சீசா சினிமா விமர்சனம் : சீசா விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் | ரேட்டிங்: 3/5

0
418

சீசா சினிமா விமர்சனம் : சீசா விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் | ரேட்டிங்: 3/5

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் டாக்டர்.கே.செந்தில் வேலன் எழுத அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.
நடிகர்கள் :
நடராஜன் சுப்ரமணியம் – முகிலன்
நிஷாந்த் ரூசோ – ஆதவன்
பாடினி குமார் – மாளவிகா
நிழல்கள் ரவி – கமிஷனர்
ஜீவா ரவி – கிருஷ்ணமூர்த்தி
மாஸ்டர் ராஜநாயகம் – ஆதவன் வீட்டு வேலையாள்
மூர்த்தி – ஆதவன் நண்பர்
ஆதேஷ் பாலா – சப் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன்
இயக்குநர் அரவிந்தராஜ் – மாளவிக்காவின் தந்தை
டாக்டர். கே.செந்தில்வேலன் – டாக்டர். கே.செந்தில்வேலன்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இசை : சரண் குமார்
ஒளிப்பதிவு : பெருமாள் மற்றும் மணிவண்ணன்
படத்தொகுப்பு : வில்சி ஜெ.சசி
பத்திரிக்கை தொடர்பு : கார்த்திக்.

தொழிலதிபரான ஆதவன் (நிஷாந்த் ரூசோ) தனது கல்லூரி தோழியை மாளவிகாவை (பாடினி குமார்) காதலித்து திருமணம் செய்து பங்களா வீட்டில் வசித்து வருகிறார்கள். அவரது பால்ய நண்பன் மூர்த்தி மருத்துவ மனையில் எம்பால்மராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆதவன், தனது தந்தையின் மறைவைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி பைபோல் டிசாடர் என்ற நோயால் அவதிப்பட்டு பித்து பிடித்தவன் போல் இருந்து வருகிறார். பல நேரங்களில் மனைவியிடம் தன்னை சுற்றி இருப்பவர்களிடம் ஆவேசமாக கத்தி நிதானத்தை  இழந்து வெறி பிடித்தவராக இருப்பார். விடியல் மருத்துவமனையில் டாக்டர். கே.செந்தில்வேலன் தலைமையில் ஆதவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரு நாள் வீட்டில் வேலைகாரர் (மாஸ்டர் ராஜநாயகம்) கொலையுண்டு கிடக்க, ஆதவன் மற்றும் மாளவிகா இருவரும் காணாமல் போகிறார்கள். தொழிலதிபர் ஆதவன் வீட்டில் வேலைக்காரன் கொலை செய்யப்பட்டதை செட்டிபாளையம் காவல் நிலையத்தின் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகிலன் (நட்டி) விசாரிக்க தொடங்குகிறார். அவருக்கு பக்கபலமாக சப் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் (ஆதேஷ் பாலா) செயல்படுகிறார். பல கோணங்களில் விசாரணை தொடர்கிறார். ஆதவனின் பால்ய நண்பன் மூர்த்தியையும் விசாரிக்கும் போது அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாது என கூறுகிறார். தீவிரமாக விசாரித்து விட்டு மூர்த்தியை எச்சரித்து அனுப்பி வைக்கிறார். இந்நிலையில், ஒருநாள் காணாமல் போன ஆதவன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் மூர்த்தியை தேடி மூர்த்தியின் வீட்டிற்கு வந்து செல்கிறார். போலீஸ் நிலையத்திலிருந்து வீடு திரும்பும் மூர்த்தி  விஷயம் அறிந்து ஆதவனை தேடி செல்கிறார். வழியில் பித்து பிடித்து வெறியுடன் காணப்பட்ட ஆதவனை சந்திக்கும் போது, அவன் மூர்த்தியை பார்த்து ஏன் என் மாளவிகாவை கொன்றாய் என்று கேட்டு சண்டை போட்டு அவனை தாக்குகிறான். மூர்த்தி எதிர் தாக்குதல் செய்யாமல் தான் அவளை கொல்ல வில்லை என்று சமாதானம் செய்ய முயல்கிறான். பிறகு ஆதவன் தன் வீட்டிற்கு செல்கிறான். அங்கு வீட்டிற்கு காவல் இருக்கும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்குகிறான் ஆதவன். தகவல் அறிந்து அங்கு இன்ஸ்பெக்டர் முகிலன் வருகிறார். தன் நண்பனை தேடி மூர்த்தியும் அங்கு வருகிறார். அங்கு இன்ஸ்பெக்டர் முகிலன் கண்டதும் அதிர்ச்சி  அடையும் மூர்த்தியை கைது செய்து அவர்களுடன் ஆதவனையையும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கின்றனர். இன்ஸ்பெக்டர் முகிலன் விடியல் மருத்துவமனையைத் தொடர்புகொண்டு, டாக்டர் செந்தில்வேலனிடம் ஆதவனைப் பற்றி சொல்கிறார், அவர் அதைப் பற்றிச் சொல்லும்போது, ஆதவன் வெறித்தனமாக  காவல் நிலையத்தில் போலீஸைத் தாக்குகிறார். இதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் முகிலன், ஆதவனை லாக்கப்பில் வைக்கிறார். அதன்பிறகு மூர்த்தியிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. இன்ஸ்பெக்டர் நிதானமாக யோசித்து, மீண்டும் மர்மம் சூழ்ந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயலும்போது கதை சூடுபிடிக்கிறது. மாளவிகாவுக்கு என்ன ஆனது? உண்மையான குற்றவாளி யார்? ஆதவன் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் நட்டி நட்ராஜ், கவனிக்கத் தக்க வகையில் நிதானமான, அமைதியான போலீஸாக, அவரது கரடுமுரடான குரல், தீவிரமான பார்வையும், விசாரணையில் அதிரடி காட்டி விசாரிக்கும் ஸ்டைலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகிலன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருத்தியுள்ளார்.

