சீதா ராமம் திரை விமர்சனம்: சீதா ராமம் ஒரு தூய காதலுடன் இணைந்த இனிமையான பயண தேடல் | ரேட்டிங்: 4/5
வைஜெந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா சார்பில் அஸ்வினி தத் -ஸ்வப்னா தத் தயாரிப்பில் சீதாராமம் படத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ரஷ்மிகா மந்தானா, வெண்ணிலா கிஷோர், சுமந்த், பிரகாஷ்ராஜ்,சச்சின் கடேகர்,பூமிகா சாவ்லா, ரோகிணி, ராகுல் ரவீந்திரன்,கௌதம் வாசுதேவ மேனன்,தருண் பாஸ்கர்,சுனில், முரளி ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹனு ராகவபுடி. ஒளிப்பதிவு : பி எஸ் வினோத் – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை : விஷால் சந்திரசேகர், பாடல்கள்-மதன் கார்க்கி, படத்தொகுப்பு-கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ், மக்கள் தொடர்பு : யுவராஜ்.
கதை இரண்டு இணையான காலகட்டங்களில் நடைபெறுகிறது. 1985 இல், லண்டனில் படிக்கும் பாகிஸ்தான் மாணவியான அப்ரின் (ரஷ்மிகா மந்தனா) இந்தியாவை விரும்புவதில்லை. மற்றவர்களிடம் மன்னிப்பு கூட சொல்ல விரும்பாத திமிர் பிடித்தவர். ஆனால் ஒரு வழக்கில் அவருக்கு அவசரமாக பத்து லட்சம் தேவைப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது தாத்தா, பாகிஸ்தான் ராணுவ அதிகாரி பரிக் (சச்சின் கேத்கர்) வீட்டிற்கு பணத்திற்காக செல்கிறார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட, சொத்துக்காக வழக்கறிஞரைச் சந்தித்தபோது தாத்தா கடைசியாக எழுதிய கடிதத்தைப் படிக்கிறார். அதில், 1965ல்,பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ராம் கடைசியாக தன்னிடம் கொடுத்துள்ள 1965 தேதியிட்ட கடிதத்தை சீதா மகாலட்சுமியிடம் கொண்டு சேர்க்கவேண்டும், அப்போது தான் தன் சொத்துக்கள் அவளுக்கு கிடைக்கும் என்று கடிதத்த்pல் குறிப்பிடுகிறார். இந்தியாவுக்கு எதிரான கொள்கையில் இருக்கும் ராஷ்மிகா, பாகிஸ்தானில் இருந்து சீதாவை தேடி இந்தியா வருகிறார். முகவரியே இல்லாத சீதாவின் தேடல் பின்னடைவை சந்திக்க, ராமை தேடுகிறார். அங்கு தொடங்கும் சுவாரஸ்யம் விரிந்துக்கொண்டே செல்கிறது.
அதில் 1965ல், இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ராமுக்கு (துல்கர் சல்மான்), சீதா மகாலட்சுமி (மிருணாள் தாக்கூர்) ராமின் மனைவி சீதா என்ற பெயரில், முகவரி இல்லாத காதல் கடிதங்கள் வருகின்றன. தன்னை ராமின் மனைவி என்று சொல்லிக்கொள்ளும், அந்த முகவரி இல்லாத கடிதத்தின் விலாசத்தை தேடி கண்டுபிடிக்கிறார் ராம். இந்நிலையில், பயங்கரவாதியைக் கொல்வதற்காக, நாட்டின் எல்லை தாண்டுகிறார் ராம். பயங்கரவாதியைக் கொல்கிறார் அதே நேரத்தில் அங்கு ஒரு குழந்தையை காப்பாற்ற போக பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டிக் கொள்கிறார். ஆதன் பின் நடந்தது என்ன? அவர் நாடு திரும்பினாரா? சீதா மகாலட்சுமி யார்? என்பது பிளாஷ்பேக்கில் விரிய, காதல் மனைவிக்காக 20 ஆண்டுகளுக்கு முன் ராம் எழுதிய கடிதத்தை கொடுக்க வரும் அஃப்ரீத் யார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் க்ளைமாக்ஸ் வரை ஒவ்வொன்றாக சுவாரஸ்யமாக சொல்கிறது ‘சீதா ராமம்’.
