருக்கிறார்.
சமூக நீதி பேசும் இந்தப்படம் ‘ஆர்டிகிள் 15″ என்ற ஹிந்திப் படத்தின் ரீமேக்கை தமிழ்நாட்டின் சூழலுக்கேற்ப சில காட்சிகளை சேர்த்தும், சிலவற்றை நீக்கியும் படமாக்கி ஆதிக்க மனோபாவம். இந்தித் திணிப்பு, இருமொழிக்கொள்கை, அம்பேத்கர், பெரியார் சிலைகள் கூண்டில் காண்பிப்பது, இட ஒதுக்கீடு, சாதி பாகுபாடு, குற்றங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் மனப்பான்மை, காவல் துறையில் இருக்கும் சாதி வேற்றுமை அத்தனையும் ஒரே படத்தில் காண்பித்து தைரியமாக உரக்கச் சொல்லி அதிரடியாக காட்சிகளை அமைத்து அசத்தியுள்ளார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.
மொத்தத்தில் பே வியூ பிராஜக்ட்ஸ் சார்பில் போனி கபூர், ஜீ ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியீட்டில் வந்துள்ள படம் நெஞ்சுக்கு நீதி சமுத்துவ சமுதாயம் வளர வழி வகுத்து கொடுக்கும் தீர்ப்பு.