டாடா திரைவிமர்சனம் : டாடா நெகிழ வைக்கும் தந்தை-மகன் பாசம் பற்றி பேசும் இதயத்தைத் தூண்டும் ஒரு சரியான குடும்ப பொழுதுபோக்கு படம் | ரேட்டிங்: 4/5
ஒலிம்பியா மூவீஸ் தயாரித்து, அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு எழுதி இயக்கிய படம் டாடா. படத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்கியராஜ், மோனிகா சின்னகோட்லா,ஹரிஷ் குமார் என பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். கதிரேஷ் அழகேசன் ஒளிப்பதிவு கவனிக்க, கார்த்திரேஷ் அழகேசன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பு D’One.
கதை:பெற்றோரின் பேச்சைக் கேட்காத, சரியாக படிக்காத, பொறுப்பற்று சுற்றும் கல்லூரி மாணவனாக வருகிறார் மணிகண்டன் (கவின்). அவருக்கும், உடன் படிக்கும் சிந்துவிற்கும் (அபர்ணா தாஸ்) காதல் பற்றிக்கெர்ள்கிறது. எதிர்பாராத விதமாக சிந்து கர்ப்பமாகிறார். மணி அந்த கர்ப்பத்தை கலைக்கச் சொல்லியும் சிந்து அவரது பேச்சைக் கேட்காததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தங்கள் நண்பன் வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் குடும்பம் நடத்துகிறார்கள். வேலையிலிருந்து குடித்து விட்டு வீட்டிற்கு வரும் மணி இன்னும் அப்படியே இருக்கிறாரே என்று மனம் நொந்து போகிறார், சிந்து. இருவருக்கும் ஏற்பட்ட சண்டையின் போது, “நீ செத்துரு” என்று கூறிவிட்டு போகிறார் மணி. மனைவி பிரசவ வலியில் கால் செய்யும் போது வேலை மீது இருந்த கவனத்தால் அதை பொருட்படுத்தாமல், போனை ஸ்விட்ச் ஆஃப் செய்கிறார். வீட்டுக்கு வரும் மணி தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்று பார்க்கும் போது அதிர்ச்சி அடைகிறார். அங்கு பெட்டில் குழந்தை மட்டும் இருப்பதை பார்க்கிறார்,.சிந்து பெற்றோர், குழந்தையிடம் இருந்து தாயை பிரித்து அவர்களுடன் சிந்துவை அழைத்து சென்று விடுகிறார்கள். இப்போது, மணிகண்டன் பொருளாதார நெருக்கடியில் இருந்தபோதிலும், பிறந்த குழந்தையை தனியாக வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இங்கிருந்து மனதைத் தொடும் தந்தை மகன் உறவு தொடங்குகிறது.
தனித்துவமான கதை தேர்வின் மூலம் ரசிகர்களை பெருமைப்படுத்தி இருக்கிறார் கவின். முதல் பாதி வரை, ஊர் சுற்றும் ஊதாரி இளைஞராகவும், பிறகு பொறுப்பற்ற கணவராகவும் வரும் கவின், மகன் பிறந்த பிறகு நல்ல தந்தையாகவும் நல்ல மனிதராகவும் மாறி பாசப்போராட்ட காட்சிகளிலும், க்ளைமேக்ஸ் காட்சிகளிலும்; மணிகண்டனாக கவின் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுகிறார்.
சிந்துவாக அபர்ணா தாஸ் கச்சிதம். கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பு படத்தின் முதுகெலும்பு. இருவரும் தங்கள் கதாபாத்திரங்களாக வாழ்ந்துள்ளனர்.இவர்களின் நடிப்பு படத்தின் முதுகெலும்பு.
பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா, ஒழுக்கமான குணாதிசயம் கொண்ட பெற்றோராக, உணர்வுபூர்வமான நடிப்பை வழங்கியுள்ளனர்.
விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் குமார் இவர்களின் நகைச்சுவை காட்சிகள் கச்சிதம்.
கவினின் மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் ஆத்விக் அழகு.
ஜென் மார்ட்டினின் இசையும் பாடல்களும் பெரும்பாலான காட்சிகளில் உணர்ச்சிகளைப் பெருக்குகின்றன. பின்னணி மூலம் படத்திற்கு மேலும் உயிர் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜென் மார்டின்.
எழில் அரசின் திறமையான ஒளிப்பதிவு, கதிரேஷ் அழகேசனின் மிருதுவான எடிட்டிங் முக்கிய உணர்ச்சிகளுக்கு தேவையான மனநிலையை வழங்கி திரைக்கதையோடு பயணிக்க உதவுகிறது.
டாடாவில் மிகவும் புத்துணர்ச்சியூட்டும் அம்சம் என்னவென்றால், அது மிக முக்கியமான செய்தியை சத்தமாகவும் தெளிவாகவும் சொல்கிறது – ஒரு குழந்தையை வளர்ப்பதில் தந்தை மற்றும் தாய் இருவரும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் மற்றும் அவர்களின் பாத்திரங்களை எடைபோடவோ ஒப்பிடவோ முடியாது. கவின் தன் மகனை தனியாக வளர்ப்பதையும், அதையொட்டி ஒரு சிறந்த மனிதனாகவும் தந்தையாகவும் மாறுவதையும் படம் வெளிச்சம் போட்டுக் காட்டினாலும், அது அம்மாவை மோசமான வெளிச்சத்தில் காட்ட முயற்சிக்கவில்லை. படத்தின் இந்த அம்சம் மற்றும் எழுத்து மிகவும் பாராட்டத்தக்கது. டாடா நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் காதல் ஆகியவற்றின் சரியான கலவையுடன் இளைஞர்களுடனும் குடும்பங்களுடனும் இணைந்து நன்கு எழுதப்பட்ட கதை. தந்தை-மகன் பாசத்தை மென்மையாக திரைக்கதையில் அமைந்து அதற்கான உறுதியான கதாபாத்திரங்களை தேர்வு செய்த கணேஷ் கே பாபுவுக்கு பாராட்டுக்கள்.மொத்தத்தில் டாடா நெகிழ வைக்கும் தந்தை-மகன் பாசம் பற்றி பேசும் இதயத்தைத் தூண்டும் ஒரு சரியான குடும்ப பொழுதுபோக்கு படம்.