நந்தன் சினிமா விமர்சனம் (NANTHAN movie review) : நந்தன் -ஓடுக்கப்பட்ட மக்களின் குரல் அரசியல் பார்வையாளர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பேசும் பொருள் ஆகுமா என்பது ஒரு கேள்விக்குறி | ரேட்டிங்: 2.5/5

0
402

நந்தன் சினிமா விமர்சனம் (NANTHAN movie review) : நந்தன் -ஓடுக்கப்பட்ட மக்களின் குரல் அரசியல் பார்வையாளர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பேசும் பொருள் ஆகுமா என்பது ஒரு கேள்விக்குறி | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள்:

எம் சசிகுமார் – கூழ் பானை
ஸ்ருதி பெரியசாமி – செல்வி
மாதேஷ் – அழகன்
மிதுன் – நந்தன்
பாலாஜி சக்திவேல் – கோப்புலிங்கம்
சமுத்திரக்கனி – மருது துரை
கட்ட எறும்பு ஸ்டாலின் – எழுத்தர்
வி ஞானவேல் – மாவட்டம்
ஜி எம் குமார் – பெரியய்யா
சித்தன் மோகன் – தண்டபாணி
சக்தி சரவணன் – பொதியப்ப ராசு

குழுவினர்:

தயாரிப்பு – இரா என்டர்டைன்மெண்ட்
வெளியீடு – டிரைடென்ட் ஆர்ட்ஸ்
தயாரிப்பாளர் – இரா சரவணன்
இயக்குனர் – இரா சரவணன்
எழுத்தாளர் – இரா சரவணன்
ஒளிப்பதிவு – ஆர்.வி. சரண்
இசை – ஜிப்ரான் வைபோதா
படத்தொகுப்பு – நெல்சன் ஆண்டனி
மக்கள் தொடர்பு – யுவராஜ்

ஒரு சிறிய கிராமத்தில் ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் கிராமத் தலைவராக ஆட்சிக்கு வருகிறார்கள். அங்கு ஒருபோதும் தேர்தல் நடத்தப்படவில்லை என்பது கிராமத்தில் வாழும் மக்களின் பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது, அங்கு ஒடுக்குபவர்கள் தங்கள் கைகளில் முழுமையான அதிகாரத்தை வைத்திருப்பார்கள், ஒடுக்கப்பட்டவர்கள் எதுவும் சொல்ல முடியாது. ஜாதி தான் முக்கியம் என நினைக்கும் கிராமத் தலைவர் கோப்புலிங்கத்திடம் (பாலாஜி சக்திவேல்) பல ஆண்டுகளாக அடிமை போன்று வேலை செய்து வருபவர் கூழ் பானை (எ) அம்பேத்குமார் (சசிகுமார்). கோப்புலிங்கம் தன்னை தரக்குறைவாக நடத்தினால் கூட அவருக்கு விசுவாசமான தொழிலாளியாக இருந்து வருகிறார். கோப்புலிங்கம் அவரைத் தவறாகப் நடத்தினாலும், அம்பேத்குமார் தனது மனைவி செல்விக்கு (சுருதி பெரியசாமி) எதிராக கூட, கிராமத் தலைவர் பக்கம் நின்று அவரைப் பாதுகாத்து வருகிறார். ஆனால் தலித் இடஒதுக்கீட்டால் கிராமத்தில் ஒற்றைச் சாதி ஆட்சிக்கு சவால் விடும் போது கோப்புலிங்கம் தனது பஞ்சாயத்து தலைவர் பதவியை ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அம்பேத்குமாரை அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கிறார். தான் ஆட்டி வைத்தபடி அம்பேத் குமார் ஆடுவார் என்கிற நினைப்பில் அப்படி செய்கிறார். கோப்புலிங்கம் மற்றும் அவரது சாதியைச் சேர்ந்தவர்கள், கீழே இருப்பவர்கள், பல ஆண்டுகளாகத் தமக்கு ஏகபோக உரிமையைக் கொண்டிருந்த தலைவர் பதவியைப் பிடிப்பதால் எரிச்சலடைந்துள்ளனர். இந்நிலையில், அம்பேத்குமார் தலைவரானதும், தலைவர் பதவி கிடைத்தும் அதிகாரம் அனைத்தும் முன்னாள் தலைவர் கோப்புலிங்கத்திடம் தான் உள்ளது. இந்நிலையில் தன்னிச்சையாக அம்பேத்குமார் ஊர் மக்களுக்கு நல்லது செய்ய ஆரம்பிக்கிறார். அதை பார்த்து கோப்புலிங்கம் கோபம் அடைந்து அம்பேத்குமாரை ஊர் மக்கள் மத்தியில் நிர்வாணப்படுத்தி, அடித்து துன்புறுத்தி  பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்யும்படி செய்கிறார். அம்பேத்குமார் ராஜினாமாவை தொடர்ந்து தன் பேச்சை கேட்டு நடக்கும் மற்றொரு நபரை வலுக்கட்டாயமாக தலைவராக்க முயற்சி செய்கிறார் கோப்புலிங்கம். தனக்கு அநீதி இழைக்கப்படுவதை அறியும் அம்பேத்குமார் வெகுண்டு எழும் போது என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

