தீராக்காதல் திரைவிமர்சனம் : தீராக் காதல் உணர்ச்சிகரமான ரொமான்டிக் காதல் | ரேட்டிங்: 3.5/5
‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இருக்கும் திரைப்படம் ‘தீராக் காதல்’.
இதில் ஜெய், ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் G.R. சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா G.K மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு G.R.சுரேந்தர்நாத் வசனம் எழுத, T. உதயக்குமார் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். சுப்ரமணியன் நாராயணன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், G.K.M. தமிழ் குமரன் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருக்க, லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மக்கள் தொடர்பு யுவராஜ்.
மனைவி வந்தனா (ஷிவதா), மகள் ஆர்த்தியுடன் (வ்ரிதி விஷால்) அமைதியான, மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் கௌதம் (ஜெய்). வேலை சம்பந்தமாக சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரயில் பயணத்தை மேற்கொள்கிறான். பயணத்தின் போது, எதேச்சையாக தன் முன்னாள் காதலியான ஆரண்யாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) சந்திக்கிறார் கௌதம். இருவரும் கல்லூரியில் ஒன்றாக இருந்த காலத்தின் நல்ல பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். இருவரும் மங்களூருவில் இரண்டு வாரங்கள் நட்பாகப் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே பழகுகிறார்கள். அவர்கள் ஒன்றாக நேரத்தை செலவிடும் போது, ஒருவருக்கொருவர் தங்கள் உணர்வுகள் காலப்போக்கில் அவர்களுக்குள்ளே இருக்கிறது என்பதை அவர்கள் இருவரும் உணர்கிறார்கள். இருவரும் தங்களுக்கு திருமணம் ஆகியவர்கள் என்பதை உணர்ந்து, இருவரும் பொறுப்புடன் நடந்து கொள்கின்றனர். கௌதம் சென்னை திரும்பும் நேரம் வரும்போது, ஆரண்யாவிடம் ஒருவரை ஒருவர் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார். அவளும் ஒப்புக்கொண்டு இருவரும் செல்கிறார்கள். மறுபுறம் ஆரண்யா ஒரு கொடுமைக்கார கணவன் பிரகாஷ் உடன் (அம்ஜத்கான்) போராடி வருகிறார். ஒரு கட்டத்தில் அவளுக்கும் அவளது கொடுமைக்கார கணவருக்கும் இடையே சண்டை வெடிக்கிறது. தன்னை தானே குறைத்து மதிப்பிடுகின்ற ஒரு தன்மை எண்ணம் கொண்ட பிரகாஷ், தன் மனைவியை அடிக்கடி துன்புறுத்தி தாக்கி காயப்படுத்தி கொண்டே இருக்கிறான். அவள் எல்லா அடி உதைகளையும் அவமானங்களையும் பொறுத்துக்கொள்கிறாள், ஆனால் ஒரு கட்டத்தில், அவள் வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் தங்கும் போது அவளுடைய பெற்றோருடன் சமாதானம் பேச வருகிறான் பிரகாஷ். அப்போது மீண்டும் ஆத்திர பட்டு தன் மனைவியை கன்னத்தில் அடிக்க முயலும் போது ஆரண்யா அவன் திரும்ப அறைந்து விடுகிறாள். அத்துடன் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். அதிலிருந்து முன்னாள் காதலனின் அன்பையும் ஆதரவையும் பெற, ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு கௌதமை அழைக்க முடிவு செய்கிறாள். இது கௌதமின் திருமண வாழ்க்கையில் சிக்கல்களை உருவாக்குகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
பொறுப்பான கணவனாகவும் செல்லமான அப்பாவாகவும் மட்டுமின்றி முன்னாள் காதலியை சந்திக்கும் போது, கல்லூரியில் ஒன்றாக இருந்த காலத்தின் நல்ல பழைய நினைவுகளில் மூழ்கும்போது ஒரு நடிகராகவும் ஜெய் கவனம் பெறுகிறார். தன் மனைவியும், வளர்ந்த மகளும் இருப்பதை உணர்ந்து, முன்னாள் காதலியான ஆரண்யாவை (ஐஸ்வர்யா) பார்ப்பதை தவிர்த்து குழப்பமான ஒரு சாதாரண கணவனாகவும், அப்பாவாகவும் நம்மை ரசிக்க வைத்து மனதில் நிற்கிறார்.
