ஜமா திரை விமர்சனம் : ஜமா மிக சிறந்த தமிழ் திரைப்படங்கள் வரிசையில் இடம்பெற்று பல விருதுகளை பெறும் | ரேட்டிங்: 4/5
லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாய் தேவானந்த் எஸ், சசிகலா எஸ், சாய் வெங்கடேஸ்வரன் எஸ் தயாரித்து பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்சாண்டர் வெளியிடும் ஜமா படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கிறார் பாரி இளவழகன்.
இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன், பாரி இளவழகன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கேவிஎன் மணிமேகலை, வசந்த் மாரிமுத்து, சிவா மாறன், ஏ.கே.இளவழகன், காலா குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு- கோபி கிருஷ்ணா, எடிட்டர் பார்த்தா, பிஆர்ஒ-டிஒன் சுரேஷ்சந்திரா.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் கூத்து கலைஞர், கல்யாணம் (பாரி இளவழகன்) தெரு கூத்தில் பெண் வேடங்களில் நடித்ததன் மூலம் பெண்களுக்கான நலினத்தை பெற்றதன் காரணமாக சமூக விமர்சனங்களை எதிர் கொள்கிறார். அவரது வாத்தியார் மற்றும் மாமா, தாண்டவம் (சேத்தன்) ஜமாவை நடத்துகிறார், அதே நேரத்தில் கல்யாணத்தின் தாய் (கேவிஎன் மணிமேகலை) அவரது மறைந்த தந்தை இளவரசு (ஸ்ரீ கிருஷ்ண தயாள்) அர்ஜுனன் உள்ளிட்ட முக்கியமான வேடங்களை போட்டு தன் மகனும் ஆண் வேடங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். கல்யாணத்துக்கும் தாண்டவத்தின் மகள் ஜெகாவுக்கும் (அம்மு அபிராமி) இளம் வயதில் இருந்து ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு உண்டு. கல்யாணம் ஜெகாவை திருமணம் செய்ய முற்பட்டு பெண் கேட்க சென்ற போது, தாண்டவம் அவரை அவமானப்படுத்துகிறார். மேலும், கல்யாணத்தின் வளர்ச்சியை தடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு அவருக்கு பெரிய மற்றும் ஆண் வேடங்களை கொடுக்காமல் அவரது திறமையை முடக்கி அவமானப்படுத்தி வருகிறார். ஜெகா தனது தந்தையின் விருப்பத்திற்கு எதிராக கல்யாணத்தை திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்த போதிலும், கல்யாணம் தனது கலையில் கவனம் செலுத்தி தனது சொந்த ஜமாவை நிறுவவும், தனது தந்தையின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும் தீர்மானிக்கிறார். தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை சவால்களுடன் போராடும் போது பாரம்பரிய நாட்டுப்புற கலைகளில் தனது தந்தையின் பாரம்பரியத்தை நிலைநிறுத்த போராடுகிறார். இந்நிலையில், ஒரு நாள், கல்யாணம் தனது சொந்த புதிய ஜமாவை உருவாக்க தனது சொந்த இடத்தை விற்று சக கலைஞர்களிடம் பணத்தை கொடுத்து அவர்களை வரவழைக்க முயல அவர் துரோகத்தை மட்டுமே சந்திக்கிறார். இதை அறிந்த அவரது தாயார் மனமுடைந்து இறந்துவிடுகிறார். முன்னதாக கிராமத்தில் தந்தை இளவரசுவால் உருவாக்கப்பட்ட முதல் ஜமாவை தந்தையின் நண்பன் தாண்டவம் எவ்வாறு சூழ்ச்சி செய்து இளவரசுவை வெளியேற்றி, தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முதல் ஜமாவை சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் பல அவமானங்களை எதிர்கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி எவ்வாறு மீட்டெடுத்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
பாரி இளவழகன் இயக்குனராகவும், கல்யாணம் என்ற இளம் கூத்துக் கலைஞராகவும் பெண்களின் நயத்துடன் தன் கதாபாத்திரத்திற்கு ஆழமும், நுணுக்கமும் அளித்து, காதல், துரோகம், ஏக்கம், வலி, என வாழ்வின் அனைத்து விதமான வெளிப்பாடுகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார். உடல் மொழி மூலம் ஒவ்வொரு பிரேமிலும் பிரதிபலிக்கிறது. நிச்சயம் அவருக்கு பல விருதுகள் வரும்.
தெருக்கூத்து ஜமாவின் வாத்தியாராக தாண்டவம் என்ற நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் சேத்தனின் அட்டகாசமான நடிப்பு குறிப்பாக கிளைமாக்ஸில் மிரட்டும் நடிப்பு படத்தின் இன்னொரு சிறப்பம்சம்.
ஸ்ரீ கிருஷ்ண தயாள் தனது கூத்து கலைஞராக அர்ஜுனன் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.
