திருச்சிற்றம்பலம் விமர்சனம் :  தனுஷின் வெற்றி பட வரிசையில் திருச்சிற்றம்பலம் தனி இடம் பிடிக்கும் | ரேட்டிங்: 4/5

0
460

திருச்சிற்றம்பலம் விமர்சனம் :  தனுஷின் வெற்றி பட வரிசையில் திருச்சிற்றம்பலம் தனி இடம் பிடிக்கும் | ரேட்டிங்: 4/5

நடிகர்கள் – தனுஷ், இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, முனீஷ்காந்த் ராமதாஸ், அறந்தாங்கி நிஷா, ஸ்ரீரஞ்சினி,

ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ்ராஜின்

படத்தொகுப்பு – பிரசன்னா

இசை – அனிருத்

துயாரிப்பு – சன் பிக்சர்ஸ் நிறுவனம்

இயக்கம் – மித்ரன் ஆர் ஜவஹர்

மக்கள் தொடர்பு – ரியாஸ் அகமது

காவல்துறை அதிகாரியான தந்தை பிரகாஷ்ராஜ் செய்யும் சின்ன அலட்சியம் காரணமாக நிகழ்ந்த விபத்தில் அம்மாவையும், தங்கையையும் இழந்த தனுஷ் அந்த விபத்துக்கு அப்பாவான பிரகாஷ்ராஜே காரணம் என்று நினைத்து, அவருடன் பல ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறார். தாத்தா பாரதிராஜா அரவணைப்பில் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். தாயின் இழப்பால் பயந்த சுபாவமாக மாறும் தனுஷ்க்கு சிறு வயது முதல் நெருங்கிய தோழியாக இருக்கும் நித்யா மேனன் எப்போதும்; ஆதரவாகவும் உறுதுணையாகவும்  இருக்கிறார். ஆன்லைன் உணவு டெலிவரி பாயாக வேலை செய்யும் தனுஷ், ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வேறு உலகத்தில் இருக்கும் ராசி கண்ணாவை காதலிக்கிறார். அதற்கு நித்யா மேனன் உதவி செய்கிறார். ஆனால் அவரின் காதல் தோல்வியில் முடிகிறது. இந்த நிலையில் திடீரென பிரகாஷ்ராஜ்ஜிற்கு பக்கவாதம் வந்துவிட, அப்பாவுக்கு உற்ற துணைவனாக மாறவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் தனுஷ். குடும்பத்துடன் கிராமத்தில் நடைபெறும் மாமன் மகள் திருமணத்திற்கு நித்யா மேனனுடன் செல்கிறார். அங்கு பிரியாபவானி ஷங்கரை சந்திக்கிறார். அவர் மீதும் தனுஷ் காதல் வசப்படுகிறார். அதற்கும் நித்யா மேனன் உதவி செய்கிறார். ஆனால் இந்த காதலும் தோல்வியில் முடிகிறது. இறுதியில் தோழியையே கை காட்டுகிறார் தனுஷின் தாத்தாவான பாரதிராஜா. அதற்கு பின் என்ன நடக்கிறது? நித்யா மேனனின் ரோல் என்ன? அப்பாவுக்கும் பிள்ளைக்குமான உறவு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

தந்தை (பிரகாஷ்ராஜ்) மீது வெறுப்பை காட்டும் மகன் (தனுஷ்). தந்தையும் பேரனையும் இணைக்க முயற்சிக்கும் தாத்தா (பாரதிராஜா). இந்த மூவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளனர்.

எல்லாவற்றையும் கடந்து நிற்கிறது இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் நடிப்பு. வசனம், நடிப்பு, மற்றும் நகைச்சுவை மூலம் ஸ்கோர் செய்து வெள்ளித்திரையில்  மிகப்பெரிய கலைஞன் என்பதை மீண்டும் இந்த படத்தில் நமக்கு நிருபித்துள்ளார்.

டெலிவரி பாய் வேலை நண்பர்களின் கேலி கிண்டல், தோழியுடன் நட்பு, சிட்டி காதலில் ராஷிகண்ணாவை கவர செய்ய முயற்சி, அதே போல் கிராமத்தில் (கெஸ்ட்ரோலில் பிரியா பவானி சங்கர்) காதல் முயற்சி என அனைத்திலும் அடக்கமான பழைய தனுஷின் நடிப்பை காணமுடிகிறது.

காவல்துறை அதிகாரியாகவும் தனுஷின் தந்தையாகவும் எமோஷனல் காட்சிகளில் அனுபவ நடிப்பின் மூலம் மீண்டும் முத்திரை பதித்துள்ளார் பிரகாஷ்ராஜ். அப்பாவிற்கு (பாரதிராஜா) மகனாக மட்டுமல்லாமல், சில சென்டிமென்ட் காட்சிகளில் அனைவரையும் சிறந்த நடிப்பால் சிலிர்க்க வைக்கிறார்.

நித்யா மேனன் சிறந்த தோழியாக (தனுஷ் நித்யா மேனன் காம்போ) யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உழைத்துள்ளார்

ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் காட்சிகள் மிகமிக குறைவு என்றாலும் மனத்தில் நிற்கிறார்கள். முனீஷ்காந்த் ராமதாஸ், அறந்தாங்கி நிஷா, ஸ்ரீரஞ்சினி, மு.ராமசாமி, ஸ்டண்ட் சில்வா, விஜே பப்பு என அனைவருமே சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள்.
அழகான ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு அபாரம். அனிருத்தின் இசையை மற்றும் பின்னணி இசையும் ரசிக்கும்படி செய்து மீண்டும் தனது முத்திரையை பதித்து விட்டார். இவர்கள் இருவரின் பங்களிப்பு படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

பிரஷாந்த்– ஷாலினி நடித்த பிரியாத வரம் வேண்டும் கதையை ஞாபக படுத்தினாலும், தந்தை – மகன் – தாத்தா உறவு என ஒரு நடுத்தர குடும்ப கதை தான் இதுவும். ஒரே அப்பார்ட்மெண்டில் வசிக்கும் இவர்களை சுற்றியே நடக்கும் கதையை குடும்ப சென்டிமெண்டை அழுத்தமாக வைத்து திரைக்கதை அமைத்து ஃபீல் குட் மூவியாக சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்  மித்ரன் ஜவஹர்.

மொத்தத்தில் தனுஷின் வெற்றி பட வரிசையில் திருச்சிற்றம்பலம் தனி இடம் பிடிக்கும்.