ஆரண்யா கதாபாத்திரத்தில் கலக்கி மிரட்டலான வில்லியாகவும், அன்பும் ஆதரவும் பெற எந்த எல்லைக்கும் போக தயாரா உள்ள முன்னாள் காதலியாக ஐஸ்வர்யா ராஜேஷை ஏற்றிருக்கும் முக்கியமான கதாபாத்திரம் தான், மொத்த படத்திற்கும் முதுகெலும்பாக உள்ளது. ஒரு பெண்ணின் காதல் வலியை உணர்வுபூர்வமாக ஒருங்கிணைத்து சிறந்த முக பாவனை மற்றும் தேர்ந்த நடிப்பால் அனைவரையும் மீண்டும கவர்ந்துள்ளார்.
கொடுமைக்கார கணவன் பிரகாஷாக அம்ஜத் கான் அனைவரையும் பயமுறுத்துகிறார். அனைத்து பெண்களும் வெறுக்கும், யாரும் முன் வந்து நடிக்க விரும்பாத ஒரு கடினமான பாத்திரத்தை தைரியமாக ஏற்று நடித்ததற்காக அவரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.
திரைக்கதையில் குறைந்த அளவே இடம்பெறும் பாத்திரம் தான். அதை ஜெய்யின் மனைவியாக ஷிவதா அன்பான, அக்கறையுள்ள மனைவியாக மிக இயல்பாக நடித்து வந்தனா கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்து இருக்கிறார்.
சுட்டிக் குழந்தை ஆர்த்தியாக வ்ரிதி விஷால் கவர்கிறார், மேலும் க்ளைமாக்ஸில் முக்கிய பங்களிப்பை வழங்குகிறார்.
ஜெய்யின் நண்பராக வரும் அப்துல் லீ வழக்கமாக வரும் ஜால்ரா அடிக்கும் நண்பனாக இல்லாமல் நல்ல அறிவுரை சொல்லும் ஒரு கதாபாத்திரத்தில் காமெடியையும் வழங்கியுள்ளார்.
காதல் கதைக்கு தேவையான மூட்-ஐ வழங்கிய ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவும், ஆங்காங்கே ரசிக்க வைக்கும் சுரேந்திரநாத்தின் வசனங்களும், சித்துகுமரின் பின்னணி இசையும் கதையை ஆதரிக்கின்றன. ஆனால் ஒரு காதல் கதைக்கு மனதில் ஒலிக்கும் சூப்பர் ஹிட் பாடல்கள் மிகமிக அவசியம். அதை இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் தீராக்காதலில் தீர்த்து வைக்காமல் ஏமாற்றியிருப்பது தான் நிஜம்.
காதலில் விழுந்து பிரிந்தவர்களுக்கு, தன் முன்னாள் காதலிக்கு நிம்மதியற்ற வாழ்க்கை இருந்தால் எப்படி இருக்கும்? அதோ போல் காதலிக்கு நிம்மதியான வாழ்க்கை இருந்தால் எப்படி இருக்கும்? மற்றும் பிரிந்தவர்கள் திடீரென சந்திக்க நேர்ந்தால் அவர்களின் பழைய காதல் என்னவாகும், திருமண வாழ்க்கை பாதிக்கப்படுமா இல்லையா என்பதை ஒரு உண்மையான அழுத்தமான மற்றும் உணர்வுபூர்வமாக எதிரொலிக்கும் காதல் கதையை திரைக்கதை அமைத்து கொஞ்சம் சீரியஸாகவும், கொஞ்சம் யதார்த்தமாகவும் படைத்துள்ளார் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன். ஏன்றாலும் முதல் பாதி கதை சற்று மெதுவாக கடக்கிறது. இருப்பினும், இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இரண்டாம் பாதியில் சுவாரஸ்யமான வசனங்களை அமைத்து ஈடுகட்டி விட்டார்.மொத்தத்தில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள தீராக் காதல் உணர்ச்சிகரமான ரொமான்டிக் காதல்.