நன்கு எழுதப்பட்ட வலுவான ஜெகா என்கிற ஜெகதாம்பிகை கதாபாத்திரத்தில் அம்மு அபிராமி யதார்த்தமான நடிப்பைக் வெளிப்படுத்தி உள்ளார்.
கல்யாணத்தின் அம்மாவாக கேவிஎன் மணிமேகலை, பூனையாக வசந்த் மாரிமுத்து, மாறனாக சிவா மாறன், கருணாவாக ஏ.கே.இளவழகன், காலா குமார் மற்றும் சில நிஜ வாழ்க்கை தெருக் கூத்து கலைஞர்கள் உட்பட அனைத்து நடிகர்களும் தனது பன்முகத் திறனைக் நேர்த்தியாக வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்துள்ளனர்.
திரைக்கதையின் ஒட்டுமொத்த ஓட்டத்தின் முக்கிய முதுகெலும்பு இளையராஜாவின் இசை.
எடிட்டர் பார்த்தாவின் படத்தொகுப்பு சுவாரஸ்யமாக உள்ளது.
கோபி கிருஷ்ணாவின் காட்சி பாணி மற்றும் ஒளிப்பதிவு, கதையின் சாராம்சத்தைப் பிடிக்கும் வண்ண டோன்கள் உட்பட சில அழகாக படமாக்கப்பட்ட காட்சிகள் கலைஞர்களின் உணர்ச்சித் தாக்கத்தை மேம்படுத்துகிறது.
தமிழகத்தின் முக்கிய கலைகளில் ஒன்று தெருக் கூத்து. இன்றும் கிராம மக்களின் பொழுதுபோக்காக திகழும் இந்த கலை, தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ஆரணி, காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி போன்ற ஊர்களில் தெருக் கூத்திற்கான கூத்து பட்டறைகள் உருவாக்கப்பட்டு இந்த கலை வளர்க்கப்பட்டது. தெருக்கூத்து வளர்ச்சி பெற்றிருந்தபோது, மேடை நாடகங்கள் வளர்ந்தன. மேடை நாடகம் வளர வளர, தெருக்கூத்தின் தாக்கம் குறைந்தது. பின், தமிழில் சினிமா உருவானபோது எழுத்து, அரங்க அமைப்பு, நடிப்பு ஆகிய மூன்றையும் நாம் மேடைநாடகத்தில் இருந்து பெற்றுக்கொண்டோம். நமது மேடைநாடகமே அதிகம் வளர்ச்சியடையாத ஒன்றுதான். நமக்கு நெடுங்காலமாக இருந்து வந்தது கூத்துமரபுதான். நம்முடைய சினிமாவில் எல்லாமே தெருக்கூத்துக்கு நெருக்கமாக இருந்தன. திரைக்கதை அமைப்பு, காட்சிகளை அமைக்கும் முறை, நடிப்பு , ஒப்பனை எல்லாமே சிவாஜிகணேசன் வரை நடிப்பில் தெருக்கூத்தின் பாணியையே அதிகம் நாம் பார்த்திருக்கிறோம். சினிமாவின் தொழில் நுட்பவளர்சியால், தெருக்கூத்து மிகவும் நலிந்தது. இதன் விளைவாக, இன்று தெருக்கூத்து கலைஞர்கள் தங்களது கலையை வளர்க்க முடியாமல், பிழைப்பதற்கு ஊர் ஊராக சென்று கூலி வேலை செய்து, குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். பரம்பரை பரம்பரையாக கலையை வளர்த்தவர்களும், கலை ஆர்வம் கொண்டவர்களும் மட்டுமே நடிப்பதற்கு முன்வருகின்றனர். ஆனாலும், சிலர் இந்த கலையை விட்டு வேறு தொழிலுக்கு மாற கூடாது, இறந்தாலும் கூத்துப் பட்டறையிலேயே என் உயிர் பிரியட்டும் என்ற பிடிவாதத்துடன், வாழ்ந்து வருகின்றனர். காலப்போக்கில் மறைந்து போகிற தெருக்கூத்து என்ற ஒரு அசாதாரணமான கலையை தேர்ந்தெடுத்து, புதுப்பித்து நாடகக் குழுக் கலைஞர்களின் வாழ்க்கையை முன்னிலைப்படுத்தி ஈர்க்கும் நிகழ்ச்சிகளுடன் திரைக்கதை அமைத்து முதல் காட்சியிலிருந்தே கவரும் வகையில் படைத்து தெருக்கூத்து கலை மற்றும் கலைஞர்களை மரியாதையுடன் கௌரவப்படுத்தி உள்ளார் இயக்குனர் பாரி இளவழகன்.
மொத்தத்தில் லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாய் தேவானந்த் எஸ், சசிகலா எஸ், சாய் வெங்கடேஸ்வரன் எஸ் தயாரித்துள்ள ஜமா மிக சிறந்த தமிழ் திரைப்படங்கள் வரிசையில் இடம்பெற்று பல விருதுகளை பெறும்.