காதல் கதைகள் துல்கர் சல்மானின் பலம். ரொமான்டிக் ஹீரோ கதாபாத்திரத்தில் தன்னை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் துல்கர். மனிதாபிமானம் உள்ள ராணுவ வீரராகவும், முன்பின் தெரியாத காதலி சீதாவை நினைத்து ஏங்குவதிலும், அவரை கண்டதும் பொங்கும் காதலை புன்னகையில் சிந்துவதும், வருவதாக சொல்லிச் சென்று வராமல்போன சீதாவுக்காக சோகம் நிறைந்து சுழல்வதுமாக ராமாகவே மாறியிருக்கிறார் துல்கர். துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளம் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள பன்முகத்தன்மையும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுக்கும் திறமையும் அவருக்கு நாடு முழுவதும் ரசிகர்களைப் பெற்றுத் தந்துள்ளது.
துல்கரின் காதலியாக மிருணாள் தாக்குர். இருவருக்குமான கெமிஸ்ட்ரி கச்சிதம். பாகிஸ்தானை சேர்ந்த அஃப்ரீத்தாவாகக ராஷ்மிகா. வித்தியாசமான கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக்கி இருக்கிறார். மேஜர் செல்வனாக கவுதம் வாசுதேவ் மேனன், பிரிகேடியர் விஷ்ணுவாக சுமந்த், ராஷ்மிகாவின் தாத்தாவாக சச்சின் கடேகர், பாலாஜியாக தருண் பாஸ்கர், நாடக நண்பர் வெண்ணிலா கிஷோர் என அனைவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர்.
விஷால் சந்திரசேகரின் பாடல்களும் இசையும் படத்துக்கு இன்னும் ப்ளஸ். மேலும் பின்னணி இசை கதையோடு காட்சிகளை கைபிடித்து வேறு லெவலுக்கு கொண்டு செல்கிறது.
பி.எஸ்.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஒவ்வொரு பிரேமையும் அழகாக்குகிறது. குறிப்பாக காஷ்மீர் பின்னணியில் வரும் காட்சிகள் அதே ஜில்லோடு நம் கண்களுக்கு விருந்து.
ஓர் இனிமையான காதல் கதையை, ராணுவப் பின்னணியில் சுகமாக செதுக்கியுள்ளார் இயக்குநர் ஹனு ராகவபுடி. முதலில் சீதைக்காக ராமரின் பயணம், பிறகு ராமனுக்காக சீதையின் பயணம் என இரண்டு பாகங்களாக இந்தப் படத்தின் கதை சொல்லப்பட்டுள்ளது. இவற்றை பாகிஸ்தானின் அஃப்ரினுடன் இணைத்து, ஆச்சரியமான திருப்பங்கள் கொண்ட திரைக்கதையில் மேஜிக் செய்திருக்கிறார் ஹனு. குறிப்பாக ராமர் சீதையைத் தேடிச் செல்லும் காட்சிகள் அற்புதம். குறிப்பாக கதாநாயகி அறிமுக காட்சியை படத்தின் ஹைலைட் என்று சொல்லலாம். படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி உணர்வுப்பூர்வமானது. இரண்டாம் பாதியில் ஹனுவின் கவனம் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. கிளைமாக்ஸில் வரும் இரண்டு திருப்பங்களையும் இயக்குனர் ஹனு ராகவபுடி கையாண்ட விதம் நன்றாக உள்ளது.
மொத்தத்தில் துல்கர் சல்மான் வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் சார்பில் அஸ்வினி தத் -ஸ்வப்னா தத் தயாரித்துள்ள சீதா ராமம் ஒரு தூய காதலுடன் இணைந்த இனிமையான பயண தேடல்.