துணிவு விமர்சனம் : துணிவு பொங்கலுக்கு அஜீத் ரசிகர்களுக்கு கிடைத்த தீபாவளி சரவெடி ஆக்ஷன் ட்ரீட் | ரேட்டிங்: 3.5/5

0
1421

துணிவு விமர்சனம் : துணிவு பொங்கலுக்கு அஜீத் ரசிகர்களுக்கு கிடைத்த தீபாவளி சரவெடி ஆக்ஷன் ட்ரீட் | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள் :
அஜித்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா, பகவதி பெருமாள், மமதி சாரி, சிபி, ஜி.எம்.சுந்தர், சிராக் ஜானி, பிரேம் குமார், மகாநதி சங்கர், நயனா சாய், அமீர், அஜய், ஜி.பி.முத்து, மோகன சுந்தரம்,  ரிதுராஜ் சிங், சிஜோய் வர்கீஸ், பிர்லா போஸ்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

இயக்குனர்: எச் வினோத்
ஓளிப்பதிவு : நிரவ் ஷா
இசை: ஜிப்ரான்
எடிட்டர்: விஜய் வேலுகுட்டி
ஸ்டண்ட்: சுப்ரீம் சுந்தர்
நடன இயக்குனர்: கல்யாண்
கலை இயக்குனர்: மிலன்
தயாரிப்பு : பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி, ஜீ ஸ்டுடியோஸ்

கதை:

கொள்ளை கும்பல் தலைவன் ராதா (வீரா) ஒரு காவல் அதிகாரியின் உதவியுடன், சென்னையின் பிரதான பகுதியில் இயங்கும் பிரபல தனியார் வங்கியில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய தொகையை திருட வங்கிக் கொள்ளையைத் திட்டமிடுகிறான். இந்த திட்டத்தை டார்க் டெவில்ஸ் நுழைவு வரை எல்லாம் திட்டமிட்டபடியே நடக்கிறது. உள்ளே நுழையும் அந்த கும்பல், வங்கிக்குள் உள்ள அனைவரையும் பணயக் கைதிகளாக்குகிறது. இதனிடையே முன்கூட்டியே வங்கியை கொள்ளையடிக்க திட்டமிட்டு மைக்கல் (அஜித்) குழு உள்ளே நுழைந்திருக்கிறது. அந்த நேரத்தில் வாடிக்கையாளரைப் போல உள்ளே வந்த மைக்கல் கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு, மொத்த வங்கியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த குழு, மைக்கலை எதிர்க்கிறது. ஒருக்கட்டத்தில் திட்டம் என்னுடையது என்று மைக்கல் கூறினாலும் கொள்ளையடிக்கும் பணத்தை பிரித்துக் கொள்வதில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இரு குழுவும் கொள்ளை முயற்சியில் சேர்ந்து ஈடுபடுகின்றனர். மைக்கலின் திட்டத்தை நிறைவேற்ற அவருடைய கூட்டாளி கண்மணி (மஞ்சு வாரியர்) அவருக்கு வெளியில் இருந்து உதவுகிறார். திடுக்கிட்டுப்போகும் காவல் துறை மைக்கலை பிடிக்க தயாளன் (சமுத்திரக்கனி) தலைமையில் காவல்துறை சமரச முயற்சி மேற்கொண்டு வருகிறது. வங்கிக் கொள்ளையை திட்டமிடும் மைக்கல் அண்ட் கோ, கொள்ளையடித்தார்களா?  காவல் துறை கையில் மைக்கல் சிக்கினாரா? எதற்காக அவர் வங்கியைக் கொள்ளையடிக்க முடிவு செய்கிறார்? என்பதே மீதிக் கதை.  

மைக்கேல் ஜாக்சன் வங்கிக் கொள்ளை தலைவனாக அஜித் குமார் வித்தியாசமாகவும், ஸ்டைலிஷாகவும் மிகையான நடிப்புடன் நடித்திருக்கிறார். அவரின் நடனம் ரசிகர்களை உற்சாகமாக விசில்கள் எழுப்ப வைக்கிறது. அதே போல அஜீத் குமார் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர் பட்டாளத்தை திருப்திப்படுத்த காட்சிபடுத்தப்பட்ட அந்த தோட்டாக்களை ஸ்டைலுடன் சுடுவது பிரமிக்க வைக்கிறது.

அஜீத்குமாரின் உதவியாளராக மஞ்சு வாரியர் அனைத்து ஆயுதங்களையும் கையாளும் திறமையும் லாவகமும் பெற்றவர் என்பதால் திரையில் கம்பீரமாக ஆக்ஷன் காட்சிகளில் கலக்கியிருக்கிறார். அதே போல், அவரது கதாபாத்திரம் சிறப்பாக திட்டமிடப்பட்டிருந்தால், அவர் அஜித்துடன் தோளோடு தோள் நின்றிருப்பார்.

ஊடகத்துறையின் மூத்த செய்தியாளராக நடித்திருக்கும் பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் சில நிமிடங்களே இருந்தாலும் திரையை ஒளிரச் செய்ய அவரது திரை இருப்பும் வேடிக்கையான அவரது பேச்சும், டயலாக் டெலிவரி மற்றும் போலீஸ் அதிகாரி பக்ஸ் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சிகள் சிரிப்பலையில் அதிர வைக்கிறார்கள்.

காவல்துறை அதிகாரியாக வரும் சமுத்திரக்கனியும், காவல்துறையில் பணியாற்றும் கடைநிலை காவலராக வரும் மகாநதி சங்கரும் கவனம் ஈர்க்கிறார்கள்.

ஜான் கொக்கன், வீரா, பகவதி பெருமாள், மமதி சாரி, சிபி, ஜி.எம்.சுந்தர், சிராக் ஜானி, பிரேம் குமார்,  நயனா சாய், அமீர், அஜய், ஜி.பி.முத்து, மோகன சுந்தரம், ரிதுராஜ் சிங், சிஜோய் வர்கீஸ், பிர்லா போஸ் ஆகிய துணை கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

விஷுவல் ட்ரீட்க்கு நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு இருக்கிறது. குறிப்பாக சுப்ரீம் சுந்தர் இயக்கிய சண்டைக்காட்சியின் போது ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது. ஜிப்ரானின் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்க வைக்கிறது. விஜய் வேலுக்குட்டியின் எடிட்டிங் கச்சிதம்.

வங்கிகள் கிரெடிட் கார்டு, மியுச்சுவல் ஃபண்ட், பெர்சனல் லோன் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் பற்றிய சமூக செய்தியை விரிவாக, நிதி மோசடிகள் செய்யப்படும் விதம் முதல் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வாடிக்கையாளர்கள் வங்கியில் டெபாசிட் செய்யும் போது அந்த பணத்தை கார்ப்பரேட் முதலைகள் என்ன செய்கிறார்கள் என்பது வரை பல உண்மை தகவல்களை திரைக்கதையில் புகுத்தி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கார்ப்பரேட் உலகில் உள்ள அனைவருக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் படைத்துள்ளார் இயக்குனர் வினோத்.

மொத்தத்தில் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி, ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள துணிவு பொங்கலுக்கு அஜீத் ரசிகர்களுக்கு கிடைத்த தீபாவளி சரவெடி ஆக்ஷன் ட்ரீட்.