செம்பியன் மாதேவி சினிமா விமர்சனம் : செம்பியன் மாதேவி சாதி வெறியால் விளைந்த இழப்புக்களை வாழ்க்கைக்கு நெருக்கமாகக் காட்டுகிறது | ரேட்டிங்: 2.5/5
8 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்திருக்கும் படம் ‘செம்பியன் மாதேவி’. கே.ராஜ சேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜேந்திர சோழன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். வ.கருப்பண், அரவிந்த், லோக பத்மநாபன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பின்னணி இசை ஏ.டி.ராம் அமைத்திருக்கிறார். சக்தி மற்றும் ஸ்ரீ செல்வி நடனக் காட்சிகளை வடிவமைக்க மெட்ரோ மகேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். மக்கள் தொடர்பு ஜெ.கார்த்திக்.
செம்பியன் என்ற கிராமத்தில் 2004 ஆம் ஆண்டு தலித் இளைஞர் படுகொலை செய்யப்படுகிறார். இளைஞரின் படுகொலைக்கு காரணமானவர்களை சட்ட ரீதியாக தண்டிக்க அவரது தந்தை 10 வருடங்களாக போராடிக் கொண்டிருக்க, கொலையாளிகள் யார்? என்பதையே காவல்துறை கண்டுபிடிக்காமல் இருக்கிறது. அதே ஊரில் வீரன் சொந்தமாக கோழி பண்ணை வைத்து நடத்தி வரும் இளைஞன் வீரன் (லோக பத்மநாபன்). படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞனின் தங்கை மாதேவியை (அம்ச ரேகா) பின்தொடர்ந்து காதலிக்கிறான். ஆரம்பத்தில் சாதி பாகுபாட்டிற்கு பயந்து நாயகனின் காதலுக்கு நாயகி எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு கட்டத்தில் நாயகன் மீது நம்பிக்கை ஏற்பட்டு அவரை காதலிக்க தொடங்குகிறார். இந்நிலையில் மாதேவி கர்ப்பம் ஆகிறாள். தான் கர்ப்பமாகி உள்ளதை பற்றி வீரனிடம் சென்று கூறி உடனே திருமணம் செய்யும் படி கூறுகிறாள். ஆனால் வீரன் உடனே திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் மாதேவி தான் கர்ப்பமாக இருப்பதை ஊர் முழுக்க சொல்வேன் என கூறுகிறார். குழப்பத்தில் இருக்கும் வீரன் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுவதோடு, தனது சமூகத்தை சேர்ந்த நண்பர்களிடம் உதவி கேட்கிறார். ஆனால், அவர்கள் நண்பனுக்கு உதவுதல் விட்டுவிட்டு தங்கள் சமூகத்திற்கு ஏற்பட்ட இழுக்காக நினைத்து சாதி வெறி பிடித்தவர்கள், நண்பனின் காதலியை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். வீரன் – மாதேவி காதல் சமூகத் தடைகளைத் தாண்டி வாழுமா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை இயக்கி, தயாரித்து, இசையமைத்திருப்பதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் லோக பத்மநாபன் மற்றும் காதலி மாதேவியாக நடித்திருக்கும் அம்ச ரேகா இருவரும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி நேர்த்தியான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜெய்பீம் மொசக்குட்டி, மணிமாறன், ரெஜினா உட்பட அனைத்து துணை கதாபாத்திரங்கள் கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே.ராஜ சேகர் நேர்த்தியாகப் படம் பிடிக்கிறார்.
லோக பத்மநாபன் இசையில், அரவிந்த், லோக பத்மநாபன், வா.கருப்பன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் இனிமை.
ஏ.டி.ராம் பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பாளர் ராஜேந்திர சோழனின் எடிட்டிங் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
சாதி பாகுபாடு மற்றும் ஆணவக் கொலைகள் பற்றி பேசும் பல படங்கள் வரிசையில் இருந்தாலும் திரைக்கதையில் எதிர்பாராத கிளைமாக்ஸ் அமைத்து இயக்கி உள்ளார்.
மொத்தத்தில் 8 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள செம்பியன் மாதேவி சாதி வெறியால் விளைந்த இழப்புக்களை வாழ்க்கைக்கு நெருக்கமாகக் காட்டுகிறது.