ஜப்பான் சினிமா விமர்சனம் : ‘ஜப்பான்’ கிளைமேக்ஸில் கார்த்தி ரசிகர்களை கவர்ந்துள்ளதால் ஒரு முறை பார்க்கலாம் | ரேட்டிங்: 3.5/5

0
372

ஜப்பான் சினிமா விமர்சனம் : ‘ஜப்பான்’ கிளைமேக்ஸில் கார்த்தி ரசிகர்களை கவர்ந்துள்ளதால் ஒரு முறை பார்க்கலாம் | ரேட்டிங்: 3.5/5

பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்க நடிகர் சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன் மற்றும் மலையாள நடிகர் சணல் அமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

கோவையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையின் சுவற்றில் ஓட்டை போட்டு பெரும் கொள்ளை நடக்கிறது. 200 கோடி மதிப்பிலான நகைகள் திருடு போனது உள்துறை அமைச்சர் (கே.எஸ். ரவிக்குமார்) பார்ட்னர் என்பதால் உடனடியாக போலீஸ் குழுக்களை அனுப்புகிறார். ஒரு குழு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் (சுனில்) கீழ் மற்றும் மற்றொரு குழு இன்ஸ்பெக்டர் பவானி (விஜய் மில்டன்) கீழ் கொள்ளையர்களை காவல்துறை தீவிரமாக தேடுகிறது. இரு அணிகளும் கொள்ளைக்கு காரணமான கோல்டன் ஸ்டார் ஜப்பான் (கார்த்தி) செய்ததாக உணர்ந்து வேட்டையாடத் தொடங்குகின்றனர். ஜப்பான் சிறு வயதில் இருந்தே திருடனாக வாழ்கிறார். தங்க வெறியில் நகைக்கடைகளில் கொள்ளை அடிக்கத் தொடங்கி நாடு முழுவதும் சென்று பல்வேறு மாநிலங்களில் நகைகளை கொள்ளையடித்து இவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. மேலும் சினிமா பைத்தியம் பிடித்த ஜப்பான் , கொள்ளையடித்த அந்தப் பணத்தில்  படத்தின் நாயகி சஞ்சுவை (அனு இம்மானுவேல்) ஹீரோயினாக வைத்து ஒரு படத்தையும் தயாரித்துள்ளார். ஜப்பான் சஞ்சுவை வெறித்தனமாக காதலிப்பவன். காவல்துறை தன்னைத் தேடுவதை தெரிந்து கொண்டு ஜப்பான் தனது காதலியான சஞ்சுவை (அனு இம்மானுவேல்) கடத்திக்கொண்டு பல பகுதிகளுக்கு காவல்துறையிடம் இருந்து தப்பித்து ஓடுகிறார் . இந்நிலையில்; பவானி குழுவினர் அவரை சுற்றி வளைக்கிறார்கள். இந்த கொள்ளையை தாம் செய்யவில்லை என்று ஜப்பான் கூறி அவர்களிடமிருந்து தப்பித்து, தன் பெயரில் கொள்ளையடித்தவனைப் பிடிக்க வேட்டையைத் தொடங்குகிறார்.  இந்தக் கொள்ளை சம்பவத்தில் நிஜமாகவே ஈடுபட்டது யார்? அவருக்கு ஜப்பான் என்ற பெயர் எப்படி வந்தது? அவர் ஏன் குற்ற வாழ்க்கைக்கு மாறினார்? இறுதியில் ஜப்பான் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதி கதை.

கார்த்தி ஏற்கனவே தனக்கு சிறந்த நகைச்சுவை இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளார், மேலும் இந்த படம் அவருக்கு அவரது விசித்திரமான நகைச்சுவை பாணியைக் காட்ட மற்றொரு தளத்தை வழங்கியுள்ளது. பிரபல திருடன் ஜப்பான் கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் புத்திசாலித்தனத்துடன் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்கப் பற்கள், வெல்வெட் ஜம்ப்சூட்கள் மற்றும் தள்ளாடும் நடை போன்ற தனித்துவமான பண்புகளுடன் ஜப்பானின் பாத்திரம் நகைச்சுவையானதாக சித்தரிக்கப்பட்டிருப்பது இந்தப் படத்தின் சிறந்த பகுதியாகும்.

கார்த்திக்கு பிறகு சுனில் போலீஸ் வேடத்தில் ஜொலிக்கிறார். அனு இம்மானுவேல் ஒரு கதாநாயகியாக நடித்தாலும், அவரது கதாபாத்திரத்திற்கு சரியான வலு இல்லை.

படம் முழுக்க கார்த்தியோடு பயணம் செய்யும் கதாபாத்திரத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு வாகை சந்திரசேகர் காண முடிகிறது.

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படத்தின் தொடக்கத்தில் அவரது நகைச்சுவையான டைமிங் சிரிப்பை வரவழைக்கும்.

வில்லன் கதாபாத்திரத்தில் ஜித்தன் ரமேஷின் நடிப்பை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசை படத்திற்கு பாசிட்டிவ் அம்சமாக நிற்கிறது.

தனது ஃப்ரேமிங் மற்றும் கேமராவொர்க்கின் மூலம் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் படத்திற்கு புதிய பாணியை கொடுத்துள்ளார்.

பிலோமின் ராஜ் எடிட்டிங் இன்னும் கூர்மையாக இருந்திருக்க வேண்டும்.

ராஜு முருகனின் கடந்த கால வெற்றிகள், பார்வையாளர்களிடம் எதிரொலிக்கும் அழுத்தமான கதைகள் வடிவமைக்கும் திறனை வெளிப்படுத்தின. ஆனால் அந்த அழுத்தமான வலிமை ஜப்பானில் பயன்படுத்தப்படவில்லை. முருகனின் முந்தைய படைப்புகளில் காணப்படும் உணர்ச்சி ஆழமும், பாத்திர வளர்ச்சியும் ஜப்பானில் இல்லை. கார்த்திக்குக்கு கதாபாத்திரத்தை உருவாக்கும் முயற்சியில், ராஜு முருகன் திரைக்கதையை கோட்டை விட்டு இருக்கிறார். ஆனால் கார்த்தி தன் அட்டகாசமான நடிப்பால் படத்தை தாங்கி பிடித்துள்ளளர்.

மொத்தத்தில், ட்ரிம் வாரியர்ஸ் தயாரித்துள்ள ‘ஜப்பான்’ கிளைமேக்ஸில் கார்த்தி ரசிகர்களை கவர்ந்துள்ளதால் ஒரு முறை பார்க்கலாம்.