ஒரே கேரக்டரில் இரு வேறு அம்சங்களைக் காட்டி கதையில் முக்கியத்துவம் வாய்ந்த ஆதவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிஷாந்த் ரூசோ, இருமுனைக் கோளாறால் பாதிக்கப்பட்டு உச்சத்தின் விளிம்பில் தத்தளிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில்  மிரட்டி இருக்கிறார்.

கதையில் முக்கியத்துவம் கொண்ட மாளவிக்கா கதாபாத்திரத்தில் பாடினி குமார் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகிலனுடன் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் கதாபாத்திரத்தில் ஆதேஷ் பாலா நிறைவான நடிப்பு தந்துள்ளார்.

ஆதவனின் நண்பராக மூர்த்தி, போலீஸ, கொலை செய்யப்பட்ட வீட்டு வேலைக்காரராக மாஸ்டர் ராஜநாயகன், மாளவிக்காவின் தந்தையாக இயக்குனர் அரவிந்தராஜ், கமிஷனராக நிழல்கள் ரவி, ஆதவனின் றவுக்கரர் கிருஷ்ணமூர்த்தியாக ஜீவா ரவி, விடியல் மருத்துவமனை மருத்துவராக டாக்டர். கே.செந்தில்வேலன் உட்பட அனைத்து நடிகர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

இசை சரண் குமார், ஒளிப்பதிவு பெருமாள் மற்றும் மணிவண்ணன், படத்தொகுப்பு வில்சி ஜெ.சசி உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் சமூகத்தில் இளைஞர்களை சீரழிக்கும் விஷயங்கள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதையை தொய்வில்லாமல் நகர பெரும் பங்கு வகித்துள்ளனர்.

தற்போது நாட்டில் நிலவும் பெரும் பிரச்சனைகளின் பின்னனியில், காதல், கொலை, மனநோய், எம்பாமிங், ஆன்லைன் சூதாட்டம், குறிப்பாக சூதாட்டத்திற்கு அடிமையாகி அதிலிருந்து வெளிவர முடியாமல் ஒருவிதமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக மாறும் அவர்கள் மிக ஆபத்தானவர்கள் என்பதை தெளிவாக சொல்லியுள்ளார். திரைக்கதையில் எம்பாமிங் என்றால் என்ன என்பதை தெளிவாக விளக்கி, மருத்துவம் சார்ந்த பைபோலார் டிஸ்ஆர்டர் போன்ற பல விஷயங்களை மிக சரியாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் குணா சுப்பிரமணியம்.

மொத்தத்தில் விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் சீசா விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர்.