சசிகுமார், கூழ்பானை(எ)அம்பேத்குமார் கதாபாத்திரத்தின் மூலம் முற்றிலும் வழக்கத்துக்கு மாறான உடல் மொழியால் வேறு ஒரு பரிமாணத்தைக் கொண்டு வந்துள்ளார் சசிகுமார். எப்போதும் சதா வெற்றிலையை மென்று கொண்டு அப்பாவித்தனமான விசுவாசியாக அந்த கதாபாத்திரத்துக்கு நேர்த்தியான நடிப்பால் நியாயம் சேர்க்கிறார்.

சாதி வெறி பிடித்தவராகவும், அதிகாரத் திமிர் பிடித்தவராகவும் வரும் பாலாஜி சக்திவேல் வில்லத்தனத்தில் மிரட்டி உள்ளார்.

மிக குறைவான திரை பிரவேசத்தில் முக்கியமான துணை கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி தனது இருப்பை பதிவு செய்துள்ளார்.

ஸ்ருதி பெரியசாமியும், கட்ட எறும்பு ஸ்டாலின், மாதேஷ், மிதுன், வி ஞானவேல், ஜி எம் குமார், சித்தன் மோகன், சக்தி சரவணன் உட்பட அனைத்து நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை எதார்த்தமாக செய்திருக்கிறார்கள்.

ஜிப்ரான் இசை மற்றும் பின்னணி இசை, ஆர்.வி.சரவணன் ஒளிப்பதிவு, நெல்சன் ஆண்டனி படத்தொகுப்பு ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு பெரிய அளவில் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.

ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு அதிகாரம் கிடைத்தும் அதை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போவது, ஊராட்சி மன்ற தலைவரால் சுதந்திர கொடியை கூட ஏற்ற முடியாத நிலை, தனி சுடுகாடு, பிசிஆர் சட்டம், இன்றைய அரசியல், கல்வியின் முக்கியத்துவம் என பல விஷயங்கள் பேசும்போது அழுத்தமான திரைக்கதையும் அதை காட்சிபடுத்திய விதம் தான் மக்கள் மத்தியில் விரைவாகவும் அழுத்தமாகவும் கொண்டு போய் சேர்க்கும். ஆனால் இயக்குனர்  இரா சரவணன் திரைக்கதையில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

மொத்தத்தில் இரா என்டர்டைன்மெண்ட் தயாரித்திருக்கும் நந்தன் -ஓடுக்கப்பட்ட மக்களின் குரல் அரசியல் பார்வையாளர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பேசும் பொருள் ஆகுமா என்பது ஒரு கேள்விக